பங்கு தராதவர்களுக்கு 43 பவுன் ராஜதண்டம்!: இது.. மன்னர் உத்தரவு

By எஸ்.நீலவண்ணன்

ப்போதுபோல கடந்த காலங்களிலும் பெரிய அளவில் இயற்கைச் சீற்றங்கள் வந்தனவா? மன்னராட்சிகளில் அவற்றை எப்படி கையாண்டனர் என்று இந்திய தொல்லியல் துறை யின் தென் மண்டல துணை கண்காணிப்பாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான முனைவர் கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்துள்ளார். அதில் பல சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி அவர் கூறியதாவது:

புராண காலம் தொடங்கி சங்க காலம், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர பேரரசு, நாயக்கர் அரசு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களிலும் பஞ்சம், வறட்சி, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புராண காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால், நளமகாராஜரின் தங்கை நல்லதங்காள் தனது 7 பெண் குழந்தைகளை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதை கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.

சங்க காலமான கி.பி. 300-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை ‘பெரும்வெள்ளங்கொண்டு ஊரும்போகமும் அழிந்து, அர்த்தனப்பட்டு’ என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. அப்போது பவுத்த துறவி மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற அட்சயப் பாத்திரம் மூலம் மக்களின் பசியைப் போக்கி யுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தின் கிழக்கு சுவரில் கி.பி. 1132-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. அதில் கூறப்பட்டுள்ள விவரம்:

பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஊரைவிட்டு சிலர் வெளியேறினர். எஞ்சியிருக்கும் மற்றவர்கள் தங்களது விளைச்சலில் 100-ல் 24-ஐ பங்கிட்டு, பஞ்சம் பிழைக்க வெளியூர் போனவர்கள் மீண்டும் ஊர் திரும்பும் போது கொடுக்கவேண்டும். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட 24 பேர் இதை பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் ஊரைவிட்டுப் போகக் கூடாது. விளைச்சலில் பங்கு தராதவர்கள் ராஜதண்டமாக 64 கழஞ்சு பொன் தரவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஒன்றரை கழஞ்சு = ஒரு பவுன். எனவே, 64 கழஞ்சு என்பது 43 பவுன்.)

இதேபோல, கி.பி. 1202-ல் மூன்றாம் குலோத்துங்கர் ஆட்சிக்காலத்திலும், கி.பி. 1256-ல் முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியரின் ஆட்சியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது, வளநாட்டில் இருந்த கயிலாயமுடைய மகாதேவர்க்கு 540 கழஞ்சு பொன் கொடுத்துள்ளனர். இப்பொன்னுக்கு தலா ஒரு கலம் நெல் வீதம் ஆண்டுக்கு 360 கலம் நெல்லை கயிலாயமுடையாருக்கும்,180 கலம் நெல்லை திருவாய்பாடி ஆழ்வாருக்கும் கொடுக்கவேண்டும் என சபையினர் முடிவெடுத்துள்ளனர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

கடலூர் அருகே திருவதிகை யில் உள்ள சரநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருவோத்தூர் வேதபுரீஸ்வரர், திருவாரூர் மாவட்டம் ஆலங் குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் வறட்சி, வெள்ளத்தால் ஏற்பட்ட பஞ்சம் குறித்தும், அவற்றை மன்னர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசர்கள் காலத்தில், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. நிலவரி ரத்து செய்யப்பட்டது. நிலைமையை எதிர்கொள்ள பஞ்சவாரியம் என்ற நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. பஞ்சம் ஏற்பட்டாலும் ஊரைவிட்டு மக்கள் வெளியேறக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மீறினால் ராஜதண்டம் விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதெல்லாம் கல்வெட்டுகள் கூறும் தகவல்கள் என்கிறார் முனைவர் கே.பன்னீர் செல்வம்.

75 ஆயிரம் கல்வெட்டுகள்

தமிழகத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள சுமார் 75 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகள், 85 செப்புப் பட்டயங்கள், ஏராளமான ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை தொல்லியல் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வெட்டுத் துறை பாதுகாத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

14 hours ago

மற்றவை

11 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்