ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டதால் சிட்டிங் எம்.பி. அன்வர் ராஜா எரிச்சலைடயக்கூடும். ஏன் கட்சியைவிட்டே விலகக்கூடும் என சலசலக்கப்பட்ட நிலையில், அவரோ தொகுதியில் பழைய நண்பர் நயினார் நாகேந்திரனுக்காக பரபரப்பாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறாராம்.
ரகசியம் என்னவென்று விசாரித்தால் சாதியும் மதமும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர இருவருக்குமான அதிமுக பின்னணியும் நட்பும் காரணம் எனக் கூறப்படுகிறது.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் நயினார் திருநெல்வேலியில் வெற்றி பெற்றபோது, அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்தபோது தொழில்துறை அமைச்சராகவும், மின்துறை அமைச்சராகவும் இருந்தார்.
அப்போதைய எம்எல்ஏ.க்கள் என்ற முறையில் அன்வர் ராஜா - நயினார் நாகேந்திரன் இடையேயான பழைய நட்பு நீடிக்கிறதாம். இதனாலேயே தொகுதியில் நயினார் நாகேந்திரனுக்காக அன்வர் ராஜா உற்சாகமாகப் பிரச்சாரம் செய்கிறாராம்.
அண்மையில், நயினார் நாகேந்திரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ராமநாதபுரம் வந்து சென்றார். அதற்கு முந்தைய நாள் அதிமுக, பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அன்வர் ராஜா, "நான் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு முன்னதாக தேவராகத்தான் இருந்தேன். நாங்கள் ஒன்றும் நேரடியாக கைபர் - போலன் கணவாயில் இருந்து வந்துவிடவில்லை. இங்குள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள்தானே... எனது ஆரம்பநிலைக்குச் செல்வதில் எனக்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால், விமர்சனங்களுக்காக அஞ்சுகிறேன்" எனப் பேசியுள்ளார்.
அன்வர் ராஜாவின் இந்த வெளிப்படையான பேச்சு, கூட்டத்திலிருந்த அதிமுக, பாஜக பிரமுகர்களை ஆச்சர்யப்படுத்தியதாம்.
அதன் பின்னரே இன்றுவரை தொகுதிக்குள் நயினார் நாகேந்திரனுக்காக சற்றும் உற்சாகம் குறையாமல் பிரச்சாரம் செய்துவருகின்றனராம் அதிமுக தொண்டர்கள்.
அதுமட்டுமல்லாமல், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாதி வாக்குகள் கணிசமாக இருப்பதால், தனது சாதி அடையாளத்தைக் கட்சி நிர்வாகிகளிடம் சொல்லியே அவர்களை உற்சாகமாகக் களப்பணியாற்ற வைக்கிறாராம் அன்வர் ராஜா.
அதேபோல், நயினார் நாகேந்திரனும் பெரும்பாலும் அதிமுக கிளை, வட்ட, மாவட்டச் செயலாளர்களையே தனது களப்பணிக்குப் பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறார் என்கிறது களத்தகவல்.
ராமநாதபுரத்தில் அதிமுகவுக்கே அதிக வாய்ஸ் என்பதாலும், பாஜகவுக்கு அங்கு நிர்வாகிகள் பற்றாக்குறை இருப்பதாலும், இப்போதைக்கு தாய்க்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையே நயினார் நாகேந்திரன் முழுமையாக நம்பியிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான் இன்று (திங்கள்கிழமை) ராமநாதபுரம் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடனை ஆகிய பகுதிகளில் துணை முதல்வர் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
மீண்டும் சின்னத்தை மாற்றிய பிரேமலதா:
இதற்கிடையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாயல்குடியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, "நயினார் நாகேந்திரனுக்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். மன்னிக்கவும், பழைய நினைவில் சொல்லிவிட்டேன். அவர் அதிமுகவில் இருந்தவர் அல்லவா? அந்த நினைவு. இப்போது நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருக்கிறார். அவருக்காகத் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்" என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
9 days ago
மற்றவை
17 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago