நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கு: முன்மாதிரி தீர்ப்பு!

By செய்திப்பிரிவு

நிலக்கரி வெட்டியெடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது தொடர்பான வழக்கில், முன் மாதிரியான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

'1993 முதல் நிலக்கரி வெட்டியெடுக்க அனுமதி தர கையாளப்பட்ட நடைமுறைகள் சட்ட விரோதமானவை, விருப்ப அதிகாரத்தின் அடிப்படையிலானவை’ என்று 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பையொட்டி நிலக்கரித் துறையில் அப்போது செயலாளராகப் பணியாற்றிய எச்.சி.குப்தா உட்பட மூன்று அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் இப்போதுதான் முதல் முறையாக அரசு அதிகாரிகள் குற்றச் செயல்களுக்கு ‘நேரடிப் பொறுப்பாக்கப்பட்டு’ தண்டிக்கப்படுகின்றனர். இதற்கு முன்னர் நடந்த இரண்டு வழக்குகளிலும் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், தண்டிக்கப்பட்டவர்கள் தனியார் நிறுவன அதிகாரிகள் மட்டுமே.

நிலக்கரி ஒதுக்கீடுகளைப் பரிந்துரைப்பதற்கான மத்திய அரசின் தேர்வுக் குழுத் தலைவராகச் செயல்பட்டவர் எச்.சி.குப்தா. இந்தக் குழு பல்லாண்டுகளாக முறையான வழிகாட்டு நெறிகளோ, விதிமுறைகளோ, வெளிப்படைத்தன்மையோ இல்லாமல் செயல்பட்டது. உச்ச நீதிமன்றம்தான் தலையிட்டு இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ‘கமல் ஸ்பாஞ்ச் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்’ நிறுவனத்துக்காகத் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக குப்தா மீதும் வேறு இரு அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

‘தேர்வுக் குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை’ என்ற ஏற்பாடு, தகுதி இல்லாதவர்கள்கூட மனுச் செய்யலாம் என்பதற்காகத்தான் என்று புரிகிறது. இப்படியொரு ஏற்பாட்டை அரசு அதிகாரிகள் தங்களுடைய விருப்பத்துக்கேற்ப தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க முடிந்ததா என்று தெரியவில்லை. தகுதியில்லாத நிறுவனம் தாக்கல்செய்த, முழுதாக நிரப்பப்படாத ஒரு விண்ணப்பத்தை நிலக்கரித் துறை அதிகாரிகள் வேண்டுமென்றே தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்கள் என்ற முடிவுக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் வந்திருக்கிறார். மனுக்களைப் படித்துத் தேர்வுசெய்யாமல், எல்லா மனுக்களையும், எந்தவிதச் சரிபார்ப்பும் இல்லாமல் ஏற்றுள்ளனர். அப்போதுதான் தங்களுடைய விருப்பப்படி சலுகை காட்ட முடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பானது, அரசின் நிர்வாக நடைமுறையைப் பலமாகக் கண்டிக்கிறது. இதற்குக் காரணம் கவனக்குறைவா, பொறுப்பின்மையா அல்லது வேண்டியவர்களுக்குச் சலுகை காட்ட நடந்த திட்டமிட்ட சதியா என்பதெல்லாம் இந்த வழக்கு மேல் விசாரணைக்கு வரும்போது நிச்சயம் ஆராயப்படும். இதுபோன்ற வழக்குகளில், குற்றம் அல்லது கடமை தவறுதல் ஆகியவற்றைத் தீர்மானிக்க நிலக்கரி ஒதுக்கீட்டு ஆணை வழக்கு இனி உரைகல்லாகப் பயன்படும்.

இந்த வழக்கு வேறு இரு முக்கிய கேள்விகளையும் எழுப்புகிறது. ஒரு துறைக்கு செயலர் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரியின் பொறுப்பும் நிர்வாகக் கடமையும் என்ன? அவர் அந்தத் துறையின் நிர்வாகத் தலைவர் மட்டுமல்ல, அரசின் கொள்கைகள் தொடர்பாக அமைச்சருக்கு ஆலோசனையும் கூற வேண்டியவர் அல்லவா என்பதே அந்தக் கேள்விகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE