இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தை கள் மரணமும் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?
சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிக, மிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods)தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நரேன் மற்றும் சந்திர பூஷன் ஆகியோர் தலைமையிலான குழு இதுதொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் இருந்து...
துரித உணவு என்றால் என்ன?
புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது இல்லவே இல்லாத - மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).
இந்தியாவில் அதிகரிக்கும் இறப்பு சதவீதம்
துரித உணவுகளை உண்பதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் 1990-ம் ஆண்டில் மேற்கண்ட நோய்களால் ஏற்படும் இறப்பு 29 சதவீதமாக இருந்தது. இது 2008-ம் ஆண்டு 53 சதவீதமாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு இது 57 சதவீதமாக உயரும்.
மேலும் இந்தியாவில் இதய நோய்களால் ஆண்டுக்கு 35 சதவீதம் பேர் (35 - 64 வயதுக்குட்பட்டோர்) இறக்கின்றனர். தவிர, வளர் இளம் குழந்தைகளின் மரணம், சிறு வயதிலேயே பூப்பெய்தல், தலை பெருத்தல், உடல் எடை அபரிதமாக அதிகரித்தல், மூளை வளர்ச்சி கோளாறுகள் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித் துள்ளது உலக சுகாதார அமைப்பு.
உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation) விடுத்துள்ள அறிக்கையில் தற்போது 40.9 மில்லியனாக இருக்கும் இந்திய நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டு 69.9 மில்லிய னாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2013-ல் உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiology சென்னையில் இருக்கும் 400 பள்ளிகளில் குழந்தைகளிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் 21.5 சதவீதம் பேருக்கு, குறிப்பாக பெரும்பாலும் உடல் எடை அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.
உலகளாவிய அளவில் உணவுக் காக பயன்படுத்தும் உப்பின் அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே 50 சதவீதம் உயர் ரத்த அழுத்தமும், 22 சதவீதம் பக்கவாதமும், 16 சதவீதம் இதய நோய்களும் குறையும் என்கிறது உலக இதயக் கழகம் (World Heart Federation). ஆனால், துரித உணவுகளில் உப்பும் இனிப்பும் 50 சதவீதம் கூடுதலாக இருக்கின்றன. கூடவே, சாயமும், ரசாயனமும்.
அப்பாவிகளின் தேசமா இந்தியா?
துரித வகை உணவு விற்பனை யில் உலகிலேயே அதிக அளவு கோலோச்சியது அமெரிக்காதான். அங்கு கடந்த 2010-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுகாதாரம் மற்றும் பசிக்கொடுமையிலிருந்து விடுபட்ட குழந்தைகளுக்கான சட்டம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு மிச்சேல் ஒபாமா துரித உணவுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்கிறார். இதனால் அங்கு துரித வகை உணவு வியாபாரம் மொத்தமாக படுத்துவிட்டது. இவை தவிர, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பல்வேறு வகைகளில் துரித வகை உணவுகளை தடை செய்துள்ளன. (பார்க்க பெட்டிச் செய்தி) அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது இந்தியா. அப்பாவிகளின் தேசம். அணுவில் ஆரம்பித்து அத்தனை கழிவுகளையும் இங்கு வந்து கொட்டலாம். 2015-16-ம் ஆண்டு களில் இந்தியாவில் துரித வகை உணவுத் தொழில் தற்போது இருப்பதைவிட ஒன்றரை மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைக்கும் விதிமுறைகள்
இந்த நிலையில் கடுமையான விதிமுறைகளை வகுத்து அதனை சட்டமாக்க வேண்டும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம். அதன் பரிந்து ரைகள்:
* கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் 500 மீட்டர் தொலைவுக்குள் துரித வகை உணவு விற்பனை செய்யக் கூடாது.
*தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 வரையும் துரித உணவு வகை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
* மேற்கண்ட விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கவும், துரித உணவு வகை விற்பனையை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் விழாக்களில் கலந்துகொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.
* துரித வகை உணவின் கெடுதல் குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்து பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும்.
* துரித வகை உணவுகளுடன் இலவசமாக பொம்மை, கார்ட்டூன் படங்கள் போன்ற சிறுவர் விளை யாட்டு சாதனங்கள் அளிப்பது தடைசெய்யப்பட வேண்டும்.
* மேற்கண்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
தடை செய்த உலக நாடுகள்!
கனடா, காஸ்டாரிக்கா, லாட்வியா, லூதியானா, மெக்ஸிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் துரித வகை உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், லூதியானா, நியூசிலாந்து, நார்வே, பெரு, போலந்து, ரோமானியா, தென் கொரியா, ஸ்வீடன், தாய்வான், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே ஆகிய நாடுகளில் துரித வகை உணவு விளம்பரங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, மெக்ஸிகோ, பெரு, அமெரிக்கா ஆகிய நாடுகளில் துரித வகை உணவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago