‘‘வணக்கம்..நான் செல்வகுமார் பேசுறேன்’’

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

‘‘வணக்கம், நான் செல்வகுமார் பேசுறேன்..’’

- திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் மத்தியில் லேசாகப் பரவத் தொடங்கிய இந்த குரல், மெல்ல வலுப்பெற்று, வடக்கே சென்னை, தெற்கே குமரி என தமிழகம் முழுவதும் அதிதீவிர முன்னெச்சரிக்கை குரலாக மாறி, ‘வாட்ஸ்அப்’பில் கரையைக் கடந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

கடந்த மழை காலத்தில் தினமும் வானிலையை கணித்து மழை, புயல், வெயிலின் அளவீட்டைச் சொல்லி பிரபலமடைந்த அந்த ‘கட்டைத் தொண்டை’ குரல், ஆசிரியர் செல்வகுமாருடையது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசலில் வசிக்கிறார். மன்னார்குடி அடுத்த செருமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே, வானிலையில் நிலவும் மாற்றங்களை மிக துல்லியமாக கணித்துச் சொல்வதில் கெட்டிக்காரர்.

புயல்களுக்கான பெயர்களை சர்வதேச வானிலை ஆராய்ச்சி நிலையம் தயாரித்துள்ள பெயர் பட்டியல் அடிப்படையில் ‘நடா’ ‘வர்தா’ என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பதற்கு முன்னரே சொன்னவர். அதன் பாதிப்பை மிகச் சரியாக கணித்துச் சொல்லி தமிழகம் முழுவதும் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல, கடந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ‘ஒக்கி’ புயல் குறித்து 10 நாட்கள் முன்பே அறிவித்தார்.

அவரது இந்த வானிலை முன்னறிவிப்பு சேவை தற்போதும் தொடர்ந்து வருகிறது. ரேடியோவில் வானிலை அறிக்கை படிப்பது போல, காலை 5.30, இரவு 7.30 என தினமும் 2 முறை செல்போனில் பேசி பதிவு செய்து, வாட்ஸ்அப் மூலம் 15 ஆயிரம் பேருக்கு தினமும் அனுப்பிவருகிறார்.

இந்த சேவை குறித்து ஆசிரியர்செல்வகுமார் கூறியதாவது:

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வானிலை அறிவிப்பு குறித்த பகுதியில் விளக்கப் படம் ஒன்று போடுவார்கள். தினமும் அந்த படத்தை தவறாமல் பார்ப்பேன். அவர்கள் சொல்வதுபோல, மழை வருகிறதா என்று ஆராயத் தொடங்கினேன். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பணியாற்றியபோது கடல் அலைகள், காற்றழுத்தம் குறித்து அறிந்துகொண்டேன்.

1994 இறுதியில் வந்த சூப்பர் புயலை முன்கூட்டியே கணித்துச் சொன்னேன். அப்பகுதி மக்கள் உட்பட யாரும் அதை நம்பவில்லை. தொடர்ந்து, அந்த புயலில் மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. அந்தச் சம்பவம் வானிலை முன்னறிவிப்பு மீதான ஆர்வத்தை மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான உயிர் கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மிகுந்த பொறுப்புணர்வையும் என்னிடத்தில் ஏற்படுத்தியது.

கடந்த ஓராண்டு காலமாக உயர் அதிகாரிகள் பலரும் என்னைத் தொடர்புகொண்டு கேட்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சியர்களுக்கும் நானே மழை நிலவரத்தை பதிவு செய்து அனுப்பி வருகிறேன். இதற்காக 30 வாட்ஸ்அப் குழுக்கள் வைத்திருக் கிறேன்.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் அண்டை நாடுகளின் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில் அறிவித்து வருகிறேன். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் இருந்தும் மழை அளவு தகவல்களை எனக்கு தந்து உதவுகின்றனர்.

ஏராளமான மீனவர்கள், விவசாயிகள் நான் கூறும் முன்னெச்சரிக்கையைக் கேட்ட பிறகுதான் தங்கள் பணியைத் தொடங்குகின்றனர் என்பதால், மிகுந்த கவனத்துடன் இந்தப் பணியைச் செய்து வருகிறேன்.

இந்திய வானிலை ஆய்வு மையம் நவீன கருவிகளின் உதவியுடன் அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது. அது வெளியிடும் தகவல்கள்தான் எனக்கு அடிப்படை ஆதாரம்’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார் செல்வகுமார்.

இப்போ ஏதாவது வானிலை முன்னெச்சரிக்கைஇருக்கா..? என்று கேட்டதற்கு, தொண்டையை செருமியபடி கூற ஆரம்பித்தார்.

‘‘வணக்கம், நான் செல்வகுமார் பேசுறேன். அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் ஜனவரி 27-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை தமிழகத்தில் மேகமூட்டமும், குளிரும் அதிகம் இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் பரவலாக மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

18 hours ago

மற்றவை

14 days ago

மற்றவை

14 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

18 days ago

மற்றவை

29 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மேலும்