ஊடகச் சுதந்திரம்: உண்மைக்கு வலுவூட்டிய உச்ச நீதிமன்றம்!

By செய்திப்பிரிவு

ஊடகங்கள் அரசை விமர்சிப்பது தேசவிரோதம் அல்ல எனும் உறுதியான தீர்ப்பை வழங்கியதன் மூலம், ஜனநாயகத்துக்கு ஊடகச் சுதந்திரம் அவசியம் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘மீடியாஒன்’ எனும் மலையாளச் செய்தி அலைவரிசைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிரான வழக்கில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கேபிள் டிவி விதிமுறைகளின்கீழ், மீடியாஒன் சேனல், தனது செயற்கைக்கோள் ஒளிபரப்பை அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதைப் புதுப்பிப்பதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த அலைவரிசை நிறுவனத்தின் பங்குதாரர்கள், தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி எனும் அமைப்பின் ஆதரவாளர்கள் என உளவுத் துறையிலிருந்து கிடைத்த தகவல்கள்தான் இந்தத் தடைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த செய்திகளை இந்த அலைவரிசை ஒளிபரப்பிவந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்தத் தடைக்குக் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்த தகவல்களைக் கேரள உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதியும், டிவிஷன் அமர்வும் அப்படியே ஏற்றுக்கொண்டது கவனிக்கத்தக்கது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை இந்த அலைவரிசை நிறுவனம் அணுகியது.

பொதுவாகவே, முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தகவல்கள், குற்றம்சாட்டப்பட்டவரின் பார்வைக்கு வராமலேயே போய்விடும். அதைத் தாக்கல் செய்யும் தரப்புக்கே (பெரும்பாலும் அரசுத் தரப்பு) சாதகமாகத் தீர்ப்பும் அமைந்துவிடும்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு, தமது தீர்ப்பில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. முத்திரையிடப்பட்ட உறையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவல்களைக் கேரள உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்திருக்கிறது.

ஊடகச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடு, நாட்டின் குடிமக்களையும் அதேபோல் மெளனம் காக்குமாறு நிர்ப்பந்திக்கிறது. இதைச் சுட்டிக்காட்டியிருக்கும் நீதிபதிகள் ‘ஒரு ஜனநாயகக் குடியரசின் உறுதியான செயல்பாட்டுக்கு, சுதந்திரமான ஊடகம் மிக அவசியமானது’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதேபோல், தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் ஊடகங்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமானது, ஊடகங்கள் அரசை ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதைப் பிரதிபலிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

கருத்துச் சுதந்திரத்தையும் ஊடகச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையிலான இந்தத் தீர்ப்பு பரவலான வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. எந்தச் சூழலிலும், ஊடகம், நீதித் துறை இரண்டும் உண்மையின் பக்கம், மக்களின் பக்கம் நின்றாக வேண்டும். அரசு குறித்த அவதூறுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது சரிதான்; அதேசமயம், அரசின் செயல்பாடுகள் குறித்த ஆக்கபூர்வ விமர்சனங்களும் அவசியம்.

உண்மையை மக்கள் முன் வைப்பதுதான் ஊடகத்தின் கடமை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அந்த உண்மை, அரசியல் சாய்வற்றதாக, உள்நோக்கமற்றதாக, நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காததாகவும் அமைய வேண்டும். ஜனநாயகத்தை அதுதான் என்றென்றைக்குமாகக் காக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்