கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன்

By கா.சு.வேலாயுதன்

 அ

ஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோவை புதூர் நா.ஹரிஹரனை நான் அடிக்கடி சந்திக்கிறேன். அப்படிச் சந்திக்கும்போதெல்லாம் தபால் இலாகா சம்பந்தப்பட்ட அரிய தகவல் ஒன்றை என்னிடம் சொல்லாமல் இருக்கமாட்டார் அவர். 

“இந்த வருசம் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா தம்பி.. அதுக்காக அவருக்கு அஞ்சல் துறையில தபால் தலை வெளியிட்டுருக்காங்க. ஆனா, மத்த யாராச்சும் இந்திரா காந்தியைக் கொண்டாடறாங்களா பாருங்க..” என்றார் ஒருமுறை. “அஞ்சல் துறையை நஷ்டத்திலிருந்து காப்பாத்துறதுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ‘மை ஸ்டாம்ப்’ திட்டம். மெனக்கெட்டு அதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினா நல்லாருக்கும். 

பொக்கிஷமாய் வைத்திருக்கிறார்

இப்ப, ரஜினியுடன் ரசிகர்கள் சந்திப்பு நடக்குது. அந்த இடத்துல அஞ்சல் துறை ஒரு கேம்ப் போட்டு உட் கார்ந்தா, ஆயிரக் கணக்குல மை ஸ்டாம்ப் கலெக் ஷன் ஆகும். இது சம்பந்தமா ரெண்டு முறை அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிட்டேன்; பதிலையே காணோம்” அண்மையில் இப்படியும் சொன்ன ஹரிஹரன், அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு தனது தாத்தா எழுதிய கடிதத்தைக்கூட பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

வாயைத் திறந்தால் அஞ்சல் இலாகா சம்பந்தமாக ஏதாவதொன்றைச் சொல்லாமல் இருக்க மாட்டார் வயது எழுபத்து நான்கை கடந்து கொண்டிருக்கும் ஹரிஹரன். 1774-ல், கொல்கத்தாவில் தான் நாட்டின் முதல் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. கேரளத்தின் ஆழப்புழையில் உள்ள குட்டநாட்டில் தான் இந்தியாவின் மிதக்கும் தபால் நிலையம் உள்ளது. இப்படி தபால் துறையின் தகவல் சுரங்கமாக திகழும் ஹரிஹரன், தபால் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தகவல்களையும் அவ்வப்போது சொல்லி வருகிறார். அதற்காக, இதுவரை 6 முறை சிறந்த ஆலோசனைக்கான விருதையும் தபால் துறையிடமிருந்து இவர் பெற்றுள்ளார்.

மேக்தூத் விருது 

பணியில் இருந்த காலத்தில் தபால் துறையில் சிறந்த சேவைக்காக மேக்தூத் தேசிய விருதையும் பெற் றுள்ளார். “ஓய்வுக்குப் பிறகும் தபால் துறையை மறக்கமுடியாமல் இன்னமும் அதனூடேயே ஒட்டி உறவாடுகிறீர்களே.. அதற்கு என்ன காரணம்?” என்று ஹரிஹரனைக் கேட்டேன். இந்தக் கேள்விக்கு உணர்ச்சிப்பூர்வமாக பதில் சொன்னார்.

 

“ஆரம்பத்தில் தபால் துறையில் நான் தற்காலிக பணியாளராகத்தான் இருந்தேன். 1964-ல் தான் கிளார்க் ஆனேன். கோவை அண்ணாசிலை பகுதி தபால் அலுவலகத்தில் வேலை. தொடக்கத்திலிருந்தே எனக்கு தபால் துறை மீது ஈடுபாடு அதிகம். எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அதிகாரிகள் 1977-ல், தபால் துறையின் வளர்ச்சிக்கு உங்களிடம் யோசனை இருந்தால் சொல்லலாம் என்றார்கள். அப்போது, அஞ்சல் படிவம் ஒன்றை மாற்றி அமைப்பது தொடர்பாக நான் சொன்ன யோசனை ஏற்கப்பட்டு, அதற்கு 100 ரூபாய் பரிசும் தந்தார்கள். இப்படித்தான் அடுத்தடுத்தும் நான் சொன்ன மேலும் ஐந்து யோசனைகளும் ஏற்கப்பட்டு, பரிசு கொடுத்தார்கள்.

ஒட்டிக் கொண்டிருக்கிறேன்

கார்கில் உள்ளிட்ட நாட்டின் எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் தபால் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக மேக்தூத் விருது அளிப்பார்கள். 1984-ல், அந்த விருதை எனக்கும் கொடுத்தார்கள். தபால் துறையின் மீது நான் கொண்டிருந்த பற்றும், அதன் வளர்ச்சிக்கு நான் சொன்ன யோசனைகளும் என்னை போஸ்ட் மாஸ்டர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், தபால் நிலையங்களுக்கான நில ஆர்ஜிதப் பிரிவு பி.ஆர்.ஓ என பல நிலைகளுக்கு உயர்த்தியது.

15 வருடங்களுக்கு முன்பு நான் பணி ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனாலும் எனக்குப் பிடித்தமான தபால் துறையைவிட்டு என்னால் ஒதுங்கியிருக்க முடியவில்லை. அதனால், தொடர்ந்து அத்துறையுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறேன். கடந்த 15 வருடங்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தபால் துறை சார்ந்த தகவல்களை மீடியாக்களுக்குத் தந்திருப்பேன். அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் தபால் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பேன்” என்று நெகிழ்ந்துபோய் சொன்னார் ஹரிஹரன்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் தோன்றி தபால் துறையின் பெருமை பேசியிருக்கும் ஹரிஹரன், “இப்போது வழக்கத்தில் இருக்கும் இ - மெயில் வழி கடிதங்கள் எல்லாம் காலப்போக்கில் காலாவதியாகி விடும். ஆனால், தபால் மூலம் வரும் கடிதங்களுக்கு அழிவில்லை. அவை, ஒரு காலத்தில் இந்த தேசத்தின், உலகத்தின் வரலாற்றைச் சொல்லும் ஆவணமாகவே மாறும். எனவே, தபால் கடிதங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

மாணவ கண்மணிகள் கடிதம் எழுதிப் பழக வேண்டும். பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக முன்பு பள்ளிக்கூடங்களில் லெட்டர் பெட்டிகள் வைக்கப்பட்டன. மாணவர்கள் எழுதும் கடிதங்களை அந்தப் பெட்டியில் போட வைத்து, சிறந்த கடிதங்களுக்கு பரிசும் கொடுக்கப்பட்டது. 2006-ல், கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் சுமார் 4,000 மாணவர்கள் கடிதம் எழுதினார்கள்.

 

 

அதேபோல் 2006-07-ல், கோவை பாரதியார் பல்கலையில் படித்த சீன மாணவர்கள் 27 பேரை தலைமை அஞ்சலகத்துக்கு வரவைத்தோம். இந்திய தபால் துறை செயல்படும் விதம் குறித்து அங்கு அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, சீனாவிலிருந்த அவர்களது பெற்றோருக்கு கடிதம் எழுத வைத்தோம்.

கோவை ஜவான்ஸ் பவனில் இருக்கும் நண்பர் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது நண்பர்களுக்குத் தகவல் சொல்லவும் வாழ்த்துச் சொல்லவும் தபால் கடிதங்களை மட்டுமே பயன்படுத்துகிறார். அவரின் இந்தச் செயல்பாட்டின் பின்னணியில் எனது தூண்டுதலும் வழிகாட்டுதலும் இருக்கிறது, அவரைப் போலத்தான் நானும் கடைசி வரை அஞ்சல் அட்டைகள் மூலமே நண்பர்களுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள் அனுப்புவது என்பதில் தீர்மானமாய் இருக்கிறேன்” என்று சொன்னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்