சம்பவங்களின் பதிவு பல்லாண்டுகளுக்குப் பிறகு வரலாறாக மாறுகிறது. தொன்மை, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள உதவுபவை வரலாற்றுப் பதிவுகள்தான். உண்மையில், தமிழர்களின் வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயிலில், அந்தக் கோயில் பற்றி மட்டுமின்றி, பல்வேறு தகவல்களும் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் சோழர் வரலாற்றை அறிந்துகொள்ள பெரிதும் உதவியாய் இருந்தன.
கல்வெட்டுகள் மட்டுமின்றி, பழங்காலப் பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவை மூலமாகவும் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மன்னர்களின் வீரம், அடையாளம், மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை புராதனப் பொருட்கள் மூலம் அறியலாம்.
உலகமே டிஜிட்டல் மயமாகியுள்ள சூழலில், கொஞ்சம் கொஞ்சமாய் அருகி வருகிறது தொன்மைப் பொருட்கள் சேகரிப்பு. இந்த நிலையில், பழங்கால நாணயங்களையும், அரிய பொருட்களையும் தேடிச் சேகரித்து வைத்துள்ளதுடன், வரலாற்றுக் குறிப்புகளை வருங்கால சந்ததிகள் அறியும் வகையில் எழுதிவைக்கிறார் சேலம் பாராமஹால் நாணயவியல் சங்கத்தின் இயக்குநர் ஜி.சுல்தான் (61).
பல்வேறு நாணயங்கள், பழங்காலப் பொருட்கள், அரிய தகவல்கள், ஆச்சரியமூட்டும் கதைகள், பண்டையகால ஆட்சியாளர்கள் பயன்படுத்திய தளவாடங்கள் என அவரது சேகரிப்புகள் பிரமிக்க வைக்கின்றன. காவிரி, கரூர் அமராவதி, வைகை, கொடுமணல் உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் மீட்ட நாணயங்கள், பல வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
நாணயங்களில் ஜல்லிக்கட்டு
"அண்மையில் நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளோம். தடைகளைத் தாண்டி ஜல்லிக்கட்டையும் நடத்தியுள்ளோம். ஆனால், பழங்காலம் தொட்டே ஜல்லிக்கட்டு இருந்துள்ளதை, நாணயங்களில் காணமுடிகிறது. தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றிய ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பான படங்கள், பண்டைய நாணயங்களில் இடம்பெற்றுள்ளன. காளை, காளையை அடக்கும் வீரர் படம் பொறித்த நாணயங்கள் பல உள்ளன.
13-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டம் தலைவாசல் சிவசங்கராபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததைத் தெளிவுபடுத்துகிறது ஒரு நாணயம். மதுரை மாவட்டம் கண்டமனூர் ஜமீன் வெளியிட்டுள்ள நாணயத்தில் ஏறுதழுவுதல் காட்சி இடம் பெற்றிருக்கிறது. 1783-ல் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயத்திலும் ஜல்லிக்கட்டு காளை இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களான கோனேரிராயன், புவனகராயன் மற்றும் நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள் தமிழ் எழுத்துகளை நாணயங்களில் அச்சேற்றி, தமிழின் தொன்மையை ஆவணப்படுத்தியுள்ளனர். பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்து, பின்னர் அழிந்துபோன நகரி எழுத்து, நாணயங்களில் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் 'யாழி' என்ற விலங்கு, தூணைத் தாங்கிப் பிடித்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். யாழியைப் போன்றே, ராட்சத தோற்றமுடைய பல பறவைகள் பண்டைக்காலத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், நாணயங்களில் உள்ளன.
பேரண்ட பறவை
அரசர்கள் காலத்து நாணயங்களில் பேரண்ட பறவை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தில், பேரண்டப் பறவை ஒட்டிப்பிறந்த தோற்றத்தில், இரண்டு உடல், இரண்டு தலை, இரண்டு கால், இரண்டு அலகுகளுடன், பெரிய யானையைக் கவ்விக் கொண்டு பறப்பது போன்ற உருவம் உள்ளது.
சேரர் கால நாணயங்களில், குதிரை, யானை, வாள், அம்பும், சோழர் நாணயங்களில் புலி, யானை, குதிரைகளும், பாண்டிய மன்னர்கள் காலத்து நாணயங்களில் காளை, மீன்களும் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சங்க கால பாண்டியரின் நாணயத்தில், வேலாட்ட கம்பும், யானையும் பொறிக்கப்பட்ட நாணயம் புழக்கத்தில் இருந்துள்ளது.
கொங்கு வீரர்களின் வாள்
கொங்கு மண்டலத்தில் காலாட்படை வீரர்கள் பயன்படுத்திய வாள், அவர்களது போர்த் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த வாள் 3.5 அடி உயரம் உள்ள நிலையில், இதைப் பயன்படுத்தும் வீரர்கள் 6 அடி உயரத்துக்குமேல் இருந்திருக்கலாம். ஒற்றர்களுக்கு மன்னர் அளித்த முத்திரை மோதிரம், தூதுவர்களுக்கு ரகசிய கடித பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தும் இலைசின்ன முத்திரைகள் உள்ளிட்டவை மூலம், மன்னர்களின் ராஜ தந்திர நடவடிக்கைகளை அறியலாம்.
அக்கால பெண்கள் அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல அணிகலன்களை அணிந்துள்ளனர். இவ்வாறு பழங்காலப் பொருட்கள் மூலம் நமது தொன்மையை மட்டுமின்றி, வரலாறு, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை அறியலாம்" என்றார்.
அந்தக் காலத்திலேயே பண மதிப்பு நீக்கம்?
"ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911-1936 வரை வெளியிடப்பட்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் படம் பொறிக்கப்பட்ட நாணயத்தில், அவரது பட்டயத்தில் யானை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உருவம், கூர்ம வடிவில், பன்றியைக் குறிப்பதுபோல இருந்துள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த நாணயத்தை செல்லாது என அரசு அறிவித்தது.
மொத்தம் அச்சடிக்கப்பட்ட 94 லட்சம் நாணயங்களில், ஏழு லட்சம் நாணயங்கள் மட்டும் மக்களிடம் புழக்கத்தில் விடப்பட்டது. மற்றவை புழக்கத்தில் விடப்படுவதற்கு முன்பே, அரசு தடை செய்துவிட்டது. அந்தக் காலத்திலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை இருந்திருக்கிறது" என்று வேடிக்கையாக கூறினார் சுல்தான்.
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
12 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
27 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago