செப்.1-ல் வெளியான, ‘விழித்துக்கொள்வோம்.. வேண்டாமே விபரீத விளையாட்டு’ கட்டுரை துறைவாரி நிபுணர்களின் விளக்கங்களுடன் விரிவாகவும் எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. இணையம் தரும் பயன்கள் பலவென்றால், தீமைகள் சிலவும் முட்களைப் போல் விரவியுள்ளன. பதின்ம வயதுடையோர் இதுபோன்ற களைகளை அடையாளம் காண இயலாதபோது, அவர்தம் பெற்றோரும் ஆசிரியர்களும் தக்கபடி வழிகாட்ட வேண்டும்.
‘ஹேக்கர்ஸ்’ பொருளாதார மோசடிகளில் ஈடுபட்டு வந்ததைத் தாண்டி, தற்போது உயிர் பறிக்கும் அளவுக்குத் துணிந்துவிட்டனர். திறமையான போலீஸ் அதிகாரிகள் குழுவை நியமித்து, விரைவாக இதைத் தடுத்து நிறுத்துவதோடு, ‘ப்ளு வேல்’ போன்று வேறு மோசமான விளையாட்டுகள் உள்ளனவா என அறிய சைபர் காவல் துறையினர் புலனாய்வில் ஈடுபட வேண்டும்.
- ஜே.முஹம்மது அலி, நாகூர்.
சின்னம் மட்டும் போதுமா?
ஆர்.முத்துக்குமார் எழுதிய, ‘இரட்டை இலை துளிர்த்த கதையும் துவண்ட கதையும்’ கட்டுரை (செப்.1) அருமை. இரட்டை இலை படுதோல்வியைச் சந்தித்த வரலாறும் உண்டு. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. லட்சக்கணக்கான அரசு ஊழியர் கள் பணிநீக்கம், மதமாற்றத் தடைச் சட்டம், பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு போன்றவற்றால் இந்தத் தோல்வி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் இதே நிலை. சின்னம் மட்டுமே வெற்றியைத் தராது. சின்னத்துக்குரிய கட்சியின் மக்கள் நலத் திட்டங்கள், ஜனநாயகச் செயல்பாடுகள், ஊழலின்மை ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கும். சின்னத்தைவிட மக்கள் மனமே முக்கியம்.
- இரா.ஜோதி, சென்னை.
புத்திசாலித்தனமான முடிவல்ல
தங்கள் மகன் பள்ளிக்கு வந்தாரா என்பதைப் பெற்றோர் அறிந்திட பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்ற கல்வி அமைச்சரது அறிவிப்பு, ஏன் மாணவர் பள்ளி வரத் தயங்குகின்றார் என்பதை அறிய உதவாது. ஒரு சிற்றூரில் அனைவரையும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக ஆக்கியதைக் கொண்டாட மால்கம் ஆதிசேஷையாவை அழைத்தனர். “எவ்வாறு அனைத்துப் பெண்களையும் படிப்பை முடிக்க வைத்தீர்கள்?” என்று வினவ, “படிப்பை முடிப்பவருக்கு அண்டா கொடுப்பதாகச் சொன்னோம்.
நீங்கள்தான் அண்டாக்களை அளிக்க வேண்டும்” என்றனர். படிப்புதான் அவர்களை ஈர்த்திருக்க வேண்டும். அண்டாவுக்காகப் படித்தவர்களைப் பாராட்ட முடியாது என்று அழைப்பினை மறுத்துவிட்டார். அதுபோல பள்ளியும் வகுப்பறைக் கற்பித்தலுமே மாணவர் பள்ளி வரத் தூண்டுகோல்களாக இருக்க வேண்டும். உடல் மட்டும் பள்ளியில் இருந்தால் போதாது, உள்ளமும் கற்க விரும்ப வேண்டும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
பதவி விலகுவதே சரி!
ஆக. 24-ல் வெளியான, “உரிமையைப் பாதுகாக்க முடியாதவர்களுக்குப் பதவி எதற்கு? விலகுங் கள்” கட்டுரை மிகவும் கவர்ந்தது. மாநில உரிமைகள் குறித்த ஜெயலலிதாவின் உரையையே எடுத்து, அவர் வழியில் நடப்பதாகச் சொல்லிக்கொள்வோரை நோக்கிக் கேள்வி கேட்டிருக்கிறார் கட்டுரையாளர். ஜெயலலிதா இன்றிருந்தால், தமிழக முதல்வர் பதவிக்குரியவர் அடிமையாக டெல்லிக்குப் போயிருக்க மாட்டார்.
மாறாக, மத்திய அமைச்சர்கள் தமிழக தலைமைச் செயலகத்துக்கு வந்திருப்பார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, பிரதமரே போயஸ் கார்டனுக்கு வந்து ஆதரவும் கேட்டிருப்பார். ‘நீட் தேர்வு சமூக அநீதி’ என்ற கருத்திலும் உறுதியாக நின்றிருப்பார். இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயலலிதா வழியில்தான் ஆட்சி செய்கிறார்களா? அவர்கள் பதவி விலகுவதே சரி.
- வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago