அய்யாக்கண்ணுவின் போராட்டம் தொடர்பாக ‘தி இந்து’வில் வெளியான கட்டுரையைப் படித்தேன் (7.4.2017). விவசாயி என்றாலே, படிக்காதவன், பரதேசி எனும் பார்வை இன்றைய தலைமுறையில் ஒரு சாராரிடம் உருவாகிவருகிறது. இது தட்டையான பார்வை என்பதோடு, ஒருவித மேட்டிமையைக் கொண்டது என்பதையும் இப்படிப் பார்ப்பவர்கள் உணருவதில்லை. நான் பச்சையப்பா கல்லூரியில் படித்த காலகட்டத்தில், அவர் சட்டக் கல்லூரியில் எனக்கு சீனியர். அந்நாட்களிலேயே அவருடைய சட்டை பாக்கெட்டுகளில் நூறு ரூபாய் நோட்டுகளைத் தினந்தோறும் பார்க்க முடியும்.
அப்போது ஒரு மூட்டை நெல்லின் விலைக்குச் சமமான தொகை அது. வசதியான விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த அவர், உடன் படிப்பவர்களுக்குச் செலவழிக்கத் தயங்காதவர். எனக்குத் தெரிந்த காலந்தொட்டு மக்கள் போராட்டங்களில், குறிப்பாக விவசாயப் போராட்டங்களில் சளைக்காமல் ஈடுபட்டுவருபவர். அய்யாக்கண்ணு மட்டும் அல்ல; பலர் இப்படி உண்டு. நம்மாழ்வாரின் தம்பி துறவி என்றழைக்கப்படும் இளங்கோவன் ஒரு உதாரணம். பொது வாழ்க்கைக்கு வந்து, தேர்தல்களில் போட்டியிட்டதாலேயே 25 காணி நிலத்தை விற்றவர். சொத்துகளை இழந்தவர். இன்றைக்கு அரசியல், சமூகத் தளங்களில் ஈடுபட்டிருக்கும் பலர் இப்படி விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களே. நான் பல தேர்தல்களில் பங்கேற்றிருக்கிறேன். விவசாய வருமானம்தான் ஆதாரம்.
எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், ஓரளவுக்கு வசதியான, நடுத்தரக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களால்தான் பொது வாழ்க்கையைச் சமாளிக்க முடிந்திருக்கிறது அல்லது உதவக் கூடிய வசதியான நண்பர்கள் பின்னணி வேண்டும். ஆக, விவசாயிகள் என்றால், படிக்காதவர்களாக, வசதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கருதுவது மேட்டிமைப் பார்வையே அன்றி வேறில்லை. எந்த ஒரு போராட்டத்தின்போதும் போராட்டத்தில் ஈடுபடுவோரின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைத்தான் எப்போதும் நாம் கவனிக்க வேண்டும். அதுவே நியாயத்துக்கு வழிவகுக்கும்!
- எஸ்.எஸ். பழநிமாணிக்கம்,
முன்னாள் மத்திய நிதித் துறை இணையமைச்சர்,
தஞ்சாவூர்.
மன அழுத்தத்தின் வேர்கள்
உலக சுகாதார தினத்தையொட்டி, ஆண்டனி செல்வராஜ் எழுதிய, ‘2020-க்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை முடக்கப்போகும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் வகிக்கும்’ என்ற செய்தி கவலை தருவதாக உள்ளது. வாழ்வில் ஏற்படும் தடைகளை - அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து மீள முயற்சிக்க வேண்டும். மாறாக, அதையே நினைத்து நினைத்து, அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல், எல்லோரிடமும் மிகுந்த கோபம் கொள்வது, தன்னைத்தானே வருத்திக்கொள்வது போன்றவை மோசமான வழிமுறைகள்.
இந்த உளவியல் சிந்தனை இதுபோன்ற பல பிரச் சினைகளுக்குக் காரணமான வேர்களை அடையாளம் காட்டுகிறது. பல்லாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கூட்டுக் குடும்ப முறையின் அழிவும், இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணமாகும். எளிமை மற்றும் உள்ளத் தூய்மை போன்ற வாழ்வின் அடிப்படை உண்மைகளை நோக்கி மனித இனம் மீண்டும் திரும்ப வேண்டியது அவசியம்.
- அ.குருநாதன், சுந்தரராஜன்பட்டி.
இயற்கை விவசாயம்
ஏப்ரல் 6 அன்று வெளியான ‘போராடும் இளைஞர்களுக்கு நம்மாழ்வார் காட்டிய வழி!’ கட்டுரை இன்றைய சூழலில் அவசியமான நினைவூட்டல். நாம் சாப்பிடுகிற திராட்சைப் பழம் எத்தனை முறை பூச்சிக்கொல்லி மருந்தில் நனைக்கப்படுகிறது என்பதைச் செயல்வழி முறை மூலம் விளக்கிக் காட்டியவர். உள்ளூர்ப் பொருட்களை நாடுங்கள்.. அதை நீங்களே உற்பத்தி செய்யுங்கள் என்றவர். தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வும், பூச்சிக்கொல்லி மருந்து குறித்த விழிப்புணர்வும் ஏற்பட அவரே காரணம். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம்.. அவரது சிந்தனைகள் நம்மிடம் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன.
- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.
வறட்சிக்கு யார் காரணம்?
கடந்த வாரம் மூன்று நாட்கள் கேரளத்தில் பயணம் செய்தேன். தமிழகத்தைப் போலவே அங்கும் சரியான மழை இல்லைதான். ஆனால், அங்குள்ள ஆறு, ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் இருக்கிறது. தமிழ்நாட்டின் வறட்சிக்கான காரணம் மழை பொய்த்துப்போனது மட்டுமல்ல, நம் அரசு மற்றும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள்தான். நீர்நிலைகளையும் ஆறுகளையும் பாதுகாக்கத் தவறியது, எஞ்சிய நீர்நிலைகளையும் அழித்துக்கொண்டிருப்பது போன்றவைதான் பிரச்சினையின் ஆணிவேர்.
- கார்த்திகேயன் வையாபுரி, சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago