இவர்கள் எதிர்காலத்தில் நிச்சயம் இயற்கையைப் பாதுகாப்பார்கள்- பள்ளிக் குழந்தைகளுக்கு சூழலியல் கல்வி போதிக்கும் அரும்புகள்

By குள.சண்முகசுந்தரம்

‘அரும்புகள்’ - குழந்தைகளுக்கு சூழலியல் கல்வியை போதிப்பதற்காக 1987-ல் நெல்லையில் தொடங்கப்பட்ட அமைப்பு. இப்போது, விலங்குகள், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், சரணாலய பறவைகளையும் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஒருங்கிணைத்து ‘பசுமை கிளப்’களை உருவாக்கி இருக்கிறது அரும்புகள் அமைப்பு. இந்த கிளப்பில் உள்ள மாணவர்கள் காடுகள், கடல்வாழ் அரிய வகை உயிரினங்கள், விலங்குகள், பறவைகளைப் பாதுகாப்பது குறித்து கிராமங்களில் பிரச்சாரம் செய்கின் றனர். அரும்புகளின் இன்னும் பிற செயல்பாடுகள் குறித்து நமக்கு விளக்குகிறார் அதன் இயக்குநர் லதா மதிவாணன்.

“1995-ல் களக்காடு முண்டந் துறை புலிகள் சரணாலய சூழல் மேம்பாட்டுத் திட்டத்தை வனத்துறை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தில் பணிபுரிய எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்த நேரத்தில் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து 210 கிராமங்களில் தீவிர பிரச்சாரம் செய்தோம். அந்த கிராமங்களில் எத்தனை பேர் காடுகளை நம்பி உள்ளனர், காடுகளால் அவர்களது ஒரு நாளைய வருமானம் என்பதுகுறித்தெல்லாம் கணக்கெடுத்தோம். இவர்களுக்கு கடன் உதவி செய்வதற்காக அனைத்துக் கிராமங்களிலும் வனக் குழுக்களை உருவாக்கினோம்.

வனக் குழுக்களுக்கு வனத் துறை மூன்று லட்சம் வரை நிதி கொடுக்கும். அதை அவர்கள் ஒருபைசா வட்டிக்கு குழுவில் உள்ளவர்களுக்கு கொடுப்பர். அந்த நிதியைக் கொண்டு இட்லிக் கடை, ஆடு வளர்ப்பு, டீக்கடை உள்ளிட்ட தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர். இப்போது முண்டந்துறை பகுதியில் யாருமே விறகு வெட்டவோ, வேட்டைக்கோ போவதில்லை. அந்த வனப்பகுதி எப்போதும் பசுமையாய் இருப்ப தற்கு நாங்கள் மேற்கொண்ட பிரச்சாரமும் ஒரு காரணம். இப்போது இங்கு புலிகள் எண்ணிக் கையும் பத்தாக உயர்ந்திருக்கிறது.

235 கிராமங்களில் எங்களது பணியைப் பார்த்து விட்டு, அடுத்ததாக இன்னொரு பணியையும் எங்களிடம் ஒப்படைத் தது வனத்துறை. அதை ஏற்று, திருச்செந்தூரிலிருந்து தனுஷ் கோடி வரை உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களைக் காப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகளை 235 கிராமங்களில் மேற்கொண்டோம். மீன் வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உண்ணுகின்றன. கடல் ஆமைகள் அழிந்தால் மீன்களுக்கு ஆபத்து. கடல் அட்டைகள்தான் கடலில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்கின்றன. இவை இல்லா விட்டாலும் மீன் பெருக்கம் இருக் காது.

இதையெல்லாம் மீனவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். எங்களது முயற்சியால், இப்போது மன்னார் வளைகுடா பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங் களை பிடிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. அடுத்த கட்டமாக கோடியக்கரை வெளிமான் சரணாலயத்திலும் வருவூர், உதயமார்த் தாண்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயங்களிலும் பொதுமக் களால் பறவைகளுக்கும் மான் களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சொன்னார்கள். இந்த மூன்று சரணாலயங்களையும் கடந்துதான் காவிரித் தண்ணீர் கடைமடைக்குப் போகிறது. பறவைகளின் எச்சம்தான் காவிரிப் பாசனப் பகுதிகளை வளப்படுத்துகிறது. இதையெல்லாம் அந்த மக்களுக்குஎடுத்துச் சொல்லி புரியவைத்து அவர்களின் மனநிலையையும் மாற்றி இருக்கிறோம்.

புற்றுநோயாளிகளுக்கு உதவி இதில்லாமல், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளை எங்கள் பராமரிப்பில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கான தனித் திறன் பயிற்சிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பீடித் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் புற்றுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு இருக்கிறார் கள். அவர்களை எல்லாம் கண்டுபிடித்து உரிய சிகிச்சைக்கு அனுப்புவதையும் அரும்புகள் தனது சேவையாகச் செய்து கொண்டிருக்கிறது.

இதெல்லாம் ஒருபக்கம் செய்து கொண்டே, பள்ளிக் குழந்தைகளை சூழலுக்கு உகந்த மனிதர்களாக உருவாக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம் இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் நிச்சயம் இயற்கையை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் லதா மதிவாணன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

10 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்