தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும்` என்பார்கள். இதை நிரூபித்துக் காட்டியுள்ளது இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எஃப்.). விவசாயத்துக்கு அடுத்தபடியான நிலையில் உள்ள ஜவுளித் துறையின் ஓர் அங்கமான நூற்பாலைகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும் கூட்டு முயற்சியால் தீர்வு கண்டுள்ளது இந்த அமைப்பு.
அதுமட்டுமின்றி, ஜவுளித் தொழில் துறையில் சர்வதேச அளவிலான போட்டிகளை எதிர்கொண்டு, இந்திய ஜவுளித் துறையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியிலும் முழுமையாய் ஈடுபட்டுள்ளது இவ்வமைப்பு.
வழக்கமாக, ஒரு சங்கம் அல்லது அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்றெல்லாம் நிர்வாகிகள் இருப்பார்கள். ஆனால், இந்த அமைப்புக்கு அப்படி யாரும் கிடையாது. இளைஞர்கள், ஜவுளித் துறையில் சாதித்தவர்கள், திறன் மிக்கவர்கள் என 32 நூற்பாலைகளின் நிர்வாக இயக்குனர்கள் , நிர்வாகக் குழு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்கிறார் ஐ.டி.எஃப். அமைப்பாளர் பிரபு தாமோதரன். இந்த அமைப்பு உருவாகக் காரணமானவரும் இவரே!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர், படித்ததெல்லாம் உடுமலை, பொள்ளாச்சியில்தான். 1991-ல் டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்துள்ள இவர், 1995-ல் இருந்து நூற்பாலைகளுக்குத் தேவையான டிரான்ஸ்மிஷன் பெல்ட், லூப்ரிகன்ட் ஆயில், கிரீஸ் உள்ளிட்டவற்றை ஜப்பான், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து, நூற்பாலைகளுக்கு விநியோகம் செய்கிறார்.
"உங்கள் பின்னணியைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்" என்று கேட்டதற்கு, "என்னைப் பற்றிய தகவல்களை விட, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது ஐ.டி.எஃப். அமைப்பையும், அதன் தனித்துவத்தைப் பற்றியும்தான். தனிப்பட்ட ஒருவரால் சாதிக்க முடிந்ததைவிட, கூட்டு முயற்சியால்தான் அதிகம் சாதிக்க முடியும். எனவே, எங்கள் அமைப்பு குறித்து சொல்கிறேன்" என்று தொடங்கினார்.
"இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைக்கு அடுத்தபடியாக, பல கோடி குடும்பங்களின் ஆதாரமாகத் திகழ்வது ஜவுளித் துறைதான். ஜவுளித் துறையின் முக்கிய மையங்களாக அகமதாபாத், மும்பை, கோவை திகழ்கின்றன. குறிப்பாக, 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று குறிப்பிடும் அளவுக்கு ஜவுளித் துறை கட்டமைப்புகள் மிகுந்து காணப்படும் நகரமாக கோவை திகழ்கிறது. கொங்கு மண்டலத்தின் பிரதானத் தொழில்களில் ஒன்றாகவும் உள்ளது ஜவுளித் துறை.
ஜவுளித் துறையின் முதல் அடுக்கில், பஞ்சிலிருந்து நூலை உற்பத்தி செய்யும் நூற்பாலைகள் உள்ளன. நாட்டில் உள்ள சுமார் 5 கோடி கதிர்களில் (ஸ்பிண்டில்), ஏறத்தாழ 35 சதவீதம் கதிர்கள் தமிழகத்தில் உள்ளன. இங்கு மட்டும் 1200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில், சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நூல் தயாரிக்கப்படுகிறது.
இவை தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர், தேனி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் நூற்பாலைகள் உள்ளன.
தொடக்கப் புள்ளியான `வாட்ஸ்-அப் குழு`
எங்கள் நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளுக்கு, இயந்திரங்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகம் செய்துவருகிறது. இந்த வகையில், நூற்பாலை உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஆனால், நூற்பாலை உரிமையாளர்களிடம் தகவல் தொடர்போ, கருத்துப் பரிமாற்றங்களோ பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இதனால், 2013-ல் ஒத்தகருத்துடைய நூற்பாலை உரிமையாளர்கள் 24 பேரை இணைத்து, வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கினேன். அதில் பல்வேறு கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
நமது போட்டியாளர்கள் உள்ளூர் நூற்பாலைகள் அல்ல. வங்கதேசம், வியட்நாம், பாகிஸ்தான் உற்பத்தியாளர்கள்தான் நமது போட்டியாளர்கள் என்பதை நூற்பாலை உரிமையாளர்களுக்குப் புரியவைத்தோம். மேலும், நூற்பாலைகளில் நிலவிய சில பிரச்சினைகளுக்கும் கூட்டாக தீர்வுகண்டோம். இதனால், அதிக அளவிலான நூற்பாலைகளின் நிர்வாக இயக்குநர்கள் இதில் இணைந்தனர்.
இதையடுத்து, 2015-ல் இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினோம். முதலில் தமிழக நூற்பாலை உரிமையாளர்கள் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், ஏர்ஜெட் வீவர்ஸ் என தற்போது 520-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜவுளித் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. லாப சதவீதம் குறைந்துள்ளது. தொழில் திறனை மேம்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதை உணர்ந்தோம். அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினோம்.
மாதந்தோறும் மும்பை, டெல்லி, பெங்களூரு, புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்துறை நிபுணர்களை அழைத்துவந்து, நிர்வாக மேலாண்மை ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் , 200-க்கும் மேற்பட்ட ஜவுளி அதிபர்கள் பங்கேற்றுப் பயனடைகின்றனர். இதேபோல, சந்தை வாய்ப்புகள், மார்க்கெட்டிங் இன்டெலிஜன்ஸ் தகவல்களை ஆன்லைன் சர்வே மூலம் சேகரித்து, அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலம், தற்போதைய விற்பனை விலை, நூற்பாலைகளின் சரக்கு கை இருப்பு உள்ளிட்ட விவரங்களை உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.
சிறந்த தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். உதாரணமாக, 30-ம் கவுன்ட் நூல் தயாரிக்க 3 யூனிட் மின்சாரம் செலவாகும். ஒரு ஆலை உரிமையாளர் 2.7 யூனிட் மின்சாரத்தில் இதை தயாரித்துக் காட்டினார். இதன் மூலம் 20000 ஸ்பின்டில்கள் கொண்ட நூற்பாலைக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி மீதமாகும்.
இதை பின்பற்றி பல ஆலைகள் மின்சாரத்தை சேமிக்க வழிகாட்டினோம். இதேபோல, உற்பத்தித்திறன் மேம்பாடு, நூற்பாலை இயந்திர பராமரிப்பு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறோம். உற்பத்தித் துறையில் இதைப்போல பல்வேறு விஷயங்களில் `பெஞ்ச் மார்க்கிங்` அளவீட்டை அறிவித்து உள்ளோம் .
பயனளித்த `பொது கொள்முதல்`
இதற்கு அடுத்தகட்டமாக, பொது கொள்முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். தமிழக நூற்பாலைகள் மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பஞ்சு கொள்முதல் செய்கின்றன. தனித்தனியே பஞ்சு கொள்முதல் செய்வதைவிட, ஓர் அமைப்பாக கொள்முதலில் ஈடுபடும்போது, தரமான பஞ்சு, நியாயமான விலைக்குக் கிடைக்கும். 35 நூற்பாலைகள் இணைந்து பஞ்சு கொள்முதலில் ஈடுபட்டன.
கடந்த ஆண்டு 4 லட்சம் பேல் பஞ்சு இந்த முறையில் கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல, `ஸ்பின்டல் மானிட்டரிங் சிஸ்டம்` என்ற சாதனத்தை 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் ஒன்று சேர்ந்து வாங்கிப் பொருத்தியதால் நல்ல விலைக்கு வாங்கவும் ,விரைவாக வேஸ்ட்டை சேமிக்கவும் முடிந்தது . இதன் மூலம் பஞ்சு வேஸ்ட் வீணாவது குறைந்தது.
இதேபோல, தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதிலும் இணைந்து செயல்பட்டோம். ஜெனரல் இன்சூரன்ஸ், கிரெடிட் இன்சூரன்ஸ் எடுப்பதிலும் 120 மில்கள் ஒன்று சேர்ந்ததில் நல்ல பலன் கிடைத்தது. `ஆன்லைன் எனெர்ஜி மானிட்டரிங் சிஸ்டம்` மூலம் உடனுக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவினோம்.
அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறு அரசிடம் கேட்கும் வழக்கத்தை மாற்றி, ஜவுளி வர்த்தகக் கொள்கை, வெளிநாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம் ஜவுளித் தொழிலின் வளர்ச்சி தொடர்பாக நிபுணர்கள் மூலம் அறிக்கை தயாரித்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தோம்.
அமைப்பின் அத்தனை உறுப்பினர்களும் எந்த ஈகோவும் பார்க்காமல், 24 மணி நேரமும் அனைவரும் சேர்ந்து வளர வேண்டும் என்ற பொது குறிக்கோளுடன் , ஜவுளித் தொழில் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்ததால்தான் சாதிக்க முடிந்தது. குறிப்பாக, 32 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தன்னலம் பாராது தங்கள் நேரத்தை செலவிட்டு, ஐ.டிஎஃப். அமைப்பை வளர்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆலை உரிமையாளரும் ஐ.டி.எஃப். அமைப்பை, தங்கள் நிறுவனத்தின் அங்கமாகக் கருதி, அமைப்பின் மூலம் ஒன்றிணைந்து, தமிழக ஜவுளித் தொழில் வளர தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
javuli-2jpgright
`ஐ.டி.எஃப். அகாடமி’ பயிற்சி மையம்
"நூற்பாலைகளில் பணிபுரியும் ஸ்பின்னிங் மாஸ்டர், குவாலிட்டி கன்ட்ரோலர், எலெக்ட்ரிகல் இன்ஜினீயர், உதவி மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, தலைமைப் பண்பு வளர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்க, ஐ.டி.எஃப். அகாடமி என்ற நிரந்தர பயிற்சி மையத்தை கோவையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
முதல்கட்டமாக 60 நூற்பாலைகளில் இருந்து, 240 பணியாளர்களைத் தேர்வு செய்து, 20 பேர் கொண்ட பிரிவுகளாக தனித்தனியே பயிற்சி அளிக்க உள்ளோம். இந்தப் பயிற்சி மையம் முழு நேர அகாடமியாக தொடர்ந்து செயல்படும். தலைசிறந்த நிபுணர்கள் மூலம், ஒவ்வொரு குழுவாக இவர்கள் பயிற்சி பெறுவார்கள்.
ஒவ்வொரு பணியாளரும் குறைந்தது ,ஒரு வருடத்தில் 12 நாட்களுக்குப் பயிற்சி பெறுவார். வரும் மே மாதத்துக்குள் இந்த பயிற்சி மையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார் பிரபு தாமோதரன்.
தினம் ஒரு தகவல்
எங்கள் வாட்ஸ்-அப் குழுவில் தினமும் ஒரு தகவல், யோசனை அல்லது கருத்தை பதிவு செய்வோம். பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில் , நிர்வாகம், தொழில்நுட்பம் , பொருளாதாரம் சார்ந்த கருத்துகள், பல்வேறு பயன்களைக் கொடுத்தன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் கருத்துகளைத் தொகுத்து, புத்தகமாகவும் வெளியிடுகிறோம்.
அதேபோல, ஜவுளித் துறை சார்ந்த பல்வேறு தகவல்களை தினமும் பகிர்ந்து கொள்கிறோம்.
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
12 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
27 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago