இப்படிக்கு இவர்கள்: யார் கண் பட்டதோ?

By செய்திப்பிரிவு

ஜூன்.29 அன்று வெளியான ‘காவிரிப் படுகைக்கு எப்போது வந்தது இந்த வறட்சி?’ கட்டுரை மனதைக் கனக்கச் செய்தது. அரிசி உணவை எடுத்துக்கொள்ளும் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்துவிடும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை அது. ஆறு வருடங்களுக்கு முன்பு வானொலியின் காலை செய்தியில் மேட்டூர் அணையின் நீர் மட்ட விபரத்தைச் செய்தியாளர் வாசிக்கும்போது டீக்கடையில் டீ குடித்து கொண்டு விவசாய நண்பர்கள் காது குளிர கேட்டு, மனம் குளிர்ந்த காலம் போய்விட்டது. இன்று அதே விவசாயிகள் காலையிலேயே, கந்து வட்டிக்காரர்களின் கேள்விக்கு தலை குனிந்து பதில் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்கள். கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் மிக மிக கனத்த மழை தினமும் பெய்ய வேண்டும். அந்தத் தண்ணீர் இன, அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்து தமிழகம் வந்துசேர வேண்டும் என்பதே விவசாயிகளின் இன்றைய வேண்டுதல். ஆனால், இயற்கையும் சேர்ந்து நம்மை வஞ்சித்துவிட்டதோ எனும் கவலை மேலிடுகிறது. இதற்கெல்லாம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்!

-சூர்யா முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி, தஞ்சை.

வயலும் கடையும்

ஜூலை 5-ல் வெளியான, ‘வயலுக்குள் முளைக்கும் டாஸ்மாக் க(டை)ளைகள்' கட்டுரை படித்தேன். விவசாய நிலங்களை மனையாக்க குறைந்தபட்சம் அந்த நிலம் மூன்று ஆண்டுகள் விவசாயம் செய்யாமல் தரிசாக இருக்க வேண்டும் என்பது மாநில அரசின் விதி. அந்தச் சட்டத்தை மாநில அரசே மீறுவது தவறான முன்னுதாரணம்.

-க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

சுற்றுலா அவஸ்தைகள்

ஜூலை 4-ல் வெளியான, ‘பயணியின் கோபம்’ என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை வாசித்தேன். தமிழக சுற்றுலாத் தலங்களில் நிகழும் கொடுமைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சாதாரண நாட்களைவிட விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் பயணிகள் அனுபவிப்பது கூடுதல் கொடுமை. உணவகங்களில் தரம் பற்றியும் சொல்லி மாளாது. சுற்றுலாத் துறை, அறநிலையத் துறைகளுக்கென்று தனித்தனியாக அமைச்சர்கள், உயரதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

-ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

சபாஷ் ‘தி இந்து'!

ஒரு கைப்பிடி வைக்கோல் புல்லைக் கூட தன் வாழ்நாளில் பசுக்களுக்கு எடுத்துப் போடாதவர்கள், தாகமெடுத்த பசுவுக்கு தண்ணீர் காட்டாதவர்கள், மாட்டுத் தொழுவத்தில் கிடக்கும் சாணத்தையும் மூத்திரத்தையும் கூட்டி பெருக்காதவர்கள் தங்களை ‘பசுக் காவலர்கள்’ என்று கூறிக்கொள்கிறார்கள். பசுவின் பெயரால் தேசத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் குண்டர்களே! சரியான சொல்லில் அர்த்தப்படுத்தும் ‘தி இந்து’வின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

-ஏ.பழநிசாமி, பண்புஅறம்சுற்றி.

பள்ளிகளின் தரம் உயர அரசு ஊழியர்கள் அரசுப்பள்ளியில்தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமாக்கினால் அது அவர்களது தனி உரிமையைப் பறிப்பதாக இருக்கும் என்று பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருப்பது நியாயமானது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை தருவது நிச்சயம் பலன் தரும். கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினால் நிச்சயம் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.

-பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்