தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளத்தில் மீனவர் அமைத்த மிதவை கூண்டில் வளர்ந்த 40 கிலோ முதல் 24 கிலோ வரை எடையுள்ள கடல் விரால் மீன்கள், மீன் குஞ்சுகள் உற்பத்திக்காக மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்திடம் ஒப்படைக்கப் பட்டன.
தூத்துக்குடி அருகேயுள்ள சிப்பிகுளம் கடலோர கிராமத்தை சேர்ந்தவர் ரா.ரெக்சன் (37). ஐடிஐ படித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடலில் மிதவை கூண்டுகள் அமைத்து சிங்கி இறால், கடல் விரால், கொடுவா மீன்களை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
கடல் விரால் வளர்ப்பு
சிப்பிகுளம் கடலோர பகுதியில் அமைத்த இரண்டு மிதவை கூண்டுகளில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடல் விரால் மீன்களை (COBIA FISH) ரெக்சன் வளர்த்தார். இரண்டு கூண்டுகளிலும் 750 கடல் விரால் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கடல் விரால் மீன்களை பொறுத்தவரை 4 முதல் 6 கிலோ எடை அளவுக்கு வளர்ச்சி அடைந்ததும் அறுவடை செய்யப்படும். இந்த அளவு தான் ஏற்றுமதிக்கு உகந்த தரமாகும். இதன்படி கூண்டுகளில் வளர்க்கப்பட்ட கடல் விரால் மீன்களை 2016-ம் ஆண்டு மே மாதம் ரெக்சன் அறுவடை செய்து விற்பனை செய்தார்.
இந்நிலையில் கடல் விரால் மீன் குஞ்சுகளுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது. சில கடல் விரால் மீன்களை சிறிது காலம் தாய் மீன்களாக வளர்த்து மீன் குஞ்சுகள் உற்பத்திக்காக தருமாறு ரெக்சனிடம் ராமநாதபுரம் மாவட்டம் மண்பத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டனர்.
8 தாய் மீன்கள்
இதன்பேரில் 8 கடல் விரால் மீன்களை மட்டும் பிடிக்காமல் ஒரு கூண்டில் போட்டு அவர் வளர்த்து வந்தார். இரண்டரை ஆண்டுகளாக அவற்றுக்கு உணவு போட்டு கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு சென்றனர்.
இந்த தாய் மீன்கள் இரண்டரை ஆண்டுகளில் ழுமையாக வளர்ச்சியடைந்தன.
இதையடுத்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் சிப்பிகுளம் வந்து 8 கடல் விரால் மீன்களையும் பிடித்து பாதுகாப்பாக மண்டபம் ஆராய்ச்சி நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கடலில் இருந்த மிதவை கூண்டு முதலில் கரைக்கு இழுத்து வரப்பட்டது. பின்னர் சிறிய வலை மூலம் ஒவ்வொரு மீனாக பிடித்து, கரையில் லாரியில் வைக்கப்பட்டிருந்த 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியில் உயிரோடு போடப்பட்டன. ஒரு தொட்டியில் 2 மீன்கள் மட்டுமே போடப்பட்டு பத்திரமாக மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
40 கிலோ எடை
இந்த 8 கடல் விரால் மீன்களில் ஒன்று 40 கிலோ, மற்றொன்று 37 கிலோ எடை கொண்டவையாகும். மற்றவை 24 முதல் 35 கிலோ வரை எடை இருந்தன. 40 கிலோ எடை என்பது சாதனை அளவாக கருதப்படுகிறது.
கடல் விரால் மீன்களை பொறுத்தவரை 50 முதல் 60 கிலோ எடை வரை வளரக்கூடும். ஆனால், மீனவர்கள் வலையில் அரிதாகத்தான் 40 கிலோவுக்கு மேல் எடையுள்ள கடல் விரால் மீன் பிடிபடும்.
மிதவை கூண்டில் இரண்டரை ஆண்டுகளில் 40 கிலோ எடைக்கு இம்மீன்கள் வளர்ந்திருப்பது பெரிய விஷயம் என மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மீன் குஞ்சு உற்பத்தி
இதுகுறித்து ரெக்சன் கூறும்போது, ‘‘கடல் விரால் மீன்களை பொறுத்தவரை 4 முதல் 6 கிலோ எடை வரை தான் கூண்டில் வளர்ப்போம். அப்போது தான் எங்களுக்கு லாபம். தற்போது கடல் விரால் மீன் குஞ்சுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, இந்த தாய் மீன்களை வளர்த்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்துக்கு விற்பனை செய்துள்ளேன். அவர்கள் விலை கொடுத்து தான் மீன்களை என்னிடம் வாங்கியுள்ளனர். இரண்டரை ஆண்டுகள் வளர்த்துள்ளதால் பராமரிப்பு செலவு சற்று அதிகம் தான். இருப்பினும் நல்ல நோக்கத்துக்காக அவைகளை வளர்த்துக் கொடுத்துள்ளேன்.
இந்த மீன்களை அவர்கள் ஆய்வகத்தில் வைத்து ஆண், பெண் மீன்களை அடையாளம் கண்டு குஞ்சு பொரிக்கச் செய்வார்கள். இன்னும் 3 மாதங்களில் மண்டபம் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் விரால் மீன் குஞ்சுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
மற்றவை
10 days ago
மற்றவை
18 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago