புத்தாண்டில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்க சந்தன மாலைகள் தயாரிக்கும் பணி தஞ்சாவூரில் மும்முரம்

By வி.சுந்தர்ராஜ்

புத்தாண்டில் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும்போது, அவர்களுக்கு அணிவித்து கவுரவிப்பதற்காக பயன்படும் சந்தன மாலைகள் தயாரிக்கும் பணி தஞ்சாவூர் அருகே தண்டாங்கோரை கிராமத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல வண்ண மலர்களைக் கொண்டு மாலை தொடுத்தாலும், அந்த மாலைகள் அடுத்த நாள் வாடி வதங்கிவிடும். ஆனால், சந்தன மாலைகள் காலத்துக்கும் வாடாமல் இருக்கும். அதனால், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும்போது, அவர்களைக் கவுரவிக்க சந்தன மாலைகளை அணிவிப்பது வழக்கம்.

தமிழகம் முழுவதும் உள்ள சர்வோதய சங்கம், காதிபவன், பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகம்  ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் ‘தஞ்சாவூர்  சந்தன மாலைகள்', பல ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகே தண்டாங்கோரை கிராமத்தில் உள்ள கைவினைக் கலைஞர்களால்தான் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பல ஆண்டுகளாக சந்தன மாலைகளைத் தொடுத்து வரும் தண்டாங் கோரை பி.செல்வராஜ் கூறியதாவது:

‘‘ராஜராஜசோழன் காலத்தில்தான் நெல் மணிகளைக் கொண்டு முதலில் மாலைகள் தயாரிக்கப்பட்டன. தன்னைச் சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு இந்த நெல்மணி மாலைகளை மன்னர் அணிவிப்பது வழக்கம். நெல்மணிகளைக் கொண்டு மாலை களைத் தயாரித்த தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள், பின்னர் மணக்கும் ஏலக்காய், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு விதவிதமான மாலைகளைத் தொடுத்தனர்.

விலை குறைவாகவும், பார்க்க பளபளப்பாகவும், நறுமணத்தோடும் இருந்ததால், சந்தன மாலைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, தஞ்சாவூரைச் சுற்றி இந்தத் தொழிலில் 10 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாலை தஞ்சாவூரில் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், இது ‘தஞ்சாவூர் சந்தன மாலை' என பெயர் பெற்றது.

தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சந்தன மாலைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தஞ்சாவூர் மாலைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த சந்தன மாலைகள் 2 சரங்களில் தொடங்கி,  20 சரங்கள் வரை தொடுக்கப் படும். ஒரு சந்தன மாலை ரூ.60-ல் இருந்து ரூ.1,500 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது’’ என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: சந்தன மாலை தயாரிக்க வம்பாரை என்ற ஒரு மரத்தின் துகள்தான் மூலப்பொருள். இந்த மரத்தின் துகள்களைக் கொண்டு அதனை மாவாக்கியப் பிறகு, அதனோடு ஒரு பிசினையும் சேர்த்து பக்குவமாய் பிசைந்து, அதனைச் சின்ன உருண்டைகளாக உருட்டி,  அதில் ஒரு சிறிய துவாரமிட வேண்டும். துவாரமிட்ட உருண்டைகளைப் பதமாக காயவைத்த பிறகு, அதனைச் சந்தன பவுடரில் நனைத்து மாலையாக தொடுக்கப்படுகிறது.

திருமணம் மற்றும் இதர விழாக்காலங்களில் காதி பவன், பூம்புகாரில் அதிகம் கொள்முதல் செய்கின்றனர்.  கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் தஞ்சாவூர் சந்தன மாலைகளுக்கு தேவை அதிகம் என்பதால், நாளொன்றுக்கு 50 மாலைகள் வரை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

10 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்