இப்படிக்கு இவர்கள்: கலந்துரையாடல் செய்யலாமே?

By செய்திப்பிரிவு

சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று வந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகிறேன். சில பதிப்பகங்களில் ஸ்வைப் மெஷின் இல்லாததால், கொஞ்சம் பணத்தை ரொக்கமாகக் கையில் வைத்திருப்பது நல்லது. சில பதிப்பகங்கள் அதிக தள்ளுபடியில் புத்தகம் தருகின்றன. ஆங்கிலப் புத்தகங்களை ரூ.50க்குத் தரும் ஸ்டால்களும் உள்ளன. பதிப்பகங்களின் பெயர்களும் வரிசை எண்ணும் முகப்பில் வைத்திருந்தால் தேடுவதற்கு எளிதாக இருக்கும். 700 அரங்குகள் இருப்பதால் தொடர்ந்து நின்றுகொண்டும், நடந்துகொண்டும் இருக்கும் சில முதியவர்களுக்காக இருக்கைகளை அமைக்கலாம். இது அவர்கள் இளைப்பாற உதவும். மேலும், காலை 11 மணிக்கே வாசகர்கள் குவிந்துவிடுவதால், வாசகர்களிடையே வாசிப்புக்கான கலந்துரையாடலை ஒரு மணி நேரம் நடத்தினால் உபயோகம் உள்ளதாக இருக்கும்.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.



மோடியின் மந்திரமும் சசிகலாவின் தந்திரமும்

வாஸந்தியின் கட்டுரையைப் படித்தவுடன், ‘மக்களை அறியாமையிலேயே வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்’ என்று எப்போதோ படித்த அரசியல் கட்டுரையின் வரிகள் நினைவுக்கு வந்தன. மக்களை அறியாமையில் வைத்து வெற்றி பெறுவதுதான் மோடி மந்திரமும் சசிகலாவின் தந்திரமும். சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் சேத்தன் பகத், ‘மோடியின் எதிர்ப்பாளர்களை விட, மோடியின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களினாலேதான் அவருக்குப் பிரச்சினைகள்’ என்றார். பணமதிப்பு நீக்கம் தொடர்பாக எழுந்த ‘எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள்’ என்கிற வார்த்தை எந்த அளவுக்கு நியாயமானது?

- விளதை சிவா, சென்னை.



காலத்தின் தேவை

மிகவும் சொற்பமாக அறியப்பட்ட பொருளாதார மேதை, முன்னோடி சுற்றுச்சூழல்வாதி ஜே.சி.குமரப்பா பற்றிய கட்டுரை (ஜன.5) காலத்தின் தேவை. ஜே.சி.குமரப்பா உருவாக்கிய காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகள், செயல் திட்டங்கள் அவரின் காலகட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசி. என்றோ நாம் அனுபவிக்க இருக்கும் பிரச்சினைகளின் விளைவுகளை மேலும் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைத்தவர் அவர்.

- விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக.



சமையல் தொடர் தேவை

மதுரையில் ‘பெண் இன்று’ சார்பில் நடைபெற்ற பெண்கள் திருவிழா வில், செஃப் தாமு பேசியவை கருத்தில் கொள்ளத்தக்கவை (ஜன.9). குழந்தைகளுக்குச் சிறு தானிய உணவுகள் கொடுப்பதன் அவசியத்தை மிக அழகாக விளக்கியுள்ளார். குறிப்பாக, பழைய முறையில் சோற்றை வடித்து உண்ணவும், பட்டினி கிடக்காமல் வேளா வேளைக்கு உண்ணவும் வலியுறுத்தினார். அவர் ‘இந்து’வில் சமையல் பற்றி தொடர் கட்டுரை எழுதினால் சுவையாயிருக்கும்.

- அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.



பிரச்சினை தீர வழி

நியாயவிலைக் கடை ஊழியர்களின் வேலைப் பளு, மனஉளைச்சல், ஊழியர் பற்றாக்குறை பற்றிய செய்தி (ஜன.7) நியாயமானதே. ஆனால், ஊழியர்களைக் காட்டிலும் அந்தக் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் படும் துயரம் மிக அதிகம். தரமற்ற பொருட்கள், குறைந்த எடை, தேவையற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல் போன்ற மக்க ளின் மனஉளைச்சல்கள், ஊழியர் களின் பிரச்சினையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதற்குத் தீர்வு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும் பொருட்களின் மானியத்தை நேரடியாகவே அந்த குடும்பத்துக்குரியவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடலாம். பொருட்களை எடையிட்டுப் பொட்டலமிட்டுக் கொடுக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் பயனாளிகளின் பிரச்சினையும் தீரும்.

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்