மொழியைக் கடக்கும் எழுத்து! - எதிர்ப்பில் நகரும் எழுத்தாளர் `க.வை.’

By ஆர்.கிருஷ்ணகுமார்

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனக்கேயான ஒரு மொழி உண்டு. அது, நாம் பேசும் மொழியல்ல. படைப்பாளன் கண்டடைகிற மொழி. அப்படியான மொழியைக் கண்டடைவதே எழுத்து. ஆக, இலக்கியம் மொழியைக் கடந்தது என்கிறார் எழுத்தாளர் க.வை.பழனிசாமி(68).

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், குழந்தைகள் எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, தமிழ்ச் சங்க நிர்வாகி என்ற பலமுகங்கள் உண்டு. சேலத்தைச் சேர்ந்த இவர் தற்போது இருப்பதோ கோவை வடவள்ளி அருகேயுள்ள கல்வீரம்பாளையம்.

“சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி. அப்பா வையாபுரி, நூல் வியாபாரி. அம்மா பச்சியம்மாள். என்னோட சேர்த்து 8 குழந்தைங்க. நான்தான் கடைக்குட்டி. தினமும் ராத்திரியானா பாட்டி குட்டியம்மா கதை சொல்லுவாங்க. நளன் கதை, நல்லதங்காள் கதைனு ராகத்தோட சொல்லுவாங்க. கூட்டுக் குடும்பங்கறதால எங்க வீட்டில நிறைய குழந்தைங்க. ராத்திரி நேரம் நாங்க பாட்டிக்குப் பக்கத்துல படுத்துக்கிட்டு கதை கேட்போம்.

அப்ப பாட்டி சொன்ன கதை `அன்னதானப் பழம்` இன்னமும் காதுல ஒலிக்குது. இந்த மாதிரி நூத்துக்கணக்கான கதைங்க. எங்க பள்ளிக்கூடத்துக்கு ஒரு கரட்டைத் தாண்டிப் போகணும். வழியில், ஒரு ஐயனாரு சிலை. அதுமேல ஏறி உட்கார்த்துக்கிட்டு, பாட்டி சொன்ன கதையை, சக மாணவர்களுக்கு சொல்லுவேன். அதேசமயம், சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்து வீட்டுல இருக்கறவங்கனு எல்லாரையும் உன்னிப்பா கவனிப்பேன். பள்ளிப் படிப்பு முடிஞ்ச பின்னாடி, சென்னை மாநிலக் கல்லூரியில பி.எஸ்சி. விலங்கியல் படிச்சேன்.

பள்ளிக்கூடத்துல இருந்தே நிறைய வாசிப்பேன்.

மு.வ., அகிலன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்னு தேடித்தேடி படிச்சேன். மனிதர்கள்கிட்ட இருக்கற பொய்மை முகம் என்ன பாதிச்சது. இதை மையப்படுத்தி சின்ன சின்னதா கவிதை எழுதினேன். சேலம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஆட்டையாம்பட்டி.  1972-ல கல்லூரி முடிஞ்ச உடனேயே சேலம் கோட்டை பகுதியில இருக்கற பாரத ஸ்டேட் வங்கியில தற்காலிக அடிப்படையில எழுத்தர் பணியில சேர்ந்தேன். 

பணி நிரந்தரமான உடனேயே, வங்கி ஊழியர் தொழிற்சங்கத்துல சேர்ந்தேன். ஏறத்தாழ 27 ஆண்டுகள் வங்கி ஊழியர் சங்கத்தோட கிளைச் செயலராக பொறுப்பு வகித்தேன். அதேசமயம், சதுரங்க விளையாட்டு மேல கொண்ட ஆர்வம் காரணமாக, நிறைய சதுரங்கப் போட்டிகளை நடத்தியிருக்கேன். இதுல, விஸ்வநாதன் ஆனந்த் மாதிரியான பெரிய வீரர்கள் எல்லாம் விளையாடியிருக்காங்க.

வாசிப்புங்கற இடத்துல இருந்து, எழுத்தாளர்ங்கற இடத்துக்கு மாறணுமுன்னு நெனச்சேன். தொழிற்சங்கப் பிரச்சினைகளை கையாண்டுகொண்டிருந்ததால, தொழிலாளர்கள் தொடர்பான கவிதைகளை எழுதினேன். அதேசமயம், இலக்கியக் கூட்டங்கள்ல அதிகம் கலந்துகொண்டதால, சேலம் சி.மணி, அஃகு பரந்தாமன், தமிழ்நாடன்,  கவிஞர் மீரானு நிறைய இலக்கியவாதிகள் தொடர்பும் கிடச்சது. 1986-ல் முதல் கவிதைத் தொகுப்பான `பொற்கைப் பாண்டியன்` நூலை எழுதினேன். நூல் வெளியீட்டு விழாவுல சுஜாதா, மேத்தா, கவிஞர் மீரானு பெரிய ஆளுமைகள் கலந்துக்கிட்டாங்க. முதல் கவிதை நூல் மாதிரியே இல்லப்பா. ரொம்ப நல்லா இருக்குனு கவிஞர் மீரா பாராட்டினாரு.

கவிதை வடிவில் கதை

அடுத்து, பிறக்கும்போதே அநாதையாகப் பிறந்து, சமூகப் போராளியான ஒருவரோட கதைய, கவிதை வடிவுல எழுதினேன். தமிழ்ல கதையை கவிதை வடிவுல எழுதினது ஆரம்பத்துல சிற்பியும், நானும் தான். மார்க்சியவாதிகள் இந்தக் கதையை கொண்டாடினாங்க. `கவி` என்ற இந்த கதைக் கவிதையை தாமரை, தீக்கதிர் மாதிரியான இதழ்கள் பெரிய அளவுல சிலாகித்து எழுதினாங்க.

அடுத்து, குழந்தைகள் இடத்துல இருந்து, அவங்க பிரச்சினைகளைப் பேசும் கவிதை தொகுப்பான `பிஞ்சு விழிகளில்` வெளியானது. சமூக அக்கறை, மார்க்சிய தத்துவக் கவிதை, கதைகள் மட்டும்தான் க.வை. எழுதுவாருன்னு பேசினவங்களுக்கு பதில் சொல்லும் வகையில, வாழ்க்கையைக் கொண்டாடும் அழகியலை வெளிப்படுத்தும் `காதல்வெளி`ங்கற கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன்.

`காதல்வெளி`ங்கற சொல் புதிய சொல்னு முன்னுரையில் பாராட்டி எழுதினாரு கவிஞர் சிற்பி. மீண்டும் கதை கவிதை நூலான `வெண்மை ஒரு நிறமல்ல`ங்கற நூலை எழுதினேன். வாழ்க்கையோட சகல கூறுகளையும் சொல்லும் சுய வாழ்தல் தத்துவப் புத்தகம் இது. இந்தப் புத்தகம் ஆங்கிலத்துல மொழியாக்கம் செய்யப்பட்டது.

புதுமைப்பித்தனோட சிறு கதைகள் என்னைய பெரிதும் கவர்ந்தவை. அந்த தாக்கத்துல, `பாட்டியின் வீடு`ங்க பெயர்ல சிறுகதை எழுதி, `செம்மலர்` இதழுக்கு அனுப்பிவெச்சேன். அந்த மாத சிறந்த சிறுகதையா இதை தேர்வு செஞ்சாங்க. இந்த ஊக்கத்துல `இடமாற்றம்`ங்கற சிறுகதை தொகுப்பை எழுதினேன். மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன்னு நிறைய பேரு பாராட்டினாங்க.

சர்ச்சையை ஏற்படுத்திய நாவல்

ஆனாலும், எழுத்துல எனக்கு பெரிய போதாமை இருந்தது. மனித வாழ்க்கையை பிரபஞ்ச இருத்தலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் `மீண்டும் ஆதியாகி`ங்கற நாவலை எழுதினேன். அறிந்த உண்மையிலிருந்து விலகி, நாளையும் அறியமுடியாத உண்மையின் இடத்தில் இருந்து மனித வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்கச் செய்யும் இந்த நாவல்.

2000-ல் வெளியான இந்த நாவலை, கோவை ஞானி, பாலா, நீலபத்மநாபன், சேலம் சி.மணினு நிறைய பேர் பாராட்டினாலும், ஜெயமோகன், பிரபஞ்சன் போன்றவங்க கடுமையா விமர்சனம் செஞ்சாங்க. வெளியீட்டு விழாவுல பங்கேற்ற பிரபஞ்சன், இந்தப் புத்தகத்துல ஒரு பக்கத்தக்கூட படிக்க முடியலனு சொல்லி, புத்தகத்தை தூக்கிப் போட்டாரு.

ஆனா, `நாவல்ல ஒரு தீர்க்கதரிசிபோல பேசியிருக்கீங்கனு` பாராட்டி எழுதினாரு கோவை ஞானி.  முழு பிரபஞ்ச ரகசியங்களை பேசும், சில ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டிய புத்தகத்தை 200 பக்கங்களில் எழுத வேண்டியதால, இறுக்கமான எழுத்துநடையா இருந்தது. அதனால, ஆதரவு, எதிர்ப்புனு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நாவல். அண்மையில ஜோ டி குரூஸ் இந்த நூலைப் பாராட்டி, தன்னோட முகநூல்ல எழுதியிருந்தார்.

எல்லா மதங்களும் ஒரு உண்மையை முன்வைத்து, இதுதான்  இறுதியான உண்மைனு சொல்லுது. ஆனா, ஒரு உண்மை தான இருக்க முடியும். நானும் ஒரு உண்மையை செல்லறேன்னு எழுதிய புத்தகம் `வேறு வேதம்`.  இதுவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

அட்சய பாத்திரத்துல முதல் பிச்சை போட்டது ஆதிரை. அதுக்கப்புறம்தான் அதுல அள்ள அள்ள குறையாம உணவு வந்தது. அதுமாதிரி, இளைஞர்களுக்கான விஷயங்களை வழங்குற நாவல் `ஆதிரை`ய எழுதினேன். அதுக்கப்புறம் சில கவிதை தொகுப்புகளை வெளியிட்டேன்” என்றார் க.வை.பழனிசாமி.

குழந்தை இலக்கியம்

`கவிதை, தத்துவம், வாழ்க்கைப் போராட்டம்னு எழுதின நீங்க, திடீர்னு குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதியது ஏன்?` என்றோம். 1974-ல எனக்கு திருமணம். மனைவி ஞானசுந்தரி. மகள் கண்மணி. 1991-ல கண்மணிக்கு அப்பாவின் கதைகள்-ங்கற தலைப்புல, மத ஒற்றுமையை வலியுறுத்தும் `ஹனுமனும் கணேஷும்`ங்கற புத்தகத்தை எழுதினேன். பேத்தி பிறந்த பிறகு, குழந்தையிடம் இருந்த வெற்றிடம் என்னை பிரமிக்க வைத்தது. மீண்டும் கதை சொல்லியாக மாறினேன். கதைகளைப் படிக்க வைப்பதுடன், எப்படி கதை சொல்வது என்பதை புரியவைக்கும் முயற்சியாக `ஆதிரையின் கத சாமி` என்ற நூலை எழுதினேன்.

`இந்து தமிழ்` நாளிதழில் `கவிதை மீது ஒரு உரையாடல்` என்ற தலைப்பில் ந.பிச்சமூர்த்தி, தேவதச்சன் உள்ளிட்டோர் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளேன்” என்றார்.

2005-ல் பணி ஓய்வுபெற்ற பின்னர், சேலத்திலிருந்து கோவை க்கு குடிபெயர்ந்து வந்துவிட்ட க.வை.பழனிசாமி, தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகிறார். 2018-ல் `மேலும்` அறக்கட்டளை இவருக்கு, தமிழ் இலக்கிய விமர்சன வளர்ச்சியில் பங்களிப்புக்கான விருது வழங்கியது. ஆரம்பம் முதலே ஆதரவு, எதிர்ப்பு என்ற இருநிலையிலும் கவிஞராய், எழுத்தாளராய், விமர்சகராய் பரிணமிக்கிறார் க.வை. என்று நண்பர்களால் அழைக்கப்படும் க.வை.பழனிசாமி.

நவீன இலக்கியக் களமான சேலம் தமிழ்ச் சங்கம்

பொதுவாக தமிழ்ச் சங்கங்கள் கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடத்திய சூழலில், சேலம் தமிழ்ச் சங்கத்தை நவீன இலக்கியக் களமாக மாற்றியவர் க.வை.பழனிசாமி. 23 ஆண்டுகள் தமிழ்ச்சங்கச் செயலர், பொருளாளர, இலக்கியப் பணிக்குழுச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ள இவர், நவீன இலக்கியக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், புத்தக விமர்சனக் கூட்டங்கள் நடத்தியதுடன், பெரிய ஆளுமைகளுக்கு விருதுகளும் வழங்கியுள்ளார்.  காலச்சுவடு-டன் இணைந்து `அற்றைத் திங்கள்` என்ற இலக்கியக் கூட்டங்களையும் நடத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

12 days ago

மற்றவை

12 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

27 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்