கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிறான் பார்! என்பார்கள். சக்கரம் கட்டியபடி பாய்ந்து சென்று கோவைக்கு பெருமை தேடித் தந்துள்ளார் மாணவி அபிநயா ரகுபதி (17). தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வென்றுள்ள இந்த மாணவி, “ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே லட்சியம்” என்கிறார்.
கோவை நேஷனல் மாடல் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது பெற்றோர் வி.ரகுபதி-ரேணுகாதேவி. கால்களில் சக்கரத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த அபிநயாவை தடுத்து நிறுத்தி, “எப்போதிருந்து ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்கிறீர்கள்?” என்றோம். கொஞ்சம் மூச்சுவாங்கிக் கொண்டு பதில் கூறத் தொடங்கினார் அபிநயா.
“ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் ‘ரோலர் ஸ்கேட்டிங்’ பயிற்சியில் சிலர் ஈடுபட்டனர். கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு, வேகமாகச் சென்ற அவர்களைப் பார்த்த எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. உடனே, ‘நானும் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற வேண்டும்’ என்று பெற்றோரிடம் கேட்டேன்.
ஆரம்பத்தில் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அடம்பிடித்து சம்மதம் பெற்றேன். கோச் ராஜசேகரிடம் ரோலர் ஸ்கேட்டிங்கின் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு, பயிற்சியைத் தொடங்கினேன்.
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தயாராகிவிட்டு, ஐந்து மணிக்கெல்லாம் மைதானத்துக்குச் சென்று பயிற்சியைத் தொடங்குவேன். ஏழு மணிக்குப் பயிற்சியை முடித்து, வீட்டுக்கு வந்து, பின்னர் பள்ளிக்குச் செல்வேன். இதேபோல, மாலையிலும் சுமார் 2 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வேன். சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் முதல்முறையாக, பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கோட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றேன்.
முதல் போட்டியிலேயே வெவ்வேறு பிரிவுகளில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றேன். தொடர்ந்து ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றேன். கடந்த 6 ஆண்டுகளாக கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில், ரிங்க்-1, ரிங்க்-2 மற்றும் ரோடு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளேன். இதேபோல, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் 35 பதக்கங்களைப் பெற்றுள்ளேன்.
தேசிய போட்டியில் வெற்றி
2014-ல் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, 4-வது இடத்தைப் பிடித்தேன். ஒவ்வொரு ஆண்டும் மும்பை மற்றும் கர்நாடக மாநிலம் பெல்ஹாமில் நடைபெறும் தேசியப் போட்டிகளில் பங்கேற்பேன். ஆனால், 4, 5-வது இடங்களைப் பிடிக்க முடிந்தது. எனினும், விடாமல் முயற்சித்து வந்தேன். இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில் விசாகப்பட்டினத்தில் 56-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
ஸ்கேட்டிங் போட்டிகள் `இன்லைன்` மற்றும் `குவாடு` பிரிவுகளில் நடத்தப்படும். இன்லைன் என்பது நேர் வரிசை அடிச்சக்கரங்களைக் கொண்டது. குவாடு என்பது நான்குபுறங்கள் சுழலும் அடிச்சக்கங்கள் உடையது. இவ்விரு முறையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இதில், `டெர்பி` என்பது ஒருவகை. இதில், ஸ்கேட்டிங் செய்யும் அணியை, மற்றொரு அணி தடுத்து நிறுத்தும். அப்போது தாக்கவும், தள்ளிவிடவும் முயற்சிக்கும்.
இதைத் தாண்டிச் சென்று, குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் அணியே வெல்லும். இந்தப் போட்டியில் பங்கேற்ற ஐந்து பேர் கொண்ட தமிழக அணியின் `ஸ்டார் ஸ்கேட்டராக` விளையாடினேன். அரையிறுதிப் போட்டியில் எங்கள் தமிழக அணியும், மகாராஷ்டிர அணியும் மோதின. இதில், எங்கள் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலிடத்தை ஹரியானா, இரண்டாமிடத்தை ஆந்திரா, மூன்றாமிடத்தை தமிழக அணிகள் பிடித்தன.
முதல்முறையாக தேசியப் போட்டியில் பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. தமிழக அணியில் கோவை மாவட்டத்திலிருந்து பங்கேற்றது நான் மட்டுமே. அதுமட்டுமல்ல, குவாடு பிரிவில் கோவையைச் சேர்ந்த மாணவி, பதக்கம் பெறுவது இதுவே முதல்முறை.
சர்வதேச அளவிலான போட்டிகளில், இன்லைன் போட்டி மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், இனி இன்லைன் போட்டி
களில் மட்டுமே பங்கேற்க முடிவு செய்துள்ளேன். சென்னையைச் சேர்ந்த ஆரத்தி கஸ்தூரிராஜ், நாட்டின் மிக வேகமான பெண் ஸ்கேட்டர் என்ற புகழுக்குரியவர். அவரை ரோல் மாடலாகக் கொண்டு பயிற்சி பெறுகிறேன். கடந்த 2013-ல் நேபாளத்தில் நடைபெற்ற இன்டோ-நேபாள் ஓபன் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றேன்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கம் வெல்லவில்லை. எனவே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதையே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன். எனது பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுச் சங்கத்தினர் பெரிதும் ஊக்குவிக்கின்றனர்.
படிப்பிலும் சுட்டி
விளையாட்டில் கவனம் செலுத்துவதுடன், படிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார் அபிநயா. எஸ்எஸ்எல்சி.யில் 476 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ள இவர், எதிர்காலத்தில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். பள்ளி நாட்களில் காலை அல்லது மாலை ஏதாவது ஒருவேளை பயிற்சி மேற்கொள்கிறார். விடுமுறை நாட்களில் இரண்டு வேளையும் பயிற்சி பெறுகிறார்.
பயிற்சியாளரான மாணவி!
தினமும் பயிற்சி மேற்கொள்வதுடன், மாணவ, மாணவிகளுக்கும் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த கோடை விடுமுறையில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, ஏறத்தாழ இரண்டு மாதங்கள் இலவசமாக பயிற்சி அளித்துள்ளார். `சக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமி` என்ற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு தொடர்பாக, குறைந்த கட்டணத்தில் பயிற்சியும் அளித்து வருகிறார் அபிநயா.
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
12 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
27 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago