தமிழகத்தின் தென்கோடி நகரமான கன்னியாகுமரியை ஒக்கி புயல் தாக்கி நான்கு நாட்கள் ஆகியும், மக்கள் இதுவரை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தத்தளிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் மக்கள் படும் கஷ்டங்களை, உயிரிழப்புகளை, பட்டியல் போட்டு இழப்பீடு வாங்குவதில் காட்டும் அக்கறையை அரசு முன்னெச்சரிக்கை மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் காட்டியிருக்க வேண்டாமா?
பூகம்பம், சுனாமி, புயல், தானே என்று இயற்கைச் சீற்றங்களை அடிக்கடி சந்திக்கும் தேசம், அதை எதிர்கொள்ள எப்போது தயாராகப்போகிறது? இயற்கை இடர்ப்பாடு ஏற்பட்ட பிறகும்கூட, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் அரசு அக்கறை காட்டுவது, மக்கள் நலனில் அவர்களுக்கு இருக்கும் ‘அக்கறை’யை வெளிப்படுத்துகிறது. அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஒரே நேரத்தில் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இது போன்ற நேரத்தில்தான் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.
தொடரட்டும் அறப் பணி
நாடு முழுவதிலுமிருந்து ராமேஸ்வரம் வருகிற பக்தர்கள் சிலர், மன நோயாளிகளை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகின்றனர் என்ற செய்தி ‘தி இந்து’ சிறப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்தது. அச்செய்தியைப் பார்த்து மன நலக் காப்பகம் தொடங்க முன்வந்த மனோலயா அமைப்பின் மணிகண்டனுக்கும், அதற்கு ரூ.1 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத வாசகிக்கும் வாழ்த்துகள். ‘பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது உணவு கொடு, இறைவன் உன் முன்னே நிற்பார்’ என்றார் விவேகானந்தர். அதைச் செய்திருக்கிறார் அந்த வாசகி.
- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.
கணவனே பாதுகாவலன்
இஸ்லாத்தைத் தழுவிய பெண் ஹாதியா, தனி ஒரு மனுஷியாகத் தன் உரிமைக்காகப் போராடி, விட்டுப்போன தன் படிப்பைத் தொடர வெற்றி கண்டிருப்பது, பெண்களுக்கு உற்சாகம் தரத்தக்கது. ஆனால், அவரது வழக்கில், ‘மனைவிக்குக் கணவன் பாதுகாவலன் அல்ல’ (நவ. 29) என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண், பிறந்தவுடன் தாயின் அரவணைப்பிலும், வளரும்போது பெற்றோர்களின் பராமரிப்பிலும், திருமணம் ஆகிவிட்டால் கணவன் பாதுகாப்பிலும் இருப்பது நடைமுறை. இஸ்லாம் ஒருபடி மேலே போய், ‘கணவன் மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று கூறுகிறது. ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைவிட வேறு ஒரு நபர் எப்படிப் பாதுகாவலராக இருக்க முடியும்?
- அ.ஜெயினுலாப்தீன், சென்னை
.
திருத்தம்
டிச. 5 அன்று வெளியான ‘அயோத்தியில் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் - இன்று விசாரணை தொடக்கம்’ என்று வந்திருக்க வேண்டிய செய்தியின் தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் ‘அயோத்தியில் ராமர் பிறந்த இடம்’; ‘சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம்’ என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டு வெளியாகிவிட்டது. வாசகர்கள் திருத்திப் படிக்கக் கோருகிறோம்.
- ஆசிரியர்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago