மேல்நிலைக் கல்வியில் மருத்துவம், பொறியியல் என இரண்டு பட்டப் படிப்பை முன்னிறுத்தியே கற்றல் நடைபெறுகிறது. இந்த இரண்டைத் தவிர, வேறு பட்டப் படிப்பே கிடையாது என்று நினைக்கும் அளவுக்குப் பெற்றோரும் சமுதாயமும் உள்ளனர். 8 லட்சம் பேர் எழுதுகிற +2 தேர்வில், வெறும் 2,000 அளவே இடமுள்ள மருத்துவப் படிப்புக்காக, அனைத்து மாணவர்களும் சிரமப்படும்படியான பாடத்திட்டம் அவசியமா என்பதை பாடக் குழு வல்லுநர்கள் சிந்திக்க வேண்டும். மெல்லக் கற்போர், சராசரியாகக் கற்போர், வேகமாகக் கற்போர் எனப் பல வகைகளில் மாணவர்கள் இருக்கும்போது, அனைவரும் மேல் படிப்புக்குச் செல்லும் வகையில் பாடத்திட்டத்தை அமைத்தல் அவசியம்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாடத்திட்டத்தைக் கடுமையாக்கினால் பள்ளியிடை நிற்றல் அதிகரித்து, மாநிலத் தின் கல்வி வளர்ச்சியில் இடையூறு ஏற்படும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். கற்றலில் அறிவு வளர்ச்சி என்று மட்டுமில்லாமல், சுயமாகச் சிந்தித்தல், மன வலிமை, தோல்விகளைத் தாங்கும் திறன் மற்றும் எதிர்கொண்டு வெற்றி இலக்கை நோக்கிச் செல்லுதல் போன்ற திறன்களை வளர்க்கும் தன்னம்பிக்கை தரும் கல்விதான் இன்று மிக மிக அவசியம்.
- சு.தட்சிணாமுர்த்தி, பி.என்.புதூர்.
திருப்பூரும் ராட்டையும்
இரா.கார்த்திகேயன் எழுதிய ‘காந்தியைக் கவர்ந்த திருப்பூர்’ கட்டுரை வாசித்தேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல்லடம், தாராபுரம் தாலுக்காக்கள் கடும் வறட்சியாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தன. கிராமம்தோறும் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. அச்சமயம் எளியோருக்கு வாழ்வளித்தது ராட்டைதான். நூல் நூற்று கதர்க் கடையில் தந்து பணம்பெறுவார்கள். ராட்டை இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு அதன் பயன்பாடு இருந்தது.
முதல் விடுதலைப் போரின் நூற்றாண்டு 1957-ல் பல்லடம் கழக உயர்நிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தி அன்று நடந்தது. அதில், அனைத்து மாணவரும் தங்கள் வீடுகளில் முன்னர் பயன்பாட்டில் இருந்த ராட்டையைக் கொணர்ந்து நூற்றது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அப்போது பல்லடம் தாலுக்காவின் தலைமையிடமாக திருப்பூர் இருந்தது.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
மேம்போக்கான வளர்ச்சிக்கே உதவும்
கணினி அறிவியலில் தமிழகம் பின்தங்கியிருப்பது குறித்த செய்திக் கட்டுரை (நவ.18) வாசித்தேன். அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறி பயன்பாடு கள் உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மட்டும் கணிப்பொறி அறிவியல் கல்வியைத் தொடக்கக் கல்வி முதலே கொண்டுவருவதை காலம் தாழ்த்தி, அதை அரசின் கொள்கை முடிவு என்று கூறுவது சரியல்ல. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொடக்கக் கல்வியை மின்னியல் கற்றல் முறையைப் பயன்படுத்திக் கற்கும் சூழ்நிலையில், நாம் அதை பாடத்திட்டத்தில் கொண்டுவருவதைப் பற்றி விவாதித்து, கருத்துகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். புதிய பாடத்திட்ட வரைவில் தகவல் தொழில்நுட்பத்தை மற்ற பாடங்களில் ஒரு சிறு பகுதியாகச் சேர்த்திருப்பது மணவர்களின் மேம்போக்கான வளர்ச்சிக்கே உதவும்.
- ச.ராகவகிரி, கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர், சென்னை.
ஆளுமை தேர்தல்?
ஆர்.கே. நகர் தேர்தலை நாடே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் போக்கை மாற்ற முடியாமல் இருப்பது வேதனைக்குரியது. சில கட்சிகள் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று பகிரங்கமாகக் கூறிவிட்டன. தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று சொல்வதுபோல தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதும் ஜனநாயகக் கடமைதானே? மக்கள் நலனுக்காகத் தேர்தலில் தங்களைப் பிரகடனப் படுத்திக்கொள்ளாமல், தங்கள் கட்சியின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவா தேர்தல்?
- எம்.விக்னேஷ், மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago