மகாபாரத கவுரவர்கள் சோதனைக் குழாய்; குழந்தைகள் ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

By என்.மகேஷ் குமார்

மகாபாரதத்தில் வரும் கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள் என ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு கடந்த 3-ம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் அறிவியல் வல்லுநர்கள் பங்கேற்று, இன்றைய சூழலின் அறிவியல் வளர்ச்சி குறித்தும், வருங்காலத்தில் ஏற்பட உள்ள அறிவியல் சார்ந்த மாற்றங்கள் குறித்தும் விவாதம் நடத்தி வருகின்றனர்.

இதில், ஆந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி. நாகேஸ்வர ராவ் நேற்று பேசியதாவது:நம் நாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் வளர்ச்சியில் முன்னோடியாக இருந்துள்ளது. இதற்கு நம்முடைய புராணங்களே ஆதாரம். மகாபாரதத்தில் வரும் கவுரவர்கள் சோதனைக்குழாய் குழந்தைகள்தான். இலங்கேஸ்வரனான இராவணனுக்கு மிகப்பெரிய விமான தளம் இருந்துள்ளது. அவரிடம் அப்போதே 24 போர் விமானங்கள் இருந்துள்ளன.

இதுபோல இந்து புராணங்களில் பல ஆதாரங்கள் உள்ளன. ஏவுகணைகளை ஏவுவதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நாடு முன்னோடியாக திகழ்ந்துள்ளது. மகா விஷ்ணு தனது எதிரியை தாக்க, சுதர்ஸன சக்கரத்தை ஏவி, அது மீண்டும் திரும்பி வரும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஏவுகணையை வைத்திருந்துள்ளார். விஷ்ணுவின் தசாவதாரங்களை ஆதாரமாகக் கொண்டே, சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை வருகிறது.

ஸ்ரீராமர், ‘அஸ்திரா’, ’சாஸ்த்ரா’ ஆகிய பலம் மிக்க ஆயுதங்களை பயன் படுத்தியதாக ராமாயணம் கூறுகிறது. இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணைகளும், பயங்கர ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ராவணன், புஷ்பக விமானம் வைத்திருந்ததாக ராமாயணம் கூறுகிறது. மேலும் 24 வகையான போர் விமானங்கள் வைத்திருந்ததாகவும், அதன் மூலம் ராமர் படையை எதிர்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கை நீரில் இருந்துதான் தொடங்குகிறது என விஞ்ஞானி டால்ஸ்டாய் கூறியுள்ளார்.

இதை நாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகுக்கு அறிவித்துள்ளோம். ஆம். மகா விஷ்ணுவின் தசாவதாரம் இதை நமக்கு உணர்த்துகிறது. விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும். அதாவது மீன் அவதாரம். இது நீரில் இருந்துதான் தொடங்குகிறது. 2-வது கூர்ம (ஆமை) அவதாரம். இது அடுத்த கட்டமாகும். அதாவது நீரிலும், நிலத்திலும் வாழ்க்கூடியது. இதற்குஅடுத்தாற்போல, விலங்கு உருவாகுகிறது. அது வராக அவதாரம். அதன் பின்னர் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து மிருகம், மனிதன் என நரசிம்ம அவதாரம் உருவாகிறது. அதன் பிறகு வாமணர் என சிறிய மனிதனாக உருவாகி, ஆயுதங்கள் உருவாகிறது.

இதையே பரசுராமர் அவதாரம் என்கிறோம். அதன் பின்னர் ராமர், கிருஷ்ணர் என மனிதனுக்குள் பேதம், ஆளுமை, அரச நியதி, அரசியல், போர், எதிரி, ஆயுதங்கள், தாக்குதல்கள் என உருவாகிறது. இதிலும் குறிப்பாக, இப்போது நடைமுறையில் உள்ள சோதனைக்குழாய் குழந்தைகள் குறித்து நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவுரவர்கள் பிறந்ததைக் கூறியுள்ளோம். கவுரவர்களின் தாயார் காந்தாரிக்கு 100 குழந்தைகள் பிறந்தனர் என்றால் நம்ப முடியுமா ? ஆனால் இப்போது இது சோதனைக்குழாய் குழந்தைகள் மூலம் சாத்தியமாகிறது.

100 முட்டைகளை, 100 பானைகளில் வைத்து இனப்பெருக்கம் செய்தால் அதுதான் சோதனைக்குழாய் குழந்தைகள். இதை நாம் எப்போதோ கூறிவிட்டோம். இதேபோல குறுத்தணு (ஸ்டெம் செல்) முறை குறித்தும் நாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறி விட்டோம். இதனால் நாம் இவ்வுலகின் அறிவியல் விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என கூறுவதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE