ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 சதவீதம் அவர்களது நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 சதவீதம் பல்வேறு சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும், அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆங்கிலேய அரசாங்கம்.
அப்போது, ஆங்கிலேய ஆட்சியில் நிலப்பரப்புகளை காடுகள், குடியிருப்பு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், விவசாய நிலங்கள் என்று வகைப்படுத்த இங்கிலாந்தில் இருந்து நில அளவையர்களை வரவழைத்து இந்தியா முழுவதும் சர்வே செய்தனர். அவர்கள் இந்தியாவை நில அளவை செய்து, அறிக்கை சமர்ப்பித்தனர். சிறப்பாக பணிபுரிந்தவர்களை பிரிட்டிஷ் அரசு கவுரவித்தது. அந்த வகையில் இமயமலை சிகரங்களை அளவை செய்த எவரெஸ்ட் என்பவரின் பெயரை, அதன் ஒரு சிகரத்துக்கு சூட்டினர். அதுபோல், லாம்டன் என்பவரின் பணியை பாராட்டி கவுசிகா நதி உற்பத்தியாகும் குருடி மலைக்கு ‘லாம்டன் ஹில்’ என பெயரிட்டனர்.
அந்த காலக்கட்டத்தில் இந்தியாவை சர்வே செய்ய இங்கிலாந்தில் இருந்து வந்த குழுக்களில் பெஞ்சமின் ஸ்வைன் வார்டு (1786-1835), பீட்டர் அயர் கன்னர் (1794-1821) ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் 1818-ம் ஆண்டு திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களை சர்வே செய்துள்ளனர். இந்த சர்வேயில் தாங்கள் பார்த்த விஷயங்களை, அனுபவங்களை குறிப்பிட்டு ‘Memoir of the survey of the thiruvangoor and kochin state’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளனர். இவர்கள் ஆய்வு செய்த காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் சபரிமலை இருந்தது.
அதன்பிறகு இடுக்கி மாவட்டத்திலும், தற்போது பத்தனம்திட்டா மாவட்டம் பிரித்த போது அதில் சபரிமலை இடம் பெற்றுள்ளது. அந்த காலக்கட்டத்தில் சபரிமலைக்கு சரியான பாதை வசதி கிடையாது. கரடு முரடான கற்களும், முட்களும் நிறைந்த பாதைகளையும், மலைக் குன்றுகளையும் கடந்து பெஞ்சமின் ஸ்வைன் வார்டு, பீட்டர் அயர்கன்னர் ஆகியோர் சபரிமலையை அடைந்துள்ளனர். அங்குள்ள பெருநாடு, நிலக்கல் மலைப்பகுதிகளில் தங்கி ஆய்வு செய்தபோது மலைமக்களின் வழிபாட்டுத் தலமாக ஒரு சிறிய கோயிலை (சபரிமலை) பார்த்ததாக அவர்கள் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில் அவர்கள் சபரிமலையை ‘சவரி முல்லா’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக சபரிமலை பற்றிய அரிய தகவல்களை வைத்திருக்கும் தேசிய விருதுபெற்ற ஓய்வுபெற்ற கோவையைச் சேர்ந்த தபால் ஊழியர் ஹரிஹரனிடம் பேசினோம். ‘‘ஆரம்பத்தில் சபரிமலை சவரி முல்லா என்றே அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் சபரிமலை என அழைக்கத் தொடங்கியுள்ளனர். நிலக்கல் பகுதியில் இருந்து கிழக்கே 5 ½ மைல் தொலைவில் தற்போதைய சபரிமலையான சவரி முல்லா அமைந்துள்ளது. மிகவும் செங்குத்தான ஒழுங்கற்ற கற்கள் நிறைந்த கடினமான வழிகள் இருந்ததை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மலையடிவாரத்தில் உள்ள பம்பைக்கு செல்லவும் மிகவும் கரடு முரடான ஒத்தயடிப் பாதை இருந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் ஆனவட்டம் கணவாய் வழியாக சபரிமலை கோயிலுக்குச் செல்ல மரங்கள் கொண்டு பாலங்களை செய்ததையும் அவர்கள் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். கோயில் அமைந்துள்ள பகுதி, சிறிது தாழ்வான சமவெளி இடத்தில் இருந்ததால் கற்களை கொண்டு அதை உயர்த்திக் கட்டி உள்ளனர். அப்போதே கோயிலில் கிரானைட் கற்களை கொண்டு 18 படிகளை அமைத்துள்ளனர். 50 அடி சதுரத்தில் உறுதியான சுவரை எழுப்பியுள்ளனர்.
அந்த சிறிய கோயிலின் மேற்கூரை காப்பர் (தாமிர) உலோகத்தால் வேயப்பட்டிருந்ததாக அவர்கள் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது ஜனவரி 12-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் வரை விழா கொண்டாடுவதாகவும், சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பொதுமக்கள் அப்போது வந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சபரிமலை சவரி முல்லாவாக இருந்த காலத்தில் இருந்தே 18 படிகளுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்திய கலாச்சாரம் இருந்துள்ளது. சவரி முல்லாவுக்கு குக்காடு டிவிஷனில் இருந்து கோயிலில் பணிபுரிவதற்காக ஊழியர்கள் வந்துள்ளனர்.
அவர்களில் ஒரு பிராமணர், இரண்டு நாயர் சமூகத்தினர் கோயில் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மிகவும் எளிதாக வர முடியாத பருவகாலங்கள், விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் பணிமுறை மாற்றப்பட்டுள்ளனர். யானைகள் சர்வ சாதாரணமாக உலா வந்த பகுதியான சவரி முல்லா, மக்கள் எளிதில் அடைய முடியாத இடமாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோயிலுக்கு 22 மைல்கள் மேற்கே அமைந்துள்ள குக்காடு, எசமா குட்டி போன்ற பகுதிகளுக்குச் செல்ல அடர்ந்த வனங்களையும், நீர் பாதைகளையும் கடந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சவரி முல்லாவின் வடக்குப் பகுதி சற்று கீழாக இறங்கு பகுதியில் பள்ளத்தாக்கில் இருந்துள்ளது. அங்கு காட்டெருமைகள், புலிகள் போன்ற விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததை பார்த்ததாக குறிப்பிட் டுள்ளனர். இக்கோயிலின் வருமானத்தை விட செலவு அதிகம் ஏற்பட்டதால், சமஸ்தானம் அதை ஈடுசெய்து வந்துள்ளது. அவர்கள் குறித்த எல்லைகள்தான் இன்று வரை சபரிமலை நிலப்பரப்புகளை அடையாளப்படுத்துகின்றன என அவர் தெரிவித்தார்.
இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். சபரிமலை என்பது சவரிமுல்லா என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?
முக்கிய செய்திகள்
மற்றவை
1 day ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago