கன்று வைத்து.. கணக்கெடுத்து!- பரவலாக்கப்படும் பசுமைச் சாலைகள் திட்டம்

By அ.வேலுச்சாமி

‘நி

ழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்' என்பார்கள். இதைப் புரிந்து கொண்டுதான் சாலைகளின் இருபுறமும் மரங்களை நட்டு பசுமைச் சாலைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக நெடுஞ்சாலைத் துறை!

அண்மைக் காலமாக சாலை விரிவாக்கத்துக்காக சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருகின்றன. வளர்ச்சியை எதிர் நோக்கும் போது சில இடங்களில் இது தவிர்க்க முடியாத விஷயம்தான் என்ற போதும் மரங்கள் வெட்டப்பட்டதால், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடுமையாக வெயில் தாக்கத்துக்கு ஆளாகி வரு கின்றனர். சாலை ஓரங்களில் வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக, புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளும் பெரிதாகக் கடைபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலை மாற்றும் முயற்சியாக மாவட்ட வாரியாக குறிப்பிட்ட சில சாலைகளை தேர்வு செய்து, அவற்றின் இருபுறமும் நாட்டு மரக் கன்றுகளை நட்டு பசுமைச் சாலைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தமிழக நெடுஞ்சாலைத்துறை.

திருச்சி மாவட்டத்தில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாகவே நடக்கின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முந்தைய நிலவரப்படி, திருச்சி மாநகரில் 5,582, லால்குடி பகுதியில் 4,150, முசிறி பகுதியில் 3,650, துறையூர் பகுதியில் 2,650, மணப்பாறை பகுதியில் 2,050 என மொத்தம் 18,082 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக் கன்றுகளை நடுவதோடு விட்டுவிடாமல், கூண்டுகள் அமைத்து பாதுகாப்பதுடன் லாரிகள் மூலம் தண்ணீர் விட்டும் வருகிறார்கள். அத்துடன், மாதம் ஒருமுறை அந்தக் கன்றுகளின் வளர்ச்சியைக் கணக்கெடுத்தும் பதிவு செய்து வருகின்றனர்.

25,000 மரக் கன்றுகள்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி கோட்ட பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி, “பசுமைச் சாலைகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 25,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவு செய்துள்ளோம். இதில், 10,000 கன்றுகளை ஓயாமரி அருகேயுள்ள காவிரிக்கரை சாலை, கரூர் பைபாஸ் சாலை, திண்டுக்கல் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, கே.கே.நகர் சாலை என மாநகர எல்லைக்குள் நட இருக்கிறோம்.

அழகுக்காக அந்நிய வகை மரங்களை நடாமல், நமது மண்ணின் மரங்களான வேம்பு, புங்கை, பூவரசு, வாகை, இச்சிலி, புன்னை, புளிய மரம் உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு வருகிறோம். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள சாலைகளில் நாவல், கொடுக்காப்புளி, விளா, நெல்லி, பாதாம், கொய்யா போன்ற மரங்கள் நடப்படுகின்றன. வளர்ந்ததும் இவை அவ்வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர்க்கு பயன் தரும். கோயில்கள் இருக்கக்கூடிய இடங்களில் மகாகனி, நாகலிங்கம், மகாவில்வம் போன்ற மரங்களையும், காலியிடமாக உள்ள பகுதிகளில் ஆல மரம், அரச மரம், மருத மரம், அலங்காரக் கொன்னை உள்ளிட்டவைகளை நடுகிறோம்.

பசுமைச் சாலைகளாக மாறும்

குழந்தைகளைப் போல பராமரித்து வரும் இந்தக் கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதற்காக திருச்சி, துறையூர், மணப்பாறையில் தலா 1 லாரிகளை நிறுத்தியுள்ளோம். மரங்கள் தான் மானுட வாழ்வின் மூலதனம் என்பதால் துறையின் அதிகாரிகள் பணி யாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் இந்த விஷயத்தில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். மரக் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருப்பதால் சீக்கிரமே திருச்சி மாவட்டத்தின் முக்கியச் சாலைகள் பசுமைச் சாலைகளாக மாறிவிடும்” என்றார்.

அதெல்லாம் சரி, இப்படி கஷ்டப்பட்டு வளர்க்கும் மரங்களை எதிர்காலத்தில் ஏதாவது காரணத்தைச் சொல்லி வெட்டி வீழ்த்தாமல் இருக்க வேண்டுமே!

படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

9 days ago

மற்றவை

17 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்