போடுங்கம்மா ஓட்டு’; அந்தக் கால தேர்தல் ஞாபகங்கள்!

By செய்திப்பிரிவு

ஜெமினி தனா

  அந்தக் காலங்களில்,  தேர்தலே கூட, திருவிழாக்கள்தான்.  ஆட்டோக்களில் குழாய் ஸ்பீக்கர், மைக் செட்டுகளின் ஒலி, காது ஜவ்வில் அதிர்வை ஏற்படுத்தும். ’போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தைப் பார்த்து..’ என்று வேட்பாளர்களது சின்னத்தைக்  சொன்னபடி,  பட்டிதொட்டியெல்லாம் செவிப்பறையைக் கிழித்து வீதிக்குவீதி அசைந்து வரும் ஆட்டோக்களும்... மாட்டு வண்டிகளும் ஓட்டு கேட்க வரும் கூட்டங்களும் அலப்பறை செய் தாலும் மக்களிடம் ஒருவித மகிழ்ச்சியையே உண்டுபண்ணியது.

   சினிமா கொட்டகையில் புதுப்படம் ஒளிபரப்பும் காட்சிகளுக்கான  நோட்டீஸ்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் சிறுவர் கூட்டம் ஆட்டோக்களில் வேட்பாளர்களது படம் போட்ட  தேர்தல் நோட்டீஸ்களை   ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்குவதற்கு ஓடிவருவார்கள். கட்சிக்கொடி ஏந்தி  ’இந்தப்  படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று உரக்க முழக்கமிட்டு நண்டு சிண்டுகள் கூட தேர்தல் பிரச்சார பீரங்கிகளாவார்கள்.

   இன்றைக்கு, வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் நெருங்கிய பந்தம் இல்லை. ஆனால் அன்றைக்கு, அந்தத் தொகுதியிலுள்ள உள்ள மக்களுக்கு பிரபலமானவராக நல்ல மனிதராக  அறிமுகம் இருந்தது. இவர்கள்தான் பெரும்பாலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். வேட்பாளர்களோ.. தலைவர்களோ வரும் போது இடைத்தரகர்களின் இடையூறுகள் இல்லாமல் மக்களோடு மக்களாகவே நெருங்கினார்கள்.

    “என்ன அப்பத்தா உன் பேராண்டி நிக்கிறேன். மறக்காம ஓட்டுப் போடு..” என்று வாயெல்லாம் பல்லாக்கி  கேட்கும் வேட்பாளர்களை மனதில் கள்ளமில்லாமல் வெளுத்துவிடுவார் அப்புத்தா. ”போன முறையே  தண்ணீர் பஞ்சம்..  அதுக்கு குழாய் போட்டுக் கொடுத்தே. நல்லதுதான். பாதை சரியில்லே.. புள்ளத்தாச்சி பொண்ணுங்களுக்கு மருத்துவவசதி இல்லேன்னு எவ்ளோ சொன்னோம்.. எல்லாம் செய்றேன்னு தலையை ஆட்டிட்டு செய்யலியே” என்று சபை முன்னிலையிலேயே கோபத்தை வெளிப்படுத்துவார். ”இந்த முறை பண்ணிடறேன் அப்பத்தா” என்று  கோவமே இல்லாமல் சமாதானப்படுத்துவார் வேட்பாளர். இப்படி ஊரில் இருக்கும் அத்தனை பேரும் மாமா, மச்சினன், சித்தப்பா, அத்தை என்று உறவுமுறை சொல்லி ஓட்டுக் கேட்கும் வேட்பாளர்களுக்கு மக்களிடம் இருந்து கோரிக்கைகளும் ஒன்றாகவே இருக்கும்.

   அதேபோல் இன்னொரு விஷயம்... கதர் என்றால் காங்கிரஸ்காரர்கள். திராவிடம் என்றால் அண்ணா என்று பதியவைத்திருந்தார்கள். தொகுதி  வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் கட்சியின் தலைவர்களாகவே பார்த்தார்கள். கட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அக்கட்சியிலும் தங்கள் இனத்தவர் வேட்பாளராக இருந்தால் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது என்று முடிவெடுத்து ஓட்டுப்போடுவார்கள்.

 சில கிராமங்களில் ஊர் நாட்டாண்மை, பெருந்தனக்காரர்கள் சொல்பவர்களுக்குத்தான் ஓட்டு என்று கூட ஊர் நன்மைக்காக முடிவெடுப்பார்கள். ஓட்டுக்கு சிபாரிசு என்பதே கிடையாது என்னும் போது ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பதெல்லாம் செய்யக்கூடாத… பேசவே கூடாத பாவம் என்றே கருதினார்கள்.

      இந்தத்  தலைவருக்குத்தான் ஓட்டு என்பதை முடிவு செய்திருப்பார்கள். ஆனால் விருப்புவெறுப்பின்றி தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் அனைத்திலும்  யாருடைய வற்புறுத்தல் இன்றியும் மக்கள் கலந்து கொள்வார்கள். கட்சி பேதமின்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வரும்  எல்லா தலைவர்களின் மீதும் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். எதிர்க் கட்சிகளை விமர்சிப்பதிலும் அரசியல் நாகரிகம் கடைப்பிடித்தார்கள்.

 ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட இடத்திலுள்ள மைதானங்களை ராசியாகக் கருதிய காலமும் உண்டு. குழந்தை குட்டிகளோடு பெண் களும் ஆண்களும் சாரை சாரையாக பிரச்சாரம் நடக்கும் இடத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ஆஜராகி விடுவார்கள்.

   பெரியார்,அண்ணா, காமராஜர் போன்று மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர்களின் எளிமை, கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் விரும்புவதற்கும் கொண்டாடுவதற்கும் முக்கியக் காரணமாக இருந்தது. அண்ணாவின் பேச்சைக் கேட்க நாள் முழுவதும் காத்திருந்தார்கள். இரவு முழுவதும் அவர் பேசினாலும் பொறுமையுடன் கேட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளை தலைவர்களும் நிறைவேற்றினார்கள். 

 அண்ணாவுக்கு பிறகான காலகட்டங்களில்  எம்.ஜி,.ஆர், கலைஞர் பிரச்சாரக் கூட்டங்களிலும் மக்களுக்கு தேர்தல் மீதான மோகம் குறையாமல் இருக்க காரணம் கலைஞரின் பேச்சுத்திறமை. எம்ஜிஆரின் கவர்ச்சி என்று சொல்லலாம்.

 வாக்குகளைச் சேகரிக்க  நாள்தோறும் தலைவர்களும் வேட்பாளர்களும் பிரச்சாரத்துக்கு ஓடினால் தலைவர்களைப் பார்க்கவென்றே ஒரு கூட்டமும் ஓடிக் கொண்டிருந்தது. தேர்தல் அறிவிப்பு நாளிலிருந்து  ஓட்டு போடும் வரை கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் இவர்களுக்கு இடையே மக்களும் ஒருவித பரபரப்போடு இருந்தார்கள். அதன் பிறகு ஜெயிக்கிறவர்களுக்கு ஓட்டுப் போடுவோமே என்று முடிவுசெய்தவர்களும் உண்டு. ஓட்டுப் போடும் தினத்தில் காலையிலேயே 100 வயதைத் தாண்டியவர்களும் ஆர்வத்தோடு வரிசையை நிரப்பினார்கள்.

   இப்போதைய தேர்தலுக்கு இவ்வளவு விவரமெல்லாம் தேவையில்லை. சீரியஸ் வேட்பாளர்களை விட சிரிப்பூட்டும்  வேட்பாளர்களே அதிகம். புதிதாகக் கிளம்பும் அரசியல் எல்கேஜி கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் கட்சி சின்னங்களை கவனத்தில் கொள்வது பெரும்பாடாக இருக்கிறது. போதாக்குறைக்கு சிலகட்சிகள் வேட்பாளர்களை மாற்றிக்கொண்டே இருப்பதாலும் கட்சி வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் ஏழாம் பொருத்தமாகிப் போனது.  

இப்போது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே, கஞ்சத்தனமின்றி கட்சிகளால் அள்ளி வீசப்படுகிறது.  வாக்குறுதி என்னாச்சு என்று மக்கள் போராட்டம் செய்வதை விட வாழ்க்கை நடத்துவதே இங்கு பெரும் போராட்டமாக இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு அவையெல்லாம் சாதகமாகவே அமைந்துவிடுகிறது.

. அதுமட்டுமல்லாமல் இப்பொழுது சமூக வளைதளங்களில் லேட்டஸ்ட் அப்டேட் என்ற பெயரில் தேர்தல் காமெடிகள்தான் அதிகமாக வருகின்றன. மீம்ஸ்களை  க்ரியேட் செய்வதில் கூட சில கட்சிகள் நாங்களும் சளைத்தவர்களல்ல என்று  செயல்படுவது   சிரிப்பாக இருந்தாலும்  இன்றைய தேர்தலும், அரசியலும் எங்கே போகிறது என்று சிந்திக்கவும் வைக்கிறது.

 ’யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்தறீங்க?’ என்று தேர்தல் பிரச்சாரக் காலங்களில் காலி நாற்காலிகள் வேட்பாளர்களின் காலை வாருகின்றன. தேர்தல் காலங்கள் குடிமகன்களுக்கு கூத்தாடும் காலம்தான். தினக்கூலி போல் கையில் காசும், குவாட்டரும் பிரியாணி பொட்டலங்களும்தான் பெரும்பாலான கட்சிகளில் கூட்டங்களைத் தீர்மானிக்கின்றன.

  நவீன  காலத்தில் கட்சிகள் மக்களுக்கு இலவசங்கள், ஓட்டுக்குத் துட்டு  என்றாகிவிட்டன. நோட்டுகளுக்கு டோக்கன் கொடுக்கும் யுக்திகள் வந்துவிட்டன.

முன்பெல்லாம் ரேடியோக்களிலும் தினசரி நாளிதழ்களிலும் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை தெரிந்துகொள்ள ஒரு கூட்டமே இருக்கும். இப்போது கட்சிக்கும் மக்களுக்கும் இடையேயான இடைத்தரகர் வேலைகளை செய்தி சேனல்கள் நிரப்பிவிடுகிறது. பிரேக்கே இல்லாமல் ’தலைவர் எழுந்தார்’. ’தலைவர்  பிரச்சாரத்துக்கு காரில் புறப்பட்டார்’. ’மேடையை நோக்கி வருகிறார்’ என்று பிரேக்கிங் நியூஸ்-க்கு பஞ்சமில்லாமல் இவையெல்லாம் முக்கியச் செய்திகளாகிவிட்டன.  இப்போது தலைவர்கள் ஊடகங்கள் வாயிலாகத்தான் மக்களிடம் பேசுகிறார்கள். இதனால் மக்களுக்கும் கட்சிதலைவர்களுக்குமான இடைவெளி ரயில் தண்டவாளங்களைப் போல்  சேராமலே இணைந்திருக்கின்றன.

    ’இந்தக் கட்சி ஆண்டால் என்ன? அந்தக் கட்சி ஆண்டால் என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று மக்கள், திருவிழா மனநிலையில் இருந்து தேர்தலில் விலகியே நிற்கிறார்கள்.

‘தேர்தல் வரட்டும். போய் ஓட்டுப் போடுவோம் அவ்ளோதான் நாம செய்யமுடியும்’ என்பதுதான் ஒவ்வொரு குடிமகனின் சிந்தனையும்!

ஓட்டுப் போடுவது என்ன பெருமையா? அது நம் கடமை! வாக்களிப்போம். ஜனநாயக் கடமையாற்றுவோம்.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

3 days ago

மற்றவை

8 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

28 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்