இளைஞரை கைது செய்யாமல் இருக்க உதவி ஆணையர் பேரம் பேசுவதாக வலைதளங்களில் பரவும் ஆடியோ; தன் குரல் அல்ல என மறுப்பு: விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் முத்தழகு, ஒரு இளைஞரிடம் போனில் பேரம் பேசுவது போன்ற ஒலிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அது தன் குரல் அல்ல என்று அவர் மறுத்துள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க சென்னை காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை சரக உதவி ஆணையர் முத்தழகு, ஒரு இளைஞரிடம் போனில் பேரம் பேசுவதாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது 3 ஆடியோக்கள் பரவி வருகின்றன. இந்தப் பின்னணி குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:

சென்னை தேனாம்பேட்டை கணபதி காலனியில் வசிப்பவர் கார்த்திக் சேதுபதி (38). இவர் ராமநாதபுரம் சமஸ்தான வாரிசுகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஆனால், சமஸ்தானத்தைச் சேர்ந்த சிலர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், சிலர் கூலிப்படை மூலம் இவரைக் கடத்தி மிரட்டி, ரூ.33 கோடி மதிப்பிலான பொருட்களைப் பறித்துள்ளனர். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரகாஷ், ராஜிசுந்தர், நரேஷ் நாராயணன், அருண் பிரசாத், குருநாதன், சுதன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த சங்கராத்மஜன், சுந்தர், சரவணன் ஆகிய 3 பேரும் பிப்ரவரி 15-ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்தனர். இதில், சுந்தர் மீது கோயம்புத்தூரில் ஹேமலதா என்பவரிடம் மோசடி செய்ததாக வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் சுந்தரை கைது செய்ய தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஏதோ காரணங்களால் அவர் வழக்கை இழுத்தடிப்பதாகக் கூறப்படுகிறது.

சுந்தரை கைது செய்யாமல் இருக்க, அவரது தம்பியான பிரகாஷுடன் உதவி ஆணையர் முத்தழகு பேரம் பேசும் ஆடியோதான் தற்போது வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தாதா ராக்கெட் ராஜா கடந்த 7-ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவருடன் சுந்தர், பிரகாஷ், ராஜி சுந்தர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

உதவி ஆணையர் முத்தழகு உதவியுடன்தான் அவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்ததாக தகவல் வெளியானது. இந்தக் காழ்ப்புணர்ச்சியில்தான், அவருடன் ஏற்கெனவே பேசி பதிவு செய்து வைத்திருந்த உரையாடல் ஆடியோவை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் கூறு கின்றனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் முத்தழகிடம் கேட்டபோது, ‘‘அந்த ஆடியோவில் உள்ளது என் குரலே அல்ல. உரையாடலில் இருக்கும் பிரகாஷ், அவரது அண்ணன் சுந்தர் உட்பட 4 பேர் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட நான் காரணமாக இருந்தேன் என்பதால், என்னைப் பழிவாங்க போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளனர்’’ என்றார்.

இதற்கிடையில், ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட் டுள்ளார்.

‘‘அந்த 5 லட்சத்தை வச்சு நான் டீ குடிக்கவா?’’

சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள உரையாடல்:

‘‘சார், அமோண்ட் எவ்ளோன்னு சொன்னா, ரெடி பண்ணி தர்றேன்’’

‘‘கோவை ஹேமலதா வழக்குல நான்தான் சிறப்பு அதிகாரி. நானோ, என் டீமோ சீக்கிரமே கோயம்புத்தூர் வந்து, உங்க அண்ணனை கைது செய்யப்போறோம்.’’

‘‘சார், ஒரு 5 லட்சம் ரெடி பண்ணி கொண்டு வரவா?’’

‘‘அந்தப் பணத்தை உங்க போலீஸ் அல்லது அந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார்கிட்ட கொடு. இந்த 5 லட்சத்த வச்சி நான் டீ குடிக்கவா?’’

‘‘இல்ல சார், இப்போதைக்கு இதை எடுத்துட்டு வர்றேன். நீங்க என்ன எதிர்பாக்குறீங்கன்னு சொன்னா, ரெடி பண்ணலாம் சார்.’’

‘‘மெட்ராஸுக்கு வந்து என்னைப் பார்க்கல. அந்த இன்ஸ்பெக்டரை மட்டும் பார்த்துட்டு போற. என் சாதிக்காரனா நீ? ஒரு மரியாதை வேணாம்.. அன்னிக்கே உங்க மாமனை தூக்கிப் போட்டுட்டு வந்து, ரோட்டுலயே மிதிச்சு நாய் மாதிரி இழுத்துட்டு வந்து ரிமாண்ட் பண்ணி, லாக்கப்புல போட்டு, பேப்பர்ல போட்டோ வரவச்சிருப்பேன். கோயம்புத்தூர் எஸ்.பி. பெருமாள் நான் சொன்னா கேட்பார். சேலம் கமிஷனர் என் குருநாதர்தான். நான் என்ன சொன்னாலும் கேப்பாங்க. ஆனா, அதுமாதிரி ஏதாச்சும் செஞ்சேனா? நீங்கள் பண்ணதெல்லாம் எனக்கு பிஸ்கெட்டுடா.. உன் வயசு என் சர்வீஸ்..’’

‘‘சாரி சார், நீங்க பறிமுதல் செய்து வச்சிருக்கிற என் அண்ணனின் செல்போன் பாஸ்வேர்டு சத்தியமா எனக்கு தெரியாது சார்.’’

இவ்வாறு அந்த 3 ஒலிப்பதிவுகளிலும் உரையாடல் நீள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

2 days ago

மற்றவை

13 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

25 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்