ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 10 கிராம மக்கள் சாலை மறியல்

By ரெ.ஜாய்சன்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, 10 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்க பணிகளை தடுக்கக் கோரியும் அ.குமரெட்டியாபுரம் மக்களின் போராட்டம் நேற்று 57-வது நாளாக தொடர்ந்தது. பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், மீளவிட்டான், வடக்கு சங்கரப்பேரி, 3-ம் மைல், தபால் தந்தி காலனி கிராம மக்களும் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

நேற்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றபோது, சில்வர்புரம், பாலையாபுரம், சுப்பிரமணியபுரம், மடத்தூர், முருகேசன் நகர், தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தபால் தந்தி காலனி ஆகிய 10 கிராம மக்கள் அங்கு திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீஸார் தடுப்புகளை போட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் மட்டும் மனு அளிக்கச் சென்றனர்.

திடீர் மறியல்

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், “ஆட்சியர் இங்கே வந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்க வேண்டும்” என கோஷமிட்டனர். பின்னர், திடீரென தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே போக்குவரத்து முடங்கியது. இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சோரீஸ்புரம், மடத்தூர் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தை மக்கள் கைவிடவில்லை. 4 சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள், போராட்ட குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. ஆபத்தை உணர்ந்த போலீஸார், முன்னால் நின்ற டேங்கர் லாரியை திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொண்டனர். ஓட்டுநர் லாரியை நகர்த்தியபோது, ஆத்திரமடைந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர், கல் எறிந்ததில் லாரி கண்ணாடி சேதமடைந்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் லாரிகளை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். அங்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஸ்டெர்லைட் விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்டது.

ஆட்சியர் பேச்சுவார்த்தை

பகல் 1.10 மணியளவில் ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் ஆகியோர், மக்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆட்சியர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு புகார் மனுக்களை மக்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். அந்த மனுக்கள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மனுக்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தேவை எனில், நிச்சயம் அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆலையால் மக்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்” என்றார்.

ஆட்சியரின் உறுதிமொழியை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

10 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்