ஸ்டெர்லைட் போராட்டம் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?

By ச.கார்த்திகேயன்

சென்னை சர்வதேச மையம் சார்பில் “ஸ்டெர்லைட் போராட்டம் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவன வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) பி.ராம்நாத், சுற்றுச்சூழல் வழக்கறிஞர் டி.நாகசைலா, முன்னாள் காவல்துறை ஐஜி எஸ்.ராமநாதன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் வாதங்களை முன் வைத்தனர். இந்த விவாத நிகழ்ச்சியை இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நெறியாளராக இருந்து வழிநடத்தினார்.

நெறியாளர் எம்.கே. நாராயணன்: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக புரிதல் ஏற்படுவதற்காக மட்டுமே இந்த விவாதம் நடத்தப்படுகிறது. யாரையும் குற்றம் சாட்டுவதற்காக நடத்தப்படவில்லை. இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும்.

ஸ்டெர்லைட் காப்பர் சிஇஓ பி.ராம்நாத்: தமிழகத் தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடந்த 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது, அந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1 லட்சம் டன் செம்பு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில், ஆண்டுக்கு 4 லட்சம் டன் வரை உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது. நேரடியாக 4 ஆயிரம் பேரும் மறைமுகமாக 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.இந்நிறுவனம் மூலம் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்கு 33 கிராமங்களில் மருத்துவ முகாம்கள், 8 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன.

ஆலைக்கு உள்ளேயே சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்திருக்கிறோம். தொழிற்சாலைக்கு தேவையான 70 சதவீத நீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறோம். 30 சதவீத தேவைக்கு மட்டுமே தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்திடம் இருந்து பெறுகிறோம்.

சல்பர் டை ஆக்சைடை குறைந்த அளவில் வெளியேற்றும் நிறுவனங்களில் ஸ்டெர்லைட் நிறுவனம் 2-ம் இடத்தில் உள்ளது. இதுவரை எந்த புகாரும் வரவில்லை. முதலிடத்தில் ஜெர்மனியில் உள்ள நிறுவனம் உள்ளது.

செம்பு உற்பத்தி செய்வதால் புற்றுநோய் வருவதாகவும், தமிழகத்தின் புற்றுநோய் கேந்திர மாக தூத்துக்குடி விளங்குவதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் சிறிதும் உண்மையில்லை. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தமிழக அளவில் புற்றுநோய் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முதல் 3 இடங்களில் முறையே சென்னை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் எண்ணிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் 14-வது இடத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கையில் 25-வது இடத்திலும் உள்ளது.

தூத்துக்குடியில் இயங்கும் 4 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, நிலக்கரி யை பயன்படுத்தும் அனல்மின் நிலையங் களால் கந்தகம் வெளியேறுகிறது இவை 99% காற்றில் கலக்கிறது ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் கந்தக டை ஆக்சைடு 1 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் வெளியேறுகிறது. கந்தகம் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும் என அனல் மின் நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் தொழிற்சாலைக்கு எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை. கிராமப் பகுதி மக்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை.

தொழிற்சாலையில் 43 ஹெக்டேர் பரப்பளவில் பசுமை போர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதை சரி செய்ய ரூ.100 கோடி வைப்புத் தொகையாக மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான வட்டி மட் டும் ரூ.40 கோடி கிடைத்துள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை ரூ.4 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. அதுவும் சாலை அமைக்கவே பயன்படுத்தியுள்ளனர். சுற்றுச் சூழல் பாதிப்பை சரி செய்வதற்காக அந்த தொகை செலவிடப்படவில்லை.

இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் 400 துணை தொழில் நிறுவனங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத் தின் கீழ் மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு கிடைக்காமல் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செம்பு விலை உயரவும் இறக்குமதி செய்யவும் வாய்ப்புள்ளது. தமிழகத் தின் உள்நாட்டு வளர்ச்சி 3 சதவீதம் வரை பாதிக்கும். ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்த கம் பாதிக்கப்படும். அதனால் ஸ்டெர்லைட் ஆலையையும் அதை சார்ந்த மக்களையும் பாதுகாக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் வழக்கறிஞர் டி.நாகசைலா: ஸ்டெர்லைட் தொழிற்சாலை மிகப்பெரிய தொழிற்சாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்துவதற்காக, அத்தொழிற்சாலைகளைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு பசுமை போர்வை ஏற்படுத்த வேண் டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் உருவாக்கிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை போர்வை பகுதியை 250 மீட்டராக, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்காக குறைத்துள்ளது. அந்த விதிகளையும் மீறி தொழிற்சாலையில் 25 மீட்டர் அளவுக்கே பசுமை போர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் உற்பத்தி நாளொன் றுக்கு 900 டன்னாக இருந்தபோது, அதன் புகைப்போக்கி 68 மீட்டர் உயரம் இருக்க வேண்டும். ஆனால் அங்கு 60 மீட்டர் உயரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நாளொன்றுக்கு 1200 டன்னாக உற்பத்தி அதிகரித்த நிலையிலும், அதன் உயரம் மேலும் அதிகரிக்கவில்லை. தற்போது புதிய திட்டம் தொட்குவதற்கான அனுமதியில் 165 மீட்டர் உயரத்துக்கு புகை போக்கி அமைக்க வேண்டும் என்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புகை போக்கி குறைந்த உயரத்தில் இருப்பதன் காரணமாக, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை சிதைவடைய வாய்ப்பில்லாமல் அரு கில் உள்ள கிராமங்களை பாதிக்கிறது. இதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளவில்லை.

அனல்மின் நிலையங்களில் மாசு அதிகமாக இருப்பதாக ஸ்டெர் லைட் நிர்வாகம் தெரிவிக்கிறது. பொதுவாக அனல்மின் நிலையங்கள் கடலோரப் பகுதியில் இயங்கு கின்றன. மாசு வெளியேறுவது அதிகமாக இருந்தாலும், அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாசு கடலுக்கு சென்றுவிடும். கிராமப் பகுதிகளுக்கு நடுவில் இயங் கும் ஸ்டெர்லைட்டில் குறைவாக மாசு வெளியேறினாலும் அது பெரிய அளவில் மக்களை பாதிக்கும்.

இந்நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துவதாக கூறுகிறார்கள். எடை, உயரம், ரத்த சிவப்பணு பரிசோதனை மட்டும் செய்தால், அதை மருத்துவ முகாமாக ஏற்க முடியாது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மேற்கொண்ட ஆய்வில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் மக்களுக்கு மூளைக் கட்டி, சுவாசப் பிரச்சினைகள், மூட்டு மற்றும் தசை வலி, மாதவிடாய் கோளாறு போன்ற நோய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் தொடர்பாக மாவட்ட அளவிலான புள்ளி விவரத்தை பார்க்கக் கூடாது. கிராம அளவிலான புள்ளி விவரத்தை பார்க்கும்போது, அதிகமாக தெரியும். எனவே அப்பகுதி மக்களை முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் அரசும் தொழிற்சாலையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்ய தயாராக இல்லை. அந்த கிராமப் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் பொதுமக்கள் ஸ்டெர்லைட் வியாதிக்கு மருந்து கொடு என்று தான் கேட்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளிக்க வருவார்கள். அவர்களை மாவட்ட ஆட்சியர் சந்திக்க விரும்பவில்லை. அதனால் மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் சதி இருக்குமோ, வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருக்குமோ என்ற கோணத்தில் யோசிக்க வேண்டியதில்லை.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பை தீர்க்க வழி செய்திருந்தால், இந்த போராட்டத்துக்கே அவசியம் ஏற்பட்டிருக்காது. 13 உயிர்களும் காக்கப்பட்டிருக்கும். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றால் வெளிப்படைத் தன்மை அவசியம்.

இந்த ஸ்டெர்லைட்டுக்கு மூலப்பொருளை வழங்கும் நிறுவனம் வழங்கிய, அந்த மூலப்பொருளில் எத்தனை சதவீதம், எந்த வகையான உலோகங்கள் உள்ளன என்பது குறித்த அறிக்கை, ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி செய்த பின் கிடைக்கும் உலோகங்கள் மற்றும் கழிவுகள் தொடர்பான சமநிலை அறிக்கை ஆகியவற்றை பொதுவெளியில் வைக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் காப்பர் சிஇஓ பி.ராம்நாத்: செம்பு உற்பத்தியை அதிகரிக்கும்போது அதற்காக மற்றொரு புகை போக்கியை அமைத்திருக்கிறோம். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆய்வில், சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட பகுதியில், காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக வாகனங்கள் இயக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் எதுவும் அப்பகுதியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து 5 கிமீ தூரத்துக்கு, தொழிற்சாலையால் ஏற்படும் உடல்நலக்குறைவு ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் காவல்துறை ஐஜி எஸ்.ராமநாதன்: 99 நாட்கள் அமைதியாக போராட்டம் நடைபெற்ற நிலையில், அதுவரை தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஏன் அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை? பொதுமக்களிடம் இணக்கமாக பேசி பிரச்சினையை முடி வுக்கு கொண்டு வருவதில் இரு தரப்பினரும் தோல்வியடைந்துள்ளனர். இந்த சூழலில் கடைசியாக போலீஸார் குற்றவாளியாக்கப் பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

பார்வையாளர்கள்: கூட்டத்தை கலைக்க காலுக்கு கீழ் தான் சுட வேண்டும் என்று விதி இருந்தும் ஏன் போலீஸார் தலையில் சுட்டனர்?

முன்னாள் காவல்துறை ஐஜி எஸ்.ராமநாதன்: அசாதாரண சூழல் ஏற்படும்போது, சுட மட்டுமே உத்தரவிடப்படும். காலுக்கு கீழ் சுட வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

பார்வையாளர்கள்: பத்திரிகைகள் அணுக முடியாத நிலையில் தான் ஸ்டெர்லைட் நிறுவனம் உள்ளது. உண்மை நிலை குறித்து ஏன் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கவில்லை.

ஸ்டெர்லைட் காப்பர் சிஇஓ பி.ராம்நாத்: சென்னை யில் கடந்த ஏப்ரலில் பத்திரிகையாளர் சந் திப்பை நடத்த இருந்தேன். ஆனால் சம்மந்தப் பட்ட ஹோட்டலுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மிரட்டல்கள் வந்ததால், நடக்க இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு கைவிடப்பட்டது. சமூக வலை தளங்கள் ஸ்டெர்லைட் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.

நெறியாளர் எம்.கே. நாராயணன்: நமக்கு தொழிற்சாலையும் வேண்டும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் மேலாண்மை இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

5 days ago

மற்றவை

5 days ago

மற்றவை

8 days ago

மற்றவை

9 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

25 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்