தா
ய்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற யோகா போட்டியில் தங்கம் வென்று, காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி மிஸ்பா நூருல் ஹபிபாவுக்கு அப்போட்டியில் பங்கேற்கச் செல்ல பணமில்லை. மற்றுமொரு சர்வதேச சாதனையை அவர் நிகழ்த்த வேண்டும் என்பதற்காக காமன்வெல்த் காத்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முகம்மது நசிருதீன் - ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மூத்த மகள்தான் மிஸ்பா நூருல் ஹபிபா. குற்றாலம் செய்யது ஹில் வியூ நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 2-ம் வகுப்பு படித்தபோது யோகாவில் ஆர்வம் ஏற்பட்டது. அதுமுதல் யோகாசனங்களை கற்கத் தொடங்கியவருக்கு, குற்றாலம் குடியிருப்பை சேர்ந்த கே.எஸ்.குருகண்ணன்தான் குருநாதர்.
பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து மிஸ்பா அசத்தினார். இதனால் மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பரிசுகளை குவித்த இவர், நாட்டு நலப்பணித் திட்ட சாதனையாளர் விருது, அரசு நேரு யுவகேந்திரா விருது, சிவகுரு இளைஞர் விளையாட்டு மன்ற சாதனையாளர் விருது, யோகா நட்சத்திர விருது, யோகா பாரதி விருது என்று பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும், டெங்கு விழிப்புணர்வு, வனவிலங்கு, இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, ஒருமைப்பாடு, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி அவ்வப்போது யோகாசனங்களை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
இவரது சாதனைக்கு ஒரு மகுடமாக, ஆசிய அளவிலான அமெச் சூர் ஆசியன் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் தாய்லாந்தில் கடந்த மாதம் 26, 27-ம் தேதிகளில் நடைபெற்ற யோகா போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றிருக்கிறார்.
இந்த அமைப்பின் மூலம் விரைவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்.
சாதாரண கூலித் தொழிலாளியான மிஸ்பாவின் தந்தைக்கு மகளை அனுப்ப ஆயிரக்கணக்கில் பணத்தை திரட்டுவது இயலாத காரியம் என்பதால், போட்டிக்கு அனுப்ப வழியின்றி கையை பிசைந்து நிற்கிறது மொத்த குடும்பமும். ஏற்கெனவே தாய்லாந்து போட்டிக்கும் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் மகளை அனுப்பி வைத்ததன் மூலம் தந்தை நசிருதீனுக்கு ரூ.1 லட்சம் வரை கடன். உள்ளூர் ஜமாத்தார்கள் ரூ.60 ஆயிரம் வரையில் திரட்டி கொடுத்த ஆறுதல் உதவியால்தான் மிஸ்பாவின் தாய்லாந்து பயணம் சாத்தியமானது.
இப்படி இருக்க மீண்டும் கடன் பெற்று மகளை காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பும் நிலையில் நசிருதீன் இல்லை. இதனால் அரசு மற்றும் தனி யார் அமைப்புகளிடம் உதவிகளை கேட்டு வருகிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
“காமன்வெல்த் போட்டியில் இம்மாணவி பங்கேற்க அரசு உதவினால் நிச்சயம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கம் வெல்வார். போட்டி நடக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. எங்கு நடந்தாலும் மிஸ்பாவின் வெளிநாட்டு பயண செலவை அரசு ஏற்று ஊக்கப்படுத்த வேண்டும்” என கோருகிறார் யோகா ஆசிரியர் குருகண்ணன்.
மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாக, குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், இவருக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கட்டணமின்றி கல்வி கற்றுத்தர முன்வந்துள்ளது.
வெறும் பதக்கம் மட்டுமல்ல, அதில் இந்தியாவுக்கான பெருமையும் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து மிஸ்பாவை காமன்வெல்த் போட்டிக்கு அரசு அனுப்ப வேண்டும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago