தொழில்நுட்ப கோளாறு என்ற பெயரால் கடந்த சில வாரங்களாக செல்போன் சேவையில் பெரிய அளவில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வணிகர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119 கோடியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 9.18 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், ஏர்செல் நிறுவனம் மட்டும் 1.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. அதன் சேவை முடங்கியதால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாறியுள்ளனர்.
இந்நிலையில், அண்மைக் காலமாக பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்படுவது, எதிர்முனையில் இருப்பவரின் குரல் சரியாக கேட்காமல்போவது, அவசரத்துக்கு யாரையாவது அழைத்தாலும் இணைப்பு கிடைக்காமல் இருப்பது மட்டுமின்றி, அழைத்தவரின் குரலே எதிரொலிப்பது போன்ற சேவைக் குறைபாடுகள் இருக்கின்றன. இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் கட்டணம் பிடிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் வேதனைப்படுகின்றனர். பிஎஸ்என்எல் இணைப்புக்கு ஏர்டெல் வழியாக அழைக்கும்போதுதான் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக்ஷன் குரூப் (சிஏஜி) இயக்குநர் சரோஜா: கால் டிராப் ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு அழைப்புக்கு ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும் என்று ‘டிராய்’ கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ‘கால் டிராப்’ ஆவதற்கு அபராதம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சொல்போன் நிறுவங்களுக்கு லாபம் தேட வசதியாகிவிட்டது. குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க் பலத்தை அறிந்துகொள்ளும் வழிமுறைகளை நிறுவனங்கள் ஏற்படுதித் தர வேண்டும். இதன்மூலம் சிறந்த நெட்வொர்க்கை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்வார்கள்.
கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன்: கால் டிராப்பை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயை பெருக்கும் உத்தியாகவே கருதுகிறேன். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ‘டவர்’கள் அமைப்பதில் இந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பாதிக்கப்படுவோர் அவர்கள் மீது புகார் தெரிவிக்கவோ, குழுவாக சேர்ந்து வழக்கு தொடரவோ விரும்பினால் 044-24494575 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் வழிகாட்ட தயாராக உள்ளோம்.
சுரேஷ் ராஜசேகர், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்: இரண்டு, மூன்று முறை தொடர்ந்து அழைத்தால் மட்டுமே பேச முடிகிறது. ஏர்டெல் சிம் வைத்திருப்பவர்கள் அழைத் தால் அவர்கள் பேசுவது அவர்களுக்கே திரும்ப கேட்கிறது. அழைப்பு வந்தது தெரிந்து, நான் மீண்டும் திரும்ப அழைத்தால் மட்டுமே தெளிவாகப் பேச முடிகிறது. இது பெரிய அளவில் மோசடியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
வே.ரமேஷ், ஏர்டெல் வாடிக்கையாளர்: பேசிக்கொண்டிருக்கும்போதே பாதியில் கால் கட் ஆகிவிடுகிறது. பல நேரங்களில் எனக்கு டவர் இருந்தாலும் மற்றவர்கள் அழைக்கும்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக அவர்களுக்கு வருகிறது. புகார் சொன் னால் எந்த பதிலும் தருவதில்லை. எனவே, தீர்வு கிடைக்கும் வரை புதிய சிம் கார்டுகளை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும்.
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் (பிஎஸ்என்எல்) மூத்த துணைத் தலைவர் சி.கே.மதிவாணன்: ஒவ்வொரு நிறுவனங்களும் பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதற்காக பாயின்ட்ஸ் ஆஃப் இன்டர் கனெக்ட்’ என்ற அலைவரிசை செல்லும் பாதையை அதிகரிக்க வேண்டும். இதற்காக, தனியார் நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் பணம் செலுத்தி கூடுதல் பாயின்ட் ஆஃப் இன்டர் கனெக்ட்டை (POI) பெறுவதில்லை. இதனால், தனியார் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு இணைப்பு கிடைப்பதில்லை. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனமும் கூடுதல் பாயின்ட் ஆஃப் இன்டர் கனெக்ட்டை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏர்டெல் நிறுவனம் விளக்கம்: கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 4,500 புதிய ‘மொபைல் பிராட்பேண்ட் சைட்’டுகளை நிறுவியுள்ளோம். நாங்கள் கூடுதல் பாயிண்ட்களை கேட்டாலும் பிஎஸ்என்எல் நிறுவனம், குறைவாகவே அளிக்கிறது. இதனால்தான், பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் சிம் கார்டு வாங்குவதற்கு முன்பே தங்கள் பகுதியில் எந்த அளவுக்கு சிக்னல் உள்ளது, 4ஜி சேவை உள்ளதா என்பது போன்ற விவரங்களை www.airtel.in/opennetwork/ என்ற இணையதளத்தில் தங்கள் பகுதி பின்கோடை பதிவிட்டு தெரிந்துகொள்ளலாம் என்றார்.
நாங்கள் கூடுதல் பாயிண்ட்களை கேட்டாலும் பிஎஸ்என்எல் நிறுவனம், குறைவாகவே அளிக்கிறது. இதனால்தான், பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago