தமிழகத்திலேயே முதல்முறையாக குளிரூட்டப்பட்ட வாழை வணிக வளாகம்: விவசாயிகள், வியாபாரிகள் வரவேற்பு

வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன்முதலாக குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது.

வாழைத்தார்கள் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மத்தியில் பொது ஏலம் விடப்படும். ஏலத்தில் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், இந்த குளிர்விப்பு நிலையத்தில் 21 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.1 செலுத்த வேண்டும். இந்த வசதியின் காரணமாக வாழை அறுவடைக்குப் பின் விவசாயிக்கு ஏற்படும் இழப்பின் அளவு குறையும். கூடவே நல்ல விலையும் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும்.

இவ்வளாகத்தில் உள்ள குளிர் பதன அறையில் வாழைத் தார்களை கழுவி தரம் பிரித்து, சிப்பம் கட்டும் வசதி, பரிவர்த்தனைக் கூடம், வணிகர் களுக்கான கடைகள் சுகாதார வசதியுடன் கூடிய பொது கட்டமைப் புகள் மற்றும் தடையில்லா மின்சாரத் துக்கு ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதல் நாளில்

விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட இவ்வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஏலத்தில் 18 விவசாயிகளின் 912 வாழைத்தார்கள் ரூ.1,60,695 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

வாழையில் இழப்பு

வாழையின் தாய் மரத்திலிருந்து வாழைக் குலைகளை பிரித்தவுடன் 22 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். அறுவடை செய்த பின்னர் போக்குவரத்தில் 8 முதல் 9 சதவீத இழப்பும், மொத்த வியாபாரிகள் வசம் இருக்கும் போது, 15 சதவீத இழப்பும், சில்லறை விற்பனையாளரிடம் 20 முதல் 25 சதவீதம் இழப்பும் ஏற்படுகிறது. இந்த இழப்பின் நிகழாண்டு மதிப்பு மட்டும் இந்திய அளவில் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும். இதைத் தடுக்க அறுவடை செய்யும் நேரத்தை சரியாக தேர்வு செய்து, உள்ளுர் சந்தையாக இருப்பின் 90 முதல் 95 சதவீத முதிர்ச்சியுடனும், வெளியூர் சந்தையாக இருப்பின் 85 சதவீதம் முதல் 90 சதவீத முதிர்ச்சியுடனும் அறுவடை செய்ய வேண்டும். இதற்கு இந்த மையம் பேருதவி புரியும் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

கமிஷன் தரவேண்டியதில்லை

முதல் நாளில் 110 வாழைத் தார்களை விற்பனைக்கு கொண்டு வந்த தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம், வளப்பக்குடியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறிய போது, “நான் பல ஆண்டுகளாக 3 ஏக்கரில் வாழை பயிரிட்டு வருகி றேன். அறுவடை செய்யப்படும் வாழைத் தார்களை திருச்சி காந்தி மார்க் கெட்டுக்கும் சில நேரங்களில் கேரள வியாபாரிகளுக்கும் விற்பனை செய்வேன். தற்போது திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையத்துக்கு கொண்டு வந்து வாழைத் தார்களை விற்பனை செய்தேன். இந்த விற்பனைக்கு கமிஷன் எதுவும் இல்லை என்பதும், உடனடியாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் போக்குவரத்து செலவு கொஞ்சம் அதிகமாக உள்ளது” என்றார்.

விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் துணை இயக்குநர் சந்திரசேகரன் கூறியபோது, “தமிழகத்திலேயே முதல்முறையாக வாழைக்கு குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வளாகம் இங்குதான் அமைக்கப்பட்டுள்ளது.

பொது ஏலத்தில் வியாபாரிகள் கேட்கும் விலையில் விவசாயிகளுக்கு திருப்தி இல்லையெனில் இந்த கிடங்கில் வைத்திருந்து அடுத்த ஏலத்தில் விற்பனை செய்யும் வசதி இங்குள்ளது.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் நேரடி மேற்பார்வையில் ஏலம் நடை பெறுவதால் விவசாயிகளுக்கு வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE