தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்ட விவரம் முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததால், ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் திரேஸ்புரம் பகுதியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மறுநாள் அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால், 13 பேர் பலியாயினர். 102 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் காவல் துறையினருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் உத்தரவிட்டது யார் என்பது தொடர்பான விவரங்கள் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்திலும், திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திலும் (22-ம் தேதி), அண்ணாநகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலும் (23-ம் தேதி) முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு ஏன்?
சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் கொடுத்த புகாரின்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: 22-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.
காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி தடுப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கியும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்துக் கொண்டும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக வந்தனர். காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த அந்த கும்பல், அங்கிருந்த அரசு வாகனங்கள், பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டனர்.இதனால் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், அரசு சொத்துகளுக்கு பெருத்த சேதம் ஏற்படும் என்பதால் துப்பாக்கி பிரயோகம் செய்து கலவரக்காரர்களை கலைக்க நான் உத்தரவிட்டேன். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்
காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே ஒரு கும்பல் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கி, அதன் டிரைவரை தாக்கினர். தடுக்க முயன்ற காவலர்களையும் தாக்கினர். இதனால் காவல் துறையினர் அங்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஒரு கும்பல் ஸ்டெர்லைட் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து தீ வைப்பில் ஈடுபட்டது. அங்கு உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதை தடுக்க போலீஸார் அங்கேயும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது என அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரேஸ்புரம் சம்பவம்
இதேபோல், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மண்டல துணை வட்டாட்சியர் எம்.கண்ணன் கொடுத்த புகாரின் பேரில், வடபாகம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
அதில், கடந்த 22-ம் தேதி மாலை 3.30 மணியளவில் திரேஸ்புரம் பிரதான சாலையில் ஒன்று கூடிய கும்பல், வடக்கு கடற்கரை சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகேயுள்ள காவலர் குடியிருப்புக்குள் புகுந்து கம்பு, அரிவாள், பெட்ரோல் குண்டு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் துப்பாக்கி பிரயோகம் நடத்தி கலவர கும்பலை கலைக்க நான் உத்தரவிட்டேன். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜேசுபாலன் மனைவி ஜான்சி(40), மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என கூறப்பட்டுள்ளது.
அண்ணாநகர் சம்பவம்
இதேபோல் அண்ணாநகர் பகுதியில் மே 23-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கோட்ட கலால் அலுவலர் (மது விலக்கு) சந்திரன் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காளியப்பன் என்ற இளைஞர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்த துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்ட தகவல் தற்போது வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago