நம் நாட்டில் கட்டுமானத் துறையிலும் விவசாயத்திலும் மிக அதிகமான தினக் கூலிகள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்கள். தினம் ஒரு முதலாளிக்கு வேலை செய்யும் இவர்கள், பழைய ரூ.500 அல்லது ரூ.1,000 ரூபாய் நோட்டைக் கூலியாகக் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக்கொள்ளும் சூழலே இருக்கிறது. மறுத்தால் மீண்டும் அதை வாங்க முடியாது. ஆக, பழைய நோட்டை வாங்கிக்கொண்டு அடுத்த நாள் வங்கிக்குச் சென்று மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.
மத்திய அரசு தினந்தோறும் அறிவிக்கும் புதிய விதிமுறைகளால் (நவ.18) அவர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறார்கள். மை வைத்தல் உள்ளிட்ட தினக்கட்டளைகள் மைய அரசு ஆழமாக சிந்தித்துச் செயல்படவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தற்காலிகமாக வைத்திருப்பதை இழந்தாலும், மீண்டும் அவர்கள் சுருட்டுவதற்கான வாய்ப்புகள் அப்படியேதானே இருக்கின்றன.
அதில் எந்த மாற்றங்களுல் கொண்டுவரப்படவில்லையே. அரசியல் கட்சிகளும் அதிகார மையங்களும் அப்படியான சுருட்டல்களுக்குத் துணை போவதை மோடி அரசாங்கம் எப்படித் தடுக்கப்போகிறது? அரசின் பல்வேறு சட்ட திட்டங்களும் - வருமான வரிச் சட்டம் உட்பட அனைத்தும் மாற்றப்படுமா? அப்படி எதுவும் இல்லையென்றால், இப்படியான நடவடிக்கையால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்பதுதானே உண்மை. மிக உன்னதமான நோக்கத்துக்காக அறுவை சிகிச்சை தொடங்கியது போற்றுதலுக்கு உரியதே. ஆனால், அதிகம் அறுபடுவதென்னவோ நல்ல திசுக்கள்தான்!
- எஸ்.தங்கவேல், சென்னை.
நடவடிக்கை வேண்டும்
விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடி கடனை ஸ்டேட் வங்கி கணக்குநீக்கம் செய்த செய்தியை (நவ.17) படித்தேன். ‘கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால், மல்லையா மீதான வழக்கைக் கைவிட்டுவிட்டதாக அர்த்தமல்ல’ என்ற நிதி அமைச்சரின் விளக்கம், மக்கள் மனதில் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவதுபோல் இருக்கிறது. ‘முந்தைய அரசின் காலத்தில் கடன் கொடுக்கப்பட்டது’ என்று சப்பைக்கட்டு வேறு. எந்த அரசாக இருந்தால் என்ன, இந்த இழப்புக்குக் காரணமான எஸ்பிஐ வங்கியின் தலைவர், அதிகாரிகள், இந்தக் கடனுக்குப் பரிந்துரை செய்த அரசியல்புள்ளி உட்பட எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலற்ற அரசு என்று இவர்கள் சொல்வதை மக்கள் நம்புவதற்குக் கொஞ்சமாவது அடிப்படை நியாயம் வேண்டாமா?
- ஏ.வி.நாகராஜன், புதுச்சேரி.
மாற்றம் வரட்டும்
டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதும், உள்ளாட்சி பற்றிய தொடர் இப்போது தமிழகம் தாண்டி, கேரள மாநில ஊராட்சிகளையும் தொட்டிருப்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலில், நல்ல மாற்றமும் மிகச் சிறந்த நிர்வாகமும் அமைந்திட இந்த முயற்சிகள் பயனளிக்கட்டும். ஊழல் முறைகேட்டுக்குப் பேர்போன தமிழக ஊராட்சிகளை மீட்கும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் வாசகர்களின் பங்கும் கணிசமாக இருக்கும்.
- பிரபாகரன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
மூளைக்குள் ஒரு கடிகாரம்!
கே.என்.ராமசந்திரன் எழுதிய, ‘டிக்.. டிக்... நியூரான்கள்’ (நவ.17) கட்டுரை படித்தேன். ஒவ்வொரு மூளைக்குள்ளும் ஒரு கடிகை புதைந்திருக்கிறது. இதை நாம் எளிதில் அனுபவபூர்வமாக உணரலாம். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்து பழக்கப்பட்டவர்கள் அலாரம் எதுவுமில்லாமல் தானாகவே குறிப்பிட்ட அதே நேரத்துக்கு எழுவதைப் பார்த்திருப்போம். ‘எப்ப தூங்கினாலும் சரியா அஞ்சு மணிக்கு ‘டாண்’ணு எழுந்திருவேன்’ என்று பலர் சொல்வதன் உண்மை இதுதான். இதைச் செய்வது மூளையின் நியூரான்கள். அவை விநாடிகளுக்கு இடைப்பட்ட நேரத்தைக்கூடத் தவறவிடுவதில்லை.
- ப.தாணப்பன், தச்சநல்லூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago