புத்தகத் திருவிழா: இயற்கையுடன் குழந்தைகளைப் பிணைக்கும் புத்தகங்கள்!

By நந்தினி வெள்ளைச்சாமி

சீர்கெடும் சூழல் திட்டங்களாலும், தவறான கொள்கைகளாலும், இயற்கை குறித்த புரிதலின்மையாலும், முதலில் பாதிப்புக்கு ஆளாவது குழந்தைகள் தான். இயற்கைப் பேரிடர் முதல் மனிதர்களால் உருவாக்கப்படும் போர்கள் வரை கபடமற்ற குழந்தைகள் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்போது நம்மால் ஏற்படும் சூழல் கேடுகளின் பலன்களை குழந்தைகள் தான் அறுவடை செய்யப் போகிறார்கள். அதனால் தான் சூழலியல் இயக்கங்கள் தங்களின் பணிகளைக் குழந்தைகளிடம் இருந்து தொடங்குகின்றனர். ஏனென்றால், இந்தப் பூவுலகை அப்படியே குழந்தைகளின் கையில் கொடுக்க வேண்டுமல்லவா?

சென்னை புத்தகக் கண்காட்சியில் பலரும் தங்களின் குழந்தைகளுடன் வருகின்றனர். அவர்கள் தங்களின் குழந்தைகளை சூழல் மீதும் இயற்கை மீதும் பிணைப்பு ஏற்படும் வகையிலான சில பதிப்பகங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

தும்பி, அரங்கு எண் 804:

பார்த்தவுடன் குழந்தைகளைக் கவரும் வகையில் 'தும்பி' அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. சணல் சாக்கு துணியாலான தும்பிகள், குழந்தையின் பாதங்கள், புத்தர் என அரங்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தும்பி பதிப்பகம் இந்த ஆண்டு 2 புதிய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது.

ஒன்று, அனுபம் மிஸ்ராவின் புத்தகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை 'குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு' என்ற பெயரில் பிரதீப் பாலு மொழிபெயர்த்திருக்கிறார். ராஜஸ்தானில் இருக்கும் படிக்கட்டு கிணறுகளையும், குளம் வெட்டும் மனிதர்களின் வாழ்வியலையும் அனுபம் மிஸ்ரா இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

குளம் வெட்டுபவர்களுடனேயே பயணித்து இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். குளத்தில் 34 வகையான பகுதிகள் உள்ளதாக இந்தப் புத்தகத்தில் அனுபம் மிஸ்ரா சொல்கிறார். மதகு, கண்மாய், கண், கரை, கரை பாதை, கரை சரிவு என ஒவ்வொன்றுக்கும் பெயர் உள்ளது. மன்னர்கள் 3 மாதம் விடுமுறை எடுத்து குளம் வெட்டியிருப்பதையும் குளத்தை வைத்து ஒரு நாட்டு மன்னன் எதிரி நாட்டு மன்னனைத் தோற்கடித்தது குறித்த வரலாறையும் பதிவு செய்திருக்கிறார்.

குளம் வெட்டும் மக்கள் தினமும் ஒரு புது குளத்தில் தண்ணீர் அருந்துவார்களாம். 48 நாட்களுக்கு மக்கள் 48 குளத்தை வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு ஊரில் ஒரு இரவுக்குள் அம்மக்கள் குளத்தை வெட்டி வேறொரு ஊருக்கு இடம்பெயருவது இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குளம் குறித்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ.150

'தும்பி' வெளியிட்ட மற்றொரு புத்தகம் 'மண்ணின் மரங்கள்'. மதுரையில் 'நாணல் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த தமிழ் தாசன், கா.கார்த்திக் ஆகியோர் வாரம்தோறும் மதுரையைச் சுற்றி ஆராய்ந்த நாட்டு மரங்கள், மண்ணின் மரங்களைப் பற்றிய சிறிய அறிமுகம். அம்மரங்களின் தாவரவியல் பெயர்களும் புத்தகத்தின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. வாசிக்கத் தொடங்கும் குழந்தைகள் இதனை நிச்சயமாக படிக்கலாம். இதன் விலை ரூ.140.

இவை தவிர இங்கு ஈஸ்டர் தீவு குறித்த புத்தகங்கள், ஆப்பிரிக்கத் தீவில் உள்ள டோடோ பறவை குறித்த கதைகள் உள்ளிட்டவை குழந்தைகளுக்கான எளிய மொழியில் உள்ளன. கதை வடிவில் இருப்பதால் இதனைப் பள்ளி மாணவர்கள் தாங்களாகவே படிக்கலாம்.

குழந்தைகள் சூழலியல் புத்தகங்கள் குறித்து நம்மிடம் பேசிய 'தும்பி' பதிப்பகத்தின் நேசன், "குழந்தைகள் இயற்கை குறித்து கடினமாக அல்லாமல் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் இங்கு புத்தகங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு அழுத்தமாக சொல்லித் தருவதில் எங்களுக்கு அவ்வளவு உடன்பாடில்லை. வண்ணங்களுடன் இயற்கையைப் புரிந்துகொள்ளுதல் தான் குழந்தைகளின் உலகம். இதுதான் குழந்தைகளுக்கான புத்தகங்களின் அடிப்படை.

'தும்பி' அரங்கத்தின் சிறப்பே குழந்தைகள் குறித்த உரையாடல்கள் இங்கு நடக்கும். இந்தப் புத்தகக் கண்காட்சியின் கடைசி அரங்கு இது. 804 அரங்கின் எண். 13 கடைகளுடன் 'பபாசி' இந்தக் கண்காட்சியைத் தொடங்கினர். எழுத்தாளர்களைத் தாண்டி வாசகர்கள் விழிப்புணர்வு பெற்றதே அரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணம். குழந்தைகளுக்கு இணையம் மூலம் சொல்லித் தருவதை விட புத்தகம் மூலம் சொல்லிக் கொடுத்தால் இன்னும் அதிகமாகப் புரியும்" என்கிறார் நேசன்.

இயல்வாகை அரங்கு: அரங்கு எண் 59

இயல்வாகை அரங்கில் குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள் அதிக அளவில் மலிவு விலையில் கிடைக்கின்றன. குட்டி ஆகாயம், குட்டி யானை, தோடரும் மலையாடும், மரம் என்பது என்ன, வனத்தில் விளையாட்டு, நிஜமான ஒட்டகச்சிவிங்கி என குழந்தைகளுக்கு ஓவியங்கள் மூலமாகவும் எளிய மொழியின் மூலமாகவும் இயற்கை மீதான காதலை அதிகரிக்கும் புத்தகங்கள் இங்கு உள்ளன.

"மார்ஜுரி சைக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் 1937-1987 வரை செயல்பாட்டில் இருந்த செயல்வழிக் கல்வி குறித்த 'நை தாலிம் புதுமைக் கல்வி' புத்தகத்தை இந்த ஆண்டு புதிதாக வெளியிட்டுள்ளோம். செயல்வழிக் கல்விக்கு என பாடத்திட்டம் உள்ளது. இதில், கிராமங்கள் சார்ந்த கல்வி குறித்து தனது அனுபவங்களை மார்ஜூரி பதிவு செய்துள்ளார்.

சூழலியல் சார்ந்த கதை புத்தகங்கள், மற்ற மொழிக் கதைகள் ஆகியவையும் இங்கு உள்ளன. குழந்தைகள் புத்தகங்களைக் கேட்டால் பெற்றோர்கள் மறுக்காமல் வாங்கித் தருவது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்கிறார் 'இயல்வாகை' பதிப்பகத்தின் அழகேஸ்வரி.

இயல்வாகை பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கான கதைசொல்லி மீரா என்பவர் கூறுகையில், "என் 3 வயது மகளுக்காக குட்டி யானை, ஒரு சின்ன விதை, அன்பின் பிணைப்பு ஆகிய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். ஆங்கிலக் கதை புத்தகங்கள் இருந்தாலும் குழந்தைகள் தாய்மொழியில் படிக்க வேண்டும். மொபைல் தாண்டி புத்தகங்கள் மூலம் கதைகளை சொல்லிக்கொடுத்து சுற்றுச்சூழலை அறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களின் கற்பனை அதிகரிக்கும். புத்தகம் இல்லாமல் சொன்னால், நாம் சொல்வதற்கு மாறாக ஏதாவது கட்டிடங்களை நினைத்துக்கொள்வார்கள்" என்கிறார்.

இந்த அரங்குகளில் புத்தகங்களை வாங்குபவர்கள் ஒருபுறம் இருக்க, குழந்தைகள் அரங்குகளின் அலங்காரங்களை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். பிளாஸ்டிக், ஃபிளக்ஸ் இல்லாமல் சூழலுக்கு உகந்த பொருட்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ள இந்த அரங்குகளை வாசகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். தும்பி, இயல்வாகை, பூவுலகின் நண்பர்கள் ஆகிய அரங்குகளுக்கு அலங்காரம் செய்த ஆனந்த் பெருமாளிடம் பேசினோம்.

"அறிவு சார்ந்த தேடல்கள் இங்கு அதிகமாக இருக்கும். இந்தத் தேடலில் சூழலியல் சார்ந்து நாம் என்ன காட்சிப்படுத்த முடியும் என்று யோசித்து கிடைக்கும் பொருள்களில் மறுபயன்பாட்டுக்கு உகந்த பொருள்களில் அலங்காரம் செய்கிறோம். நெகிழி குறித்த விழிப்புணர்வு இந்த ஆண்டு மக்களிடையே அதிகமாகவே விழிப்புணர்வு இருக்கிறது. எளிமையான விஷயத்தை குழந்தைகளுக்குக் கடத்துவது தான் இதன் நோக்கம். சணல் சாக்குகள், சோடா மூடிகள், தேங்காய் ஓடு, பேக்கிங் மெட்டீரியல் ஆகியவற்றின் மூலம் தான் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரப்பொருட்கள் மூலம் புத்தக அடுக்குகள் செய்யப்பட்டுள்ளது. நம்மைச் சுற்றியே அதிகம் இருக்கிறது. அதை நாம் கவனிக்க மறுக்கிறோம்" என்றார்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE