அறிவு விளக்கேற்றும் ஆசான்

By ஆர்.டி.சிவசங்கர்

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பழங்குடி மக்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில், இன்றளவும் மிகவும் வறுமையான சூழலில், முதல் தலைமுறையாய் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களே அதிகம். இதுபோன்ற கல்வி, மருத்துவம், பிற வசதிகள் சென்றடையாத வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களுக்குச் சென்று, மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கான மையத்தை உருவாக்கி, வீட்டுப் பாடத்துடன் ஆக்கத் திறனையும் அளித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார் சாமுவேல் பிரபாகர்.

இத்தகைய சிறப்பு மையங்கள் முதலில் தொடங்கப்பட்ட இடம், உதகையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் மாயார். இங்கு கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இருளர், குறும்பர் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். ஆரம்பத்தில் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். தற்போது, 40-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மசினகுடி, உதகையை அடுத்த அன்பு அண்ணா காலனி ஆகிய பகுதிகளில் மையங்களை உருவாக்கி, சிறப்பு வகுப்பைத் தொடங்கினார். இம்மையங்களுக்கு 2 ஆசிரியைகள் உட்பட 6 ஆசிரியர்களை நியமித்துள்ளார். இதற்கான கட்டிடங்களை சொந்தமாகவும், வாடகைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மாதம் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. இதை சகோதரியுடன் பகிர்ந்துகொள்கிறார். இதுபற்றி சாமுவேல் பிரபாகர் கூறுவதாவது:

அனைவருக்கும் பொதுவான, சமமான கல்வி கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் மிகவும் ஏற்ற தாழ்வு மிகுந்ததாக கல்வி மாறிவிட்டது. மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு, மதிப்பிடும் நிலை வேதனை அளிக்கிறது. இதனால், மாணவர்களின் ஆக்கத் திறன் பாதிப்பதோடு, வாழ்வை எதிர்கொள்ளும் திறனும் இல்லாமல் போகிறது.

எனவே, பணி ஓய்வுக்குப் பிறகான எனது வாழ்வில், உரிமைகள் மறுக்கப்பட்ட, அடிப்படை வசதிகள் சென்றடையாத பழங்குடி மற்றும் தலித் மாணவர்களை கரை ஏற்றும் சிறிய துடுப்பாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கி உள்ளேன். அதில் ஒரு சிறு அங்கம்தான் மாலை நேர சிறப்பு வகுப்புகள்.

மாயார், மசினகுடி, அன்பு அண்ணா நகர் ஆகிய 3 கிராமங்களுக்கு சென்று பார்த்தபோது, மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வருவது என்பதே போராட்டம் நிறைந்த ஒன்று. ஏழ்மை மட்டுமன்றி, இவர்களது பெற்றோர் பெரும்பாலும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். அதனால், பல குழந்தைகளிடம் வகுப்பறை யில் கற்றல் திறன் குறைந்தே காணப்படுகிறது. இவர்களை கல்வியில் உயர்த்த வேண்டும் என முடிவு செய்து, மாலை 6 முதல் 8 மணி வரை சிறப்பு வகுப்புகளை தொடங்கினோம்.

வன விலங்கு நடமாட்டம் உள்ளிட்ட பல இன்னல்களை தாண்டி, மாணவர்கள் வரவேண்டிய சூழல். இதனால், அந்தந்த கிராமத்தில் ஒரு மையம் தொடங்கினோம். இலவசம் என்றால் மதிப்பின்றி போகும் என்பதால், நாளொன்றுக்கு ரூ.1 கட்டணம் வசூலித்தோம். அதுவும் கட்டாயம் இல்லை. தற்போது 150-க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னொரு காலத்தில் காலரா, பிளேக் உள்ளிட்ட கொடிய நோய் பாதிப்பில் துவண்டு கிடந்த நோயாளிகளை கனிவுடன் அரவணைத்து வைத்தியம் பார்த்தவர்தான் சாமுவேலின் தாத்தா. அம்மா அரசுப் பள்ளி ஆசிரியர், அப்பா அரசு ஊழியத்துடன் மக்கள் தொண்டாற்றியவர். இவர்களின் பாரம்பரியத்தில் வந்த சாமுவேல் பிரபாகர், 30 ஆண்டுகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியப் பணியாற்றியவர். இறுதி ஆண்டில்கூட, தான் பணிபுரிந்த மலைக் கிராம அரசுப் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி அளித்துவிட்டுதான் ஓய்வுபெற்றார்.

“இன்னும் பல கிராமங்களில் மாலை நேர சிறப்பு வகுப்பு மையங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்வில் ஒளியூட்ட என் வாழ்நாள் முழுவதும் போராடுவது மட்டுமே கனவாக உள்ளது” என்கிற சாமுவேல் பிரபாகர் மகத்தான ஆசான்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

14 days ago

மற்றவை

22 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்