இப்படிக்கு இவர்கள்: துணிவே துணையென இயங்கியவர்!

By செய்திப்பிரிவு

வ. 12-ல் ‘கலை ஞாயிறு’ பகுதியில் வெளியான ‘தன்னம்பிக்கை வாணன்’ கட்டுரை படித்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஆசிரியராய்ப் பணியாற்றிய ‘கிராம ஊழிய’னில் உதவியாசிரியராய்த் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கிய தமிழ்வாணன், சிறுவர் இலக்கியப் படைப்பாளராய் தொடக்கத்தில் அறியப்பட்டார். ‘அணில்’ எனும் சிறுவர் இலக்கிய இதழின் ஆசிரியராய் அவர் எழுதிய படைப்புகள் அவருக்கான எழுத்துலக அடையாளமாய் அமைந்தன. சிறுவர் நூல்களுக்காக ‘ஜில்ஜில்’ பதிப்பகம் தொடங்கி குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டார்.

சிறுவர் மனம் கவரும் வகையில் அவரால் எளிமையாய் எழுத முடிந்தது. கல்கண்டு இதழின் ஆசிரியராய் அவர் செய்த இதழியல் சாதனைகள் பாராட்டுக்குரியன. அவரது இயற்பெயரான ராமநாதனை தமிழ்வாணன் என்று மாற்றியது திரு.வி.க. ‘உன்னையே நீ அறிவாய்’ எனும் வெற்றி வாசகத்தை சாக்ரடீஸ் தந்ததுபோல் தமிழ்வாணன் உருவாக்கிய ‘துணிவே துணை’ எனும் வெற்றி வாசகமும் தொப்பியும் கண்ணாடியும் அவர் அடையாளமாகின. ‘செங்கல் செய்வது எப்படி?’யிலிருந்து செம்மொழி இலக்கியம் பல்வேறு கருப்பொருள்களில் அவர் வெளியிட்ட நூல்கள் நாடுகள் கடந்து விற்பனையாகின.

-பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

வெளிப்படைத் தன்மை வேண்டும்!

தினகரன், சசிகலா தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்திய செய்தி படித்தேன். இதற்கு அரசியல் பிரமுகர்கள் ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனைகள் பற்றி பாஜகவைச் சேர்ந்த தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவும் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வருமானவரித் துறைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள். கட்சிக்காரர்கள் என்றாலும் இருவரும் அரசுப் பொறுப்பில் இல்லாதபோது அரசுத் துறைக்குச் சார்பாக அதன் செய்தித் தொடர்பாளர்கள் போல பேசுவது நியாயமா? இந்தச் சோதனைகள் எல்லாம் நிறைவுற்ற பிறகு வருமானவரித் துறை விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். அதுவரை ஒவ்வொரு நாளும் ஒரு இடைக்கால செய்திக்குறிப்பு ஆதாரபூர்வமாக வெளியிட வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையில்லை என்றால், வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.

-ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

காலாவதியான பேருந்துகள்

காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம் என்ற செய்தியை வாசித்தபோது, மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. காலாவதியான பேருந்துகளை மாற்றி, புதுப் பேருந்துகளை இயக்க, அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும். பழைய பேருந்துகளை இயக்குவதால் எரிபொருள் விரயம் ஏற்படுவதுடன், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது. பொதுப் போக்குவரத்தின் நிதிநிலையை மேம்படுத்த, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கொண்ட குழுவை நியமிக்கலாம். இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பயனுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். அவர்கள் வழங்கும் பயனுள்ள ஆலோசனைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலம்தான் பொதுப் போக்குவரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையும் அபிமானமும் ஏற்படும்.

-அலர்மேல்மங்கை, சென்னை.

தவறுகளின் விளைவு

நவ.8-ல் வெளியான ‘புயல் இல்லை... வெள்ளம் இல்லை... வழக்கமான வடகிழக்கு பருவ மழைக்கே ஏன் மிதக்கிறது சென்னை?' என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன். “நகர வடிவமைப்பைப் பார்க்க வேண்டுமானால் மதுரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்று அன்றைய முதல்வர் காமராஜர் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலை மிதக்க வைத்துவிட்டோம் நாம். சென்னை வெள்ளம் என்பது, திடீரென ஒரு நாளில் நடந்ததல்ல. நமது தொடர்ச்சியான தவறுகளின் விளைவு இது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் உணர வேண்டும். மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அனைவரும் இணைந்து பணியாற்றினால்தான் தீர்வு கிடைக்கும்!

-க.துள்ளுக்குட்டி, திருவில்லிபுத்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்