மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சந்தித்த சவால்கள்: 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூஜை செய்வோருக்கு கடும் தண்டனை விதிப்பு

By என்.சன்னாசி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சங்க காலம் முதற்கொண்டு பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது என இக்கோயில் குறித்த ஆய்வாளர் அம்பை மணிவண்ணன் தெரிவித்தார்.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது என தமிழ்ச் சங்க வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குதான் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பொறுத்தவரை நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களைக் கொண்டது.

இக்கோயிலில் சம அளவில் முக்கியத்துவம் பெற்ற மீனாட்சி அம்மன் சன்னதியும், சுந்தரேசுவரர் சன்னதியும் தனித்தனியே அமைந்துள்ளன. சக்தியின் அம்சமாக அம்மன் குடிகொண்டிருக்கும் முக்கிய இடங்கள் 3 உண்டு. ஒன்று காஞ்சியில் காமாட்சி, மற்றொன்று காசியில் விசாலாட்சி, மூன்றாவதாக மதுரையில் மீனாட்சி என்பர்.

புராண அடிப்படையில் உமாதேவி மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்தார். மதுரைக்கு அரசியாக பட்டம் சூட்டி, ஆட்சி புரிந்து, திக்விஜயம் செய்து கயிலாயமலைக்குச் சென்று, சிவபெருமானைப் பார்த்த பிறகு, மதுரை வந்து அவரை மணம் புரிந்ததால் இங்கு மீனாட்சிக்கே வழிபாட்டில் முதலிடம் அளிக்கப்படுகிறது.

முதல் தரிசனம் மீனாட்சிக்கே

தில்லை (சிதம்பரம்) என்றால் சிவபெருமான் ஆட்சி, மதுரை என்றால் மீனாட்சியின் ஆட்சி. இதனால் விளையாட்டுக்கு ஒருவரிடம் கூறும்போதுகூட ‘உங்கள் வீட்டில் மீனாட்சியா? அல்லது சிதம்பரமா?’ எனக் கேட்பதும் உண்டு. மதுரையில் இன்றும் வழிபாட்டில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பக்தர்கள் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு, பின்னரே சுந்தரேசுவரரை வழிபடுகின்றனர்.

அந்த அளவுக்கு மதுரை என்றாலே மக்களும், கோயிலும் நெருங்கிய தொடர்புடன் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வட மாநில பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

கிழக்கு கோபுரம் எனப்படும் ராஜகோபுரம் பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. இதையொட்டி வீரவசந்தராயர் மண்டபம் அருகில் உள்ள கடைகளில்தான் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சங்க காலம் முதலே பல்வேறு சவால்களைச் சந்தித்து வந்திருக்கிறது. இதுகுறித்து மேலூர் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியரும், இக்கோயில் குறித்த ஆய்வாளருமான அம்பை மணிவண்ணன் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்கோயில் பல்வேறு மன்னர்களால் பல்வேறு கால கட்டங்களில் சிறிது சிறிதாகக் கட்டி தற்போது பல்வேறு மண்டபங்களுடன் கூடிய பரந்து விரிந்த மிகப் பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. இக்கோயிலை வைத்தே மதுரை நகரம் உருவாகி இருக்கிறது. தாமரையின் நடுவில் உள்ள மொட்டு கோயில். சுற்றியுள்ள இதழ்கள் தெருக்களாக அமையப் பெற்றதே மதுரை நகரம்.

ஆரம்பத்தில் கோயில் மண்ணால் கட்டப்பட்டு மக்கள் வழிபட்டனர். அப்போது சாதாரண முறையில் சுந்தரேசுவரருக்கு மட்டுமே கோயில் இருந்தது. ஞானசம்பந்தர் கி.பி. 7-ம் நூற்றாண்டில் மதுரைக்கு வந்தபோது, மீனாட்சி அம்மனுக்கு தனி கோயில் இல்லை. காலப்போக்கில்தான் கல்லால் ஆன கோயில் உருவாக்கப்பட்டது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குலசேகரபாண்டிய மன்னரால் மீனாட்சிக்கு கோயில் எழுப்பப்பட்டது.

இஸ்லாமிய மன்னர் மாலிக் கபூர் படையெடுப்பின்போது, 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து 48 ஆண்டுகள் மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி இருந்தது.

பூஜை செய்தால் தண்டனை

அப்போது சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் கோயில் பூஜைகளுக்கு தடை இருந்தது. பூஜை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.

14-ம் நூற்றாண்டின் இறுதியில் குமார கம்பனன் என்ற மன்னர் ஆந்திரா பகுதியில் இருந்து மதுரைக்கு படையெடுத்தார். அவரது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூஜை, தீபாராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், கோயில் இடிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது.

இந்நிலையில் கிருஷ்ணதேவராயர் அனுப்பிய விசுவநாத நாயக்க மன்னர் மதுரைக்கு வந்தார். அவரது காலத்தில்தான் பாண்டியர் காலத்தில் எப்படி கோயில் அமைந்து இருந்ததோ அதேபோல பழமை மாறாமல் மீனாட்சி அம்மன் கோயில் கருவறை உள்ளிட்ட மண்டபங்கள் கட்டப்பட்டன.

முழுவடிவம் பெற்ற கோயில்

விசுவநாத நாயக்கர் சுந்தரேசுவரர் - மீனாட்சி அம்மன் கோயில்களை இணைத்து கருவறை, அர்த்த மண்டபம் உட்பட பல்வேறு மண்டபங்கள் கட்டினார். இதைத் தொடர்ந்து ராணி மங்கம்மாள் மற்றும் திருமலை மன்னர் உள்ளிட்ட நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது, மீனாட்சி கோயில் முழு வடிவம் பெற்றது.

தற்போது தீ விபத்தை சந்தித்துள்ள கோயிலின் கிழக்கு கோபுரம் சுந்தரபாண்டியன் காலத்திலும், மேற்கு கோபுரம் பராக்கிரம பாண்டிய மன்னன் காலத்திலும் கட்டப்பட்டது. இதுபோன்ற பல்வேறு சோதனை, சவால்களைக் கடந்து வளர்ந்த இக்கோயிலில் தீ விபத்து சம்பவம் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதத்தை தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

10 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்