சர்வ அதிகாரக் குவிப்பு நல்ல அறிகுறியல்ல!

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 1967-ல் காங்கிரஸ் தோற்று தி.மு.க. அரசு பதவிக்கு வந்த சில நாட்களில், “புதிய அரசைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று காமராஜரிடம் கேட்டபோது, “ஆறு மாதம் போகட்டும்; பேசலாம்” என்றாராம். அரசியல் பெருந்தன்மை மட்டுமல்ல இது. ஒரு புதிய அரசாங்கத்தின் நிர்வாகிகள் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த அவகாசத்தையும் அதற்குள் நடக்கும் தடுமாற்றப் பிழைகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்காகவே எல்லா விஷயங்களையும் அப்படியே மௌனமாகப் பார்த்து அனுமதித்துவிட முடியாதல்லவா?

நிர்வாகத்தை ஸ்தம்பிக்கவைத்திருந்த மன்மோகன் சிங் ஆட்சிக்குப் பிறகு, வேகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஆட்சி நிச்சயம் மக்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. அதேசமயம், மத்திய அரசின் சர்வ இயக்கங்களும் பிரதமர் அலுவலகத்தை மட்டுமே சுற்றியிருக்கும் வகையில், மோடி மேற்கொள்ளும் மாற்றங்கள் நல்ல அறிகுறியாகப் படவில்லை.

முன்னதாக, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைச்சரின் கீழ் அவர் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளையும் உள்ளடக்கி அமைச்சரவையை அமைத்தார். இந்திரா காந்தியும்கூட இப்படிச் செய்தார். அது ஓரளவுக்குப் பலனையும் தந்தது. அடுத்து, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு முறையை மோடி ஒழித்தார். வாஜ்பாய் காலத்தில் கொண்டுவரப்பட்டு, மன்மோகன் ஆட்சியிலும் நீடித்த முறை இது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும், கூட்டணிக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் அரசின் முக்கியமான முடிவுகளை மேற்பார்வையிடும் அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழுக்களைக் கலைப்பது முடிவுகளை விரைந்து எடுக்க உதவும் என்றது பிரதமர் அலுவலகம். இப்போது, எந்தப் பிரதமரும் மேற்கொள்ளாத ஒரு நடைமுறையைத் தொடங்கியிருக்கிறார் மோடி. அதாவது, ஒரு துறையின் அமைச்சர் இல்லாமல் அமைச்சரவைச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தும் நடைமுறை.

தனிநபர் சாகச உணர்வு அல்ல; கூட்டுத் தலைமை உணர்வும் அணிச் செயல்பாடுமே ஒரு பெரிய அமைப்பில், நீடித்த சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்பது திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்ட மேலாண்மை மந்திரம். மோடி முழுச் சுதந்திரத்துடனேயே தன்னுடைய அமைச்சரவைச் சகாக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எனில், அவர்கள் மீது முழு நம்பிக்கை வைப்பது அவசியம் இல்லையா? துறையின் தற்போதைய நிலை, புதிய இலக்கு, அதற்கான தேவைகள் என ஒவ்வொன்றையும் அந்தந்தத் துறையின் அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டே விவாதிப்பதுதானே சரியான நடைமுறை?

ஜனநாயகத்தில் அமைச்சர்கள்தான் அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான பாலம். அதிகாரிகளைப் பிரதமர் நேரடியாகச் சந்தித்து ஆலோசனை கலக்கத் தொடங்கினால், நாளடைவில் அது அமைச்சர்களை அதிகாரிகள் அலட்சியம் செய்யவும், அவர்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்படவும் வழிவகுக்காதா? மோடி இன்று எதை நினைத்து இந்த நடைமுறையைத் தொடங்குகிறாரோ தெரியவில்லை; ஆனால், அது நல்லதல்ல என்பது மட்டும் நிச்சயம்!​

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE