இப்படிக்கு இவர்கள்: ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தின் துயரமே அய்யாக்கண்ணுவின் போராட்டம்!

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 7 அன்று வெளியான ‘அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?’ கட்டுரையைப் படித்தபோது பெரும் துயரத்துக்குள்ளானேன். விவசாயக் குடும்பப் பின்னணியில் வந்த என்னுடைய குடும்பத்தின் துயரத்தை, என்னுடைய கிராமத்து விவசாயிகளின் துயரத்தைப் படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் குடும்பம் விவசாயக் குடும்பம். எங்களுக்கு 17 ஏக்கர் நிலம் இருந்தது. நான் மூத்தவன். எனக்கு ஒரு தம்பி. எனது குடும்பத்தில், பள்ளியில் காலடிவைத்த முதல் நபர் நான்தான். நான் சட்டம் படித்து வழக்குரைஞர் ஆனேன். என் தம்பி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாய வேலையில் இறங்கினான்.

அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை கிடைத்தும்கூட அதைப் புறக்கணித்தே விவசாயத்தை அவன் தேர்ந்தெடுத்தான். அப்பா அதையே விரும்பினார். ஏனென்றால், விவசாயம் அப்போது மதிப்புக்குரிய, லாபகரமான ஒரு தொழில். ஆனால், வெகு விரைவில் அது நொடிந்துபோனது. 97 வயது வரை வாழ்ந்து, 2013-ல் மறைந்த எனது தந்தை, அவரது கடைசி நாட்களில், மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளானார்.

அரசு வேலை வேண்டாம் என்று சொல்லி விவசாயத்தை என் தம்பிக்குப் பரிந்துரைத்ததே என்னுடைய தம்பியின் சிரமமான இன்றைய நிலைக்குக் காரணமாகிவிட்டது என்று அவர் கருதினார். அவன் தொடர்ந்து அந்த அரசு வேலையில் நீடித்திருந்தால், இன்றைக்கு ரூ.25,000 ஓய்வூதியமாகவே கிடைக்கும். ஆனால், விவசாயத்தில் முழு உழைப்பைக் கொடுத்தாலும் இந்தத் தொகைக்கு இன்றைக்கு உத்தரவாதம் கிடையாது.

என்னுடைய கிராமத்தில் பல நிலவுடைமையாளர்கள் இன்று அரசாங்கத்தில் ஒரு கடைநிலை ஊழியர் பணி தம்முடைய பிள்ளைகளுக்குக் கிடைத்தாலும் மகிழ்ச்சி அடையும் நிலையிலேயே இருக்கின்றனர்; அதற்காக நிலத்தை இழக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு சமூகத்தின், தேசத்தின் பிரச்சினை. அய்யாக்கண்ணுவின் போராட்டம் அதையே வெளிப்படுத்துகிறது!

- து.அரிபரந்தாமன், நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம். சென்னை.



எந்தக் காலத்தில் இருக்கிறோம் நாம்?

மத இயக்கங்கள், மாற்றுக் கருத்துகளைக் கொஞ்சம்கூடப் பொறுத்துக்கொள்ள இயலாத தன்மையை நேரில் கண்டுகொண்டிருக்கும் பரிதாப நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். ‘நீங்கள் வழிபட்டுக்கொள்ளுங்கள்.. எனக்கு இறை நம்பிக்கை இல்லை’ என்று சொன்ன ஃபாருக்கைக் கொன்று தீர்த்தது கொலைவெறிக் கும்பல். சகிப்புத்தன்மை பேசும் இந்து மதக் கொள்கையாளர்களோ பினராயி விஜயன், பிரசாந்த் பூஷண் போன்றோரின் தலைக்கு விலை வைக்கிறார்கள். ‘பசுவைக் கொல்வோரின் கை கால்கள் உடைக்கப்படும்’ என்கிறார் மக்கள் பிரதிநிதி ஒருவர். மாற்றுக் கருத்துடையோரின் கை கால்களை உடைக்கவும் தலைகளை வெட்டவும் தோன்றும் எண்ணம் மிகவும் கொடூர மன நிலையை அல்லவா காட்டுகிறது?

- இளங்கோ கண்ணன், சங்கரன்கோவில்.



கண்காணிப்பு தேவை!

தேர்தல் நிதி சீர்திருத்தம் தொடர்பாக ஏப்.10 அன்று வெளியான கட்டுரை அரசியல் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பாக விரிவாகப் பேசியுள்ளது. வணிக நிறுவனங்கள் கொடுக்கிற ஒவ்வொரு பைசாவும் அந்நிறுவனங்களைப் பொறுத்தவரை முதலீடே. அதன் பலனாக ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகளைப் பெறுகின்றன. அதனால், கிடைக்கிற பலன் குறித்துக் கண்காணிப்பு ஏதும் இல்லை. நிதி பெறுவதால் அரசியல் கட்சிகள் கேட்கின்ற தகுதியையும் இழந்துவிடுகின்றன. எந்த ஒரு வணிக நிறுவனத்திடம் இருந்தும் தேர்தல் நிதி பெற முடியாத வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும். கூடவே, வாக்குக்குப் பணம் தருவதையும் தடுத்தால்தான், ஜனநாயகம் பற்றிப் பேசுவதில் அர்த்தம் உண்டு.

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்