வீதியில் ஒரு பிச்சைக்காரர் ‘’அய்யா... தர்மம் பண்ணுங்கய்யா...’’ வார்த்தைகள் கையேந்தின. எல்லோரிடமும் கையேந்தப்பட்டது. வீதியெங்கும் சிதறிக்கிடந்தன அவருடைய கெஞ்சல் மொழி. இரக்கத்தின் கடைசிப் படிக்கட்டில் கூட யாரும் பயணிக்கவில்லை. எல்லோருடைய கருணையும் திரும்பிப் பார்க்காமல் நடந்தன. ஒரே ஒருத்தர் மட்டும் ‘’தோழரே... என்னிடம் எதுவுமே இல்லை உங்களுக்கு உதவ...’’ என்றார்.
அவரை எறெடுத்துப் பார்த்த அந்தப் பிச்சைக்காரர் ‘’அய்யா எனக்கு நீங்கள் எதுவுமே தரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் என்னையும் பார்த்து ‘தோழரே’ என்று சொன்னீர்கள் அல்லவா? அது போதும் அய்யா...’’ என்றார்.
இது நடந்த கதையாக அல்லது நடக்காத கற்பனையாகக் கூட இருந்துவிட்டுப்போகட்டும்.
ஒரு பிச்சைக்காரரைப் பார்த்து அப்படி ‘தோழரே...’’ என்று சொன்னவர் காரல் மார்க்ஸ் என்பார்கள்.
சக மனிதரை தோழமையுடன் அணுகுவது என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுகிற குணமில்லை. பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞாநிக்கு வாய்த்திருந்தது.
ஞாநி ஒரு நேர்காணலில், ‘’ஆட்டோக்காரர்களுடன் பேசாமல் என்னால் பயணிக்க முடியாது...’ என்று சொல்லியிருந்தார்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆட்டோக்காரர்களுடன் மக்கள் என்ன பேசியிருப்பார்கள்?
‘’சீக்கிரமா போப்பா...’’
‘’இன்னும் எவ்ளோ நேரமாவும் போறதுக்கு?”
என்கிற தொண தொணப்புதான் இருந்திருக்கும். இத்தகைய மனிதர்கள் மத்தியில் ஞாநியின் பேச்சு பழக்கம் நமக்கு முக்கியமானதாகப்படுகிறது.
சக மனிதருடனான நேசிப்பின் அடையாளம்தான் அவருடைய உரையாடல். எந்தவிதமான இறுக்கமும் இன்றி ஒரு நிகழ்த்துக் கலையைப் போன்றது ஞாநியின் உரையாடல் உற்ஸவம்.
சக மனிதர்களுடனான உரையாடல்களற்றப் பொழுதுகளில் அவர் தன்னந்தனியாக புத்தகங்களுடனோ, எழுத்துகளுடனோ உரையாடலைத் தொடர்ந்திருப்பார். உரையாடல்தான் ஞாநி; ஞாநிதான் உரையாடல்.
அவருடைய நாடகம், கட்டுரை, விவாதம் அனைத்திலும் இந்த உரையாடல் உத்தியின் ப்ளூ பிரிண்ட் பொதிந்திருக்கும். ‘செயல்படுத்தியே தீர வேண்டும் என்கிற கட்டாயத்துடன் முன்மொழியப்படுவது ஆலோசனையாகாது’ என்கிற ஆண்டன் செக்காவ்வின் கருத்தியல் எவ்வளவு தூரத்துக்கு உண்மையோ, அது போன்றதொரு தொணிதான் ஞாநியின் உரையாடலிலும் இருக்கும்.
இப்படிச் சொன்னால் ஒரு கவித்துவ அழகு மிளிரும் என்பதனால் சொல்கிறேன்: ‘அன்பின் கூப்பிடு தூரத்தில் இருந்தது ஞாநியின் உரையாடல்’.
வீடு, அலுவலகம், பொதுவெளி எங்கும் உரையாடல் எனும் பெருங்கலை ரொம்பவும் அடி வாங்கிய செம்பாகிவிட்டது. நவீன தகவல் தொழில்நுட்பம் அந்தப் பெருங்கலையை தனது யானைக்காலால் மிதித்து நசுக்கிவிட்டது. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதே ‘கூட்டுக் குடும்பம்’ என்றாகிவிட்ட இந்நாட்களில் ‘ம்’ என்கிற ஒற்றை சொல் கூட உரையாடல்தான் என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.
‘விவாதங்களை உற்பத்தி செய்ய முடியாது’ என்பதில் தெளிவாக இருந்தார் ஞாநி. விவாதங்கள் தானாகத் தோன்ற வேண்டும் என்பதுமே அவரது விருப்பமாக இருந்தது. அதனாலேயே எப்போதும் அவர் உரையாடல்பிரியராக இருந்திருக்கிறார் போல.
இப்போது நினைவுகளைக் கிளறுகிறது – ஓர் உரையாடலில் இடையே ஞாநி சொன்ன ஒரு கதை:
’கொல்லையில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு கோழி, தன்னுடைய கால்களாலும், அலகாலும் குப்பையைக் கிளறிக் கிளறித் தனக்கான உணவைத் தேடிக் கொண்டிருந்தது. கூடவே குஞ்சுகளும்.
அப்போது – அந்தக் கோழிக்கு ஒரு மாணிக்கக் கல் கிடைத்தது. அதைப் பார்த்த குஞ்சுகளுக்கெல்லாம் ஆனந்தம். பேரானந்தம். உடனே, குஞ்சுகளிடம் கோழி சொன்னது: ‘’இந்த மாணிக்கக் கல் ஒரு வைர வியாபாரியின் கையில் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இந்த மாணிக்கக் கல்லால் நமக்கு என்ன பயன்? நமக்கு தானிய மணிகள் கிடைத்திருந்தால், அதுதானே நமக்கு மாணிக்கக் கல்.’’
தனது உரையாடல் கலையின் மூலம் ஞாநி பல குப்பைகளைத் தொடர்ந்து கிளறியவர் – எல்லோருக்குமான தானிய மணிகளுக்காக!
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
3 days ago
மற்றவை
14 days ago
மற்றவை
19 days ago
மற்றவை
26 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago