இப்படிக்கு இவர்கள்: அண்ணா நூலகத்தின் நிலை...

By செய்திப்பிரிவு

சென்னையில் என் மகளை அடிக்கடி அழைத்துச் செல்லும் இடங்களில் ஒன்று அண்ணா நூற்றாண்டு நூலகம். ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகள் பிரிவில் நடைபெறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி செல்வோம். 14 ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்தாலும் சில மாதங்களுக்கு முன்னர்தான் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. என் மகளுக்காக விண்ணப்பித்து நூலக உறுப்பினர் அட்டையைப் பெற்றோம்.

குழந்தைகள் ஆர்வமாகப் படிக்கக்கூடிய பல்வேறுபட்ட ஆங்கிலப் புத்தகங்கள், குழந்தைகள் பிரிவில் உண்டு. சிறுவயதில் அவளை அங்கே அழைத்துச் சென்றபோது கிடைத்த புத்தகங்களை ஆர்வமாகப் புரட்டிக்கொண்டு இருப்பாள். அவள் வளர்ந்த பிறகு ஆங்கில எழுத்தாளர்கள் சிலரின் நூல் வரிசைகளை விரும்பி வாசிக்கத் தொடங்கினாள்.

ரஸ்கின் பாண்ட், ரோல் தால், ஜெரோனிமோ ஸ்டில்டன், விம்பி கிட் என அவளது விருப்ப வரிசை நூல்களை அண்ணா நூலகத்தில் தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை. சரி, காமிக்ஸ் புத்தகங்களைத் தேடலாம் என்றால், அந்த அலமாரிகளில் புத்தகங்கள் கலைந்து கிடந்தன.

தேடுவது சிக்கலாக இருந்தது. பல புத்தகங்கள் குழந்தைகள் உட்காரும் பகுதியில் மேசைகளில் குவிந்துகிடந்தன. ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான இந்நூலகத்துக்கு, விடுமுறையில் குழந்தைகள் கூட்டமாக வருவது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அங்கிருக்கும் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டும், வகைமையின் அடிப்படையில் துல்லியமாகப் பிரிக்கப்பட்டும் இருந்தால்தானே தேட வசதியாக இருக்கும்?! நூலக நிர்வாகம் கவனம் கொள்ளட்டும். - யாழினி, சென்னை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE