ஜனநாயகத்தைப் பாதிக்கும் நீதித் துறை!

இஸ்ரேலின் ஜனநாயகத்துக்கு வேதனை தரும் விஷயம் ஒன்றை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் செயல்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸ்ஸெட் கொண்டுவந்த சட்டத்தை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறது நீதிமன்றம்.

சமீபத்தில் இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 2,000 ஆப்பிரிக்கர்கள், டெல் அவிவின் தெற்குப் பகுதியில் சுதந்திரமாக உலவப்போகிறார்கள். ஏற்கெனவே, அந்தப் பகுதியின் தெருக்கள் ஆப்பிரிக்கக் குற்றவாளிகளின் புகலிடமாகவும் இஸ்ரேலியர்களுக்குத் தொந்தரவு தரும் இடமாகவும் மாறியிருக்கிறது.

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கர்களுக்குப் பெரிய பாதிப்புகள் இருக்காது என்பதுதான் இன்னும் மோசமான தகவல். இது மிக முக்கியமான சேதி! இஸ்ரேல் - எகிப்து எல்லையில் எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை இனி எவர் வேண்டுமானாலும் தாண்டி வரலாம். (ஏற்கெனவே, இதை காஸா மக்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்).

இதில் பட்டவர்த்தனமாகத் தெரியவந்திருக்கும் முக்கியமான இன்னொரு விஷயமும் இருக்கிறது. இஸ்ரேலின் வெவ்வேறு அரசு அமைப்புகள் தங்களது தனித்த சுதந்திரம் மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாகி, ஓர் அமைப்பு மற்ற அமைப்பை ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

தனது உத்தரவின் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் உயர் நீதிமன்றம், மிச்சம் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்திருக்கிறது. நீதித் துறையின் இந்தத் தலையீடு, இஸ்ரேல் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கிறது என்பதும் முக்கியமான விஷயம்.

இதுவரை, இஸ்ரேல் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சட்டங்களை உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. நாடாளுமன்றம் என்பது நேரடியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன் மக்களின் எண்ணத்தை நேரடியாகப் பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு.

ஆனால், நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தவிர, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் வெளிப்படையானது அல்ல. அமெரிக்காவின் நீதித் துறை விமர்சகர்களில் ஒருவரான ராபர்ட் பார்க் இவ்வாறு குறிப்பிடுகிறார், “உலகிலேயே ஜனநாயக அமைப்பைச் சிதைக்கும் நீதி அமைப்பு கொண்ட நாடு இஸ்ரேல்தான். நீதித் துறை ஏகாதிபத்தியம் என்பதற்கு ஒரு அளவுகோலையே இஸ்ரேல் நிறுவியிருக்கிறது.”

தி ஜெருசலம் போஸ்ட் - இஸ்ரேல் நாளிதழ் தலையங்கம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE