பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் சர்க்கரைக்கு பதிலாக அச்சு வெல்லம் வழங்கி, நலிவடைந்து வரும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என பாரம்பரிய அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் திருநாளன்று அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றையே பயன்படுத்தி பொங்கல் சமைத்து படையலிட்டு வழிபட்டு வருவது தமிழர்களின் வழக்கமாக உள்ளது. பச்சரிசி, பசு நெய், முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றுடன் இனிப்புச் சுவைக்கு வெல்லத்தைப் பயன்படுத்தியே பொங்கல் சமைக்கப்படுகிறது. வெல்லம் பயன்படுத்திச் சமைக்கப்பட்டாலும், சர்க்கரைப் பொங்கல் என்றே அழைக்கப்படுகிறது.
கிராமங்களில் பெரும்பாலும் பொங்கல் என்றாலே அது இனிப்பு பொங்கல் மட்டும்தான் என்று இருந்த நிலையில், பொங்கல் பண்டிகையின்போது மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் வீடுகளில் வெண் பொங்கல் சமைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. உணவகங் களிலும் பொங்கல் என்றாலே வெண்பொங்கல் என்றாகிவிட்ட நிலையில், வேறுபடுத்திக் காட்டுவதற்காக சர்க்கரைப் பொங்கல் என குறிப்பிடப்பட்ட பெயர் அவ்வாறே நிலைத்துவிட்டது. எனினும், சர்க்கரைப் பொங்கல் என்றாலே இனிப்புக்காக அதில் சேர்ப்பது வெல்லம்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அச்சு வெல்லம் தயாரிப்பதில் தஞ்சாவூர் மாவட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது. தொடக்க காலத்தில் சர்க்கரை ஆலைகள் இல்லாதபோது, விவசாயிகள் கரும்பைப் பயிரிட்டு அறுவடை செய்து தங்களுடைய இல்லங்களிலேயே சாறாகப் பிழிந்து பாகு காய்ச்சி அச்சில் ஊற்றி வெல்லம் தயாரித்தனர்.
காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளின் வரவால், கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும் அச்சு வெல்லம் தயாரிப்பு முறை மட்டும் மாறவில்லை. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் அய்யம்பேட்டை, மாகாளிபுரம், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாக அச்சு வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் அச்சு வெல்லம் பெரும்பாலும் திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி வெல்ல மண்டியில்தான் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அச்சு வெல்லம் தயாரிப்பில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ள கணபதி அக்ரஹாரத் தைச் சேர்ந்த விவசாயி ஜி.சீனிவாசன் கூறியதாவது:
நாங்கள் எங்களது வயலில் கரும்பை பயிரிட்டு, அதைக்கொண்டு அச்சு வெல்லம் தயாரித்து வருகிறோம். இந்த வேலைக்காக எடப்பாடி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கி அச்சு வெல்லம் தயாரித்துக் கொடுக்கின்றனர்.
நாங்கள் பயிரிடும் கரும்பைப் பெற திருமண்டங்குடியில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகம் முன்வராததால் நாங்களே அச்சு வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இங்கிருந்து பழநி நெய்க்காரப்பட்டி சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம் ரூ.1,300 வரை விலை போனது. தற்போது ஒரு மூட்டை ரூ.900 வரையே விலை போகிறது. முன்பை விட தொழிலாளர்களுக்கான கூலியும் இரு மடங்காக அதிகரித்துள்ளது, ஆனால், கடந்த ஆண்டைவிட அதிக அளவில் உற்பத்தி நடைபெறுவதால் அச்சு வெல்லத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதைத் தடுக்க, தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் சர்க்கரை வழங்குவதற்குப் பதிலாக அச்சு வெல்லம் வழங்கினால் அச்சு வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் நலிவடைந்து வரும் அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழிலும் பாதுகாக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago