என்னுடைய மகன் பிளஸ் 1 படித்துக்கொண்டிருக்கிறான். பத்தாம் வகுப்பின்போது விளையாட்டில் மாநில அளவில் வெற்றி பெற்றாலும், படிப்பில் சுமாராக இருந்துவந்தான். இதனால் அவனை உறைவிடப் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 சேர்த்துவிட்டோம். ஆரம்பத்தில் உறைவிடப்பள்ளி வேண்டாம் என்று சொன்னவன், தற்போது ஓரளவு அதற்குப் பழகிவிட்டான். ஆனால், விடுதியில் இருந்து மாதம் ஒரு முறை வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவன் வீட்டில் தங்குவதே இல்லை. அவனது பத்தாம் வகுப்பு நண்பர்களோடுதான் எந்நேரமும் இருக்கிறான். இதைத் தடுக்கலாமா, அப்படியே விட்டு விடலாமா? - செல்வி, மதுரை
பெற்றோருடன் இருப்பதைக் காட்டிலும் சகவயதினருடன் நேரம் செலவழிக்க விரும்புவது என்பது விடலைப்பருவத்துக்கே உரிய இயல்பான செயல்பாடுதான். இந்த வயதில் அவர்களுடைய ஆளுமை மேம்பாட்டுக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்தப் போக்கு நல்லதே. ஆனாலும், நண்பர்களுடன் அதிகப்படியாக நேரம் செலவழிப்பதாக நீங்கள் நினைத்தால், உங்களுடைய மகனிடம் வெளிப்படையாகப் பேசிப் பாருங்கள். அதேநேரத்தில் உணர்வுரீதியாக அச்சுறுத்தாமல் அவருடைய அன்புக்காக எவ்வளவு ஏங்குகிறீர்கள் என்பதை மட்டும் வெளிப்படுத்துங்கள். ஒரு குடும்பமாக எப்படி ஆக்கப்பூர்வமாக நேரத்தைச் செலவிடலாம் என்பதைக் கலந்துபேசுங்கள்.
உறவுமுறைகளைப் பொறுத்தவரை இரண்டே விதிகள்தாம் உள்ளன. ஒன்று, சமமான இருவருக்கு இடையில்தான் பேச்சுவார்த்தை சாத்தியம். நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் உணர நேரிட்டால், உங்களிடம் இருந்து விலகிப்போகவே செய்வார். இரண்டாவது, ஏதோ சிக்கல் இருக்கிறது என்ற நெருடல் ஏற்படும்போது வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு இருவரும் முன்வர வேண்டும். அதை விடுத்து எப்படியாவது உங்களுடன் ஒத்துப்போகும்படி நிர்ப்பந்தித்தால் தீர்வு காண்பது கடினம். உங்கள் மகனிடம் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு மாதக் காலப் பள்ளிப் படிப்பும் மாணவர் விடுதியின் அசவுகரியமும் ஏற்படுத்திய மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ள தன்னுடைய நண்பர்களோடு நேரம் கழிப்பது என்பது ஆரோக்கியமான அணுகுமுறைதான். அவர் ஸ்மார்ட்ஃபோன் மோகத்தில் சிக்கிக்கொள்ளவோ சூழலுக்கு ஒத்துப்போக மாட்டேன் என்று முரண்டுபிடிக்கவோ இல்லையே என்பதை நினைத்து நீங்கள் நிம்மதி அடையலாம்.
சென்னையில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துவருகிறேன். நான் பருமனாக இருப்பதால் என்னுடைய தன்னம்பிக்கையை இழந்துவருவதாகத் தோன்றுகிறது. இது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும், எதையும் முன்வந்து செய்யச் சங்கடப்படுகிறேன். என்னுடைய மனத்தடையைவிட்டு வெளிவர வழிகாட்டுங்கள். - யோகலட்சுமி மனோகரன்.
நமக்கு நாமே எதைச் சொல்லிக்கொள்கிறோமோ அதையே நம்பத் தொடங்கிவிடுகிறோம். உங்களுடைய கடிதத்திலிருந்து, எதிர்மறையான எண்ணங்களுக்கும் அதீத சுயவிமர்சனத்துக்கும் நீங்களே உங்களை உட்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது புரிகிறது. இதன்மூலம் நீங்களே உங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.
சரிவிகித உணவு, முறையான உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மூலம் உடல் எடையை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். உங்களுடைய பரம்பரையில் குண்டு உடல்வாகு இயல்பாக இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மூலம் உடல் பருமன் என்ற சிக்கலைக் கையாள முடியும். உங்கள் மனதுக்குள்ளே உட்கார்ந்துகொண்டு எந்நேரமும் யோசித்துக்கொண்டிருப்பவர் நீங்கள்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆதனால், உங்கள் மனதை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுங்கள். அதற்கு உதவக்கூடிய செயல்பாடுகள்:
- ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று உங்களுக்கான சரிவிகித உணவு அட்டவணையைத் தீர்மானிக்கலாம். ஒருபோதும் தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டாம். ஏனென்றால், தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டின்போது ‘இவர் பட்டினி கிடக்கிறார் என்பதால் உடலில் இருக்கும் கொழுப்புச் சத்தைச் சேமித்துவைத்துக்கொள்' என்கிற கட்டளையைத்தான் மூளை உடலுக்கு அனுப்பும் என்கிறது நரம்பியல்.
- எடை குறைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும் ஆரோக்கியமான உடலமைப்புத் தேவை என்பதை மனத்தில் வைத்து உங்களுக்கு உகந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
- எத்தனை அபாரமான தன்னம்பிக்கை உரைவீச்சும் உங்களுடைய மனத்தில் தன்னம்பிக்கையை ஊன்றிவிட முடியாது. அதனால், நீங்களே உங்களுக்குள் நேர்மறையான சிந்தனையை விதைக்கத் தொடங்குங்கள்.
இவற்றைக் கடைப்பிடித்த பிறகும் மன உளைச்சல் ஏற்பட்டால் மனநல ஆலோசகரை அணுகுங்கள்.
தொகுப்பு: ம.சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான
மனநல ஆலோசகர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
8 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago