துணை நின்ற கம்யூனிஸ்ட்டுகள்!
ஜ
ன.12 இதழில் வெளியான ‘தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா’ கட்டுரை படித்தேன். சென்னை மாகாணம் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக்கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தபோது, அவருக்கு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி துணை நின்றது.
உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்தெறியும் அளவுக்குக் காங்கிரஸார் சென்றனர். அப்போது பந்தலுக்குக் காவல் நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சங்கரலிங்கனார் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று சங்கரலிங்கனார் கூறியிருந்தார். இதன்படி மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் கள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.
பெயர் மாற்றம் தொடர்பான சட்டத்திருத்த தனிநபர் மசோதாவை, மாநிலங்களவையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா தாக்கல்செய்திருந்தார். இதுதொடர்பான விவாதத்தின்போது, “தமிழகத்தின் புகழ் மிக்க தலைவரும், இந்த அவையின் உறுப்பினருமான பி.ராமமூர்த்திதான் எங்கள் கட்சியின் முதன்மைப் பேச்சாளராக இங்கு பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டார். அவையில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை யின் காரணமாகத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
நாடு விடுதலை அடைந்த பிறகு, மொழிவழி மாநிலம் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தமிழக, கேரள, ஆந்திர கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்ற கட்சி முடிவுக்கேற்ப தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பேசினர். மொழி வழி மாநிலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு சாத்தியமாயிற்று என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
- ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).
பெ
யர் மாற்றப் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த அன்றைய காலத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாகவும் மெட்ராஸ் மகாணத்தின் எதிர்க்கட்சியாகவும் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பில் இருந்தது. தமிழ் மக்களுக்கு இதற்கான உரிமை யைப் பெற்றுத் தருவதில் அது நடத்திய போராட்டங்கள் அவைக் குறிப்புகளில் இன்ன மும் ஆதாரமாக இருக்கின்றன.
திமுக நடத்திய ‘அடைந்தால் திராவிட நாடு’ என்ற போராட்டத்தைப் பிரிவினைவாதமாகக் காட்டப்பார்த்தது அன்றைய காங்கிரஸ் கட்சி. ‘மொழி பேசும் மக்களின் பண்பாட்டு உரிமை இது. இதனை பிரிவினைவாதமாகத் திசைதிருப்புவது மோசடித்தனம்’ என்றது கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு தேசிய இனங்களின் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமைகளில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ள புரிதல்தான் காரணமாகத் தெரிகிறது.
சுதந்திரத்துக்குப் பின், மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்ற போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி தீவிரத்துடன் தொடங்கியிருந்தது. ஆந்திரத்தில் ‘மெட்ராஸ் மனதே’ என்ற போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.ராஜேஸ்வர ராவ் மெட்ராஸ் மாகாணத்தின் அன்றைய மேலவை உறுப்பினர். அவர் மேலவையில், மெட்ராஸ் தமிழ் மக்களுக்குச் சொந்தமானது என்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். இதைப் போலவே தமிழ்நாடு பெயர் மாற்றம் வேண்டும் என்று மெட்ராஸ் சட்டசபையிலும் வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தீவிரமாகப் போராடிய பதிவுகளும் இருக்கின்றன.
தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதாவை முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் பூபேஷ் குப்தா பேசியபோது, “தமிழ்நாட்டு மக்களுக்காகப் பேசுவதற்கு உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்றார், தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் கே.சந்தானம். “எனது வங்காள மக்களை எவ்வளவு நேசிக்கிறேனோ அந்த அளவுக்குத் தமிழ் மக்களையும் நேசிக்கிறேன்” என்றார் பூபேஷ் குப்தா!
- சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago