சீனாவில் அற்புதம் – காரணம் தெரியுமா..?

By குர்சரண் தாஸ்

கல்வியிலும், அரசு வேலைகளிலும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய அதே நாளில், எனக்கு ஒரு மெயில் வந்தது. அது இந்தியாவிலும் சீனாவிலும் திறமை எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது என்பது தொடர்பாக ஹார்வர்டு பல்கலை.யின் ஆய்வு முடிவு அது.

மாறுபட்ட அரசியல் நடைமுறையில் இருந்தாலும் உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான கலாச்சாரத்தைக் கொண்ட இரு நாடுகளும் திறமையை பயன்படுத்திக் கொள்வதில் ஒன்றையொன்று பார்த்து கற்றுக் கொள்ளலாம். பல நிறுவனங்களை நிர்வகித்தவன் என்ற முறையில் திறமை என்பது மிகவும் அரிதானது என்றும் சரியான இடத்தில் சரியான ஆள் பதவியில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்தவன் நான்.

அதனால்தான் திறமையானவர்களுக்கான வாய்ப்பை 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகக் குறைத்து, 10 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிறைவேற்றியபோது, மிகவும் வருத்தப்பட்டேன். அனைத்து ஜனநாயக நாடுகளிலும் திறமையை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் சமத்துவத்தையும் அமல் செய்ய வேண்டிய பிரச்சினை இருக்கிறது. இந்தியா குடியரசானபோது, காலம் காலமாக இருந்து வந்த சாதி பாகுபாட்டால், தலித் இன மக்களுக்கும் மலை சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட இந்த ஏற்பாடு, 70 ஆண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது. போட்டி அரசியல் காரணமாக, அடுத்தடுத்த வந்த அரசுகளால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, ஏறக்குறைய 50 சதவீத இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களின் சுய மரியாதையும் நிலைமையும் முன்னேறியிருப்பது உண்மைதான்.

ஆனால், பொருளாதார நிலைமை மாறவில்லை. அதற்குக் காரணம் வேலைவாய்ப்பை உருவாக்காத அழுகிப் போன கல்வி முறையும் உயர் தரமான வேலைகளை உருவாக்கத் தவறிய பொருளாதார நிலைமையும் தான் காரணம்.

சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து பிரமிக்கிறோம். ஆனால் அதற்குக் காரணமான திறமையைக் கொண்டாட மறுக்கிறோம். சீனாவில் ஆதிகாலம் தொட்டே அரசியல் நிர்வாகம் சிறப்பாகவே இருந்து வந்துள்ளது. பரம்பரை ஆட்சி கூடாது, நம்மை ஆள்பவர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என 2500 ஆண்டுகளுக்கு முன்பே சீன அறிஞர் கன்பியூசியஸ் கூறியிருக்கிறார். 10-ம் நூற்றாண்டு முதல் 1905-ம் ஆண்டு வரை போட்டித் தேர்வுகள் மூலமே சீன அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும். அரசு நிர்வாகத்துக்குத் தேவையான தகுதிகள் என்னென்ன, அவற்றை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். சிறந்த அரசியல் நிர்வாகம் சீனாவில் இருந்து மேற்கத்திய நாடுகள் வரை பரவி இருந்தது. இந்தியாவில் முதன்முறையாக இங்கிலாந்து அரசு தான் சிவில் சர்வீஸ் தேர்வு முறையைக் கொண்டு வந்தது.

சீனாவில் கடந்த 1978-ம் ஆண்டில் டெங் ஜியோபிங் மூலம்தான் அரசு நிர்வாகத்தில் திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என ‘சீனா முன்மாதிரி: சிறந்த அரசியல் நிர்வாகமும் ஜனநாயகத்தின் எல்லையும்’ என்ற நூலின் ஆசிரியர் டேனியல் பெல் கூறியிருக்கிறார்.

சீனாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் அங்கு ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்களை நாம் புறக்கணித்து விட்டோம். சிறந்த அரசியல் என்றாலே ஜனநாயகமும் மனித உரிமையையும்தான் என நாம் நினைக்கிறோம். கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த உயர் கல்வி மூலமும் உயர்ந்த பதவிகளில் திறமையானவர்களை அமர்த்தியதன் மூலமும் நாட்டின் நிர்வாகத்திறமை உயர்ந்துள்ளது என பெல் கூறுகிறார்.

திறமைக்கு அளித்த முன்னுரிமை காரணமாக செயல்பாடு அதிகரித்ததோடு, வறுமை ஒழிந்து நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் நாடாக சீனா மாறியது. ஊழல் ஆங்காங்கே இருந்தாலும் ஜனநாயகம் இல்லை என்றாலும் சிறந்த நிர்வாகம் காரணமாக சாதாரண குடிமகனுக்கும் செல்வம் சேர்கிறது.

இந்தியாவிலும் 1991-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் வறுமை ஒழிந்து, நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகரித்தது என்றாலும் சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். இந்தியா – சீனா இடையேயான முக்கிய வேறுபாடு திறமையும் அரசின் செயல்திறனும்தான் என்கிறது ஹார்வர்டு அறிக்கை.

எவ்வளவு குறைகள் இருந்தாலும் சீனாவின் நிர்வாக முறைக்கு இந்தியர்கள் மாற மாட்டார்கள். இருந்தாலும் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் சீனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், இன்றைய வாக்காளர்களுக்காக, எதிர்கால தலைமுறையின் நலனை பாதிக்கிறார்கள். இதற்காகவே பலவீனமானவர்களையே கல்வித் துறையிலும் சுகாதாரத் துறையிலும்  அமைச்சர்களாகவும் அதிகாரிகளாகவும் நியமிக்கிறார்கள். 

அரசு நிர்வாகத்தின் ஆரம்ப நிலையிலும் முழு பதவிக் காலத்திலும் திறமைக்கு சீனா அளித்து வரும் முக்கியத்துவத்தால், விடாமுயற்சியால், சாதாரண குடிமகனின் அன்றாட பிரச்சினைகளுக்கும் எப்படி விரைந்து தீர்வு கிடைக்கிறது என்பதை பெல் விளக்குகிறார்.

இந்தியா கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளன. அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதை அமல் செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன. திறமையை வளர்த்தெடுக்கும் நாட்டின் கடமையை தடுக்கும் இட ஒதுக்கீடு முறை தவறானது. ஜனநாயகத்தையும் அதோடு திறமையையும் இணைத்து, அனைத்து நிலைகளிலும் திறமையானவர்களே இருப்பதை உறுதி செய்ய வேண்டியதே 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடப்பட்ட சவால்.

ஊழல் இல்லாத, திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யும் மிகச் சிறந்த கல்வி காரணமாக இங்கிருக்கும் குறைந்த ஊதிய விகிதம் சர்வதேச வர்த்தகத்துக்கு சாதகமாக மாறும். ஒரே தலைமுறையில் ஊதிய விகிதமும் அதிகரிக்கும். தனியார் துறைகளில் அதிக சம்பளம் கிடைக்கும் பணியிடங்கள் அதிகரிக்கும்போது, இட ஒதுக்கீடு மீதான  கவர்ச்சி குறைந்து, நாட்டு மக்கள் அனைவருமே நடுத்தர மக்களாக உயர்வார்கள். இந்தியாவை மாற்ற இதுதான் வழி.

- gurcharandas@gmail.com | தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE