போயஸ் தோட்டம் என்றாலே,மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவுதான் தமிழக மக்கள் அனைவருக்கும் வரும். அவருடைய இல்லத்தை நினைவிடமாக மாற்றி, அவர் வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களையும், அவர் எழுதிய படைப்புகளையும் காட்சிப்படுத்தினால் தமிழக வரலாற்றில் கோலோச்சிய பெண் முதல்வருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும். பள்ளிப் படிப்பை முடித்தபோது பெற்ற ‘பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடண்ட்’ விருதைத் தாம் பெரிதும் பாதுகாத்துவருவதாக நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, பரதம், திரைப்படம், நாடகம், அரசியல் எனப் பன்முக சாதனைகளின் தொகுப்பாகவும் அந்தக் காட்சியகம் இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?
- உமா மகேஸ்வரி அமர், சென்னை.
தமிழகத்தின் இழப்பு!
ஒரு பத்திரிகை ஆசிரியர் எந்த அளவுக்கு நேர்மையோடும், தைரியமாகவும், துணிச்சலோடும் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் சோ. நெருக்கடி நிலைக் காலங்களில் இவர் அடக்குமுறையை எதிர்த்து நின்று செயல்பட்டதை யாரால் மறக்க முடியும்? ஒரு அரசியல் விமர்சகர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இவரது செயல்பாடுகள் ஒரு பாடம். இவருக்கு இணையாக, தனிநபர் ராணுவம் போன்ற பத்திரிகையாளரை இனி தமிழகம் காண முடியுமா என்பது கேள்விக்குறியே. இயக்குநர் பாரதிராஜா (டிச.8) குறிப்பிட்டதைப் போல், தமிழகம் ஒவ்வொரு பொக்கிஷமாக இழந்துகொண்டே வருகிறது.
- எஸ்.தணிகாசலம், கோபி.
அரசியல் நாகரிகம்
தமிழக முதல்வரின் மரணத்தையடுத்து.. தமிழக மக்கள், அரசியல் தலைவர்களின் நாகரிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. சாதி மதத்துக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவம் பேணுவதே தமிழகப் பண்பாடு. தலைவர்கள் மட்டுமில்லை, எதிர்க் கட்சியான திமுக தொண்டர்களும், ‘நீங்கள் ஆள்வதைத்தான் எதிர்த்தோமே அன்றி; வாழ்வதை அல்ல’ என்று அஞ்சலி செலுத்தியிருப்பதே அதற்குச் சான்று. எதிரெதிர் துருவங்களாக இருந்த திமுக நண்பர்கள் அனைவரும் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி, அதிமுகவுக்கு ஆறுதல் சொன்ன நிகழ்வு மிக வரவேற்கப்பட வேண்டிய செயல்.
- மன்சூர், மின்னஞ்சல் வழியாக.
பாரத ரத்னாவுக்குத் தகுதியானவர்
ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தன் ஆசான் எதிர்பார்த்ததைவிட, அதிமுக என்ற இயக்கத்தை மிகப்பெரிய அரசியல் சக்தியாக ஜெயலலிதா கொண்டுவந்துவிட்டார். எம்ஜிஆரை விடவும் மிகத் துணிச்சலாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் அரசியல் மற்றும் தனி வாழ்க்கை என்ற போர்க்களத்தில் ஒரு ஜான்சி ராணியாக வலம் வந்தார். அவர் நிச்சயம் பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவரே.
- ஏ.வி.நாகராஜன், புதுச்சேரி.
காவலர்களின் சேவை!
லட்சக்கணக்கான மக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு திரண்டிருக்க, 30 மணி நேரம் இடைவிடாத பேருழைப்பைத் தந்திருக்கிறார்கள் காவல் துறையினர். சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை.. உணர்வுபூர்வமாகச் சில ஊடகங்கள் கிளப்பிவிட்ட வதந்திகளால் மக்கள் கொந்தளித் தபோதும், ஓரிரு மணித் துளிகளில் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். இறுதி அஞ்சலி நிகழ்வில் வயதானவர்கள் மயங்கிவிழுந்தபோது, தாங்கள் குடிக்க வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை அவர்களுக்கு குடிக்கத் தந்து, அவர்களை அவசர சிகிச்சைக்கு காப்பூர்தியில் ஏற்றி அனுப்பினார்கள். எந்த அசம்பாவித சம்பவமும் இல்லாமல் பல லட்சம் மக்கள் கூடி நடத்திய இறுதிஅஞ்சலி ஊர்வலத்தை மிக அமைதியாக நடத்தப் பேருதவி செய்த தமிழகக் காவல்துறை நண்பர்களையும் துணை ராணுவ நண்பர்களையும் நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். வேலை என்பதையும் கடமை என்பதையும் தாண்டி, சேவை அன்றி வேறு எந்த சொல்லால் அதைச் சொல்வது?
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago