பாகிஸ்தான்: மக்களாட்சி நிலைபெறட்டும்!

By செய்திப்பிரிவு

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் நிலவிவந்த அரசியல் குழப்ப நிலை முடிவுக்குவந்திருக்கிறது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 174 வாக்குகளைப் பெற்று ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரிந்துவரும் பொருளாதாரம், அதிகரித்துவரும் கடன்கள், குறைந்துவரும் அந்நியச் செலாவணி கையிருப்பு என்று ஏகப்பட்ட சவால்களை பாகிஸ்தானின் புதிய பிரதமர் சந்திக்க வேண்டியிருக்கிறது. எனினும், அவற்றையெல்லாம் தாண்டி, இந்த ஆட்சி மாற்றத்தின் அரசமைப்பு முக்கியத்துவமே உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவருகிறது.

இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்தத் தயாரானார். இதற்கிடையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு, அந்நாட்டில் நாடாளுமன்ற மக்களாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, அரசமைப்புக்கு அப்பாற்பட்ட சர்வாதிகாரியாகச் செயல்பட விரும்பிய இம்ரான் கானின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. ஒரு மக்களாட்சி நாட்டில், நாடாளுமன்ற முறையின் மரபார்ந்த நெறிகளைப் பின்பற்றச் செய்வதில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் வகிக்கக்கூடிய பங்கின் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து இம்ரான் கானின் ஆட்சிக்காலம் வரையில், மொத்தம் 23 முறை பிரதமர்கள் தங்களது ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பே பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அரசதிகாரத்தை ராணுவமே கைப்பற்றிக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு அபரிமிதமாகவே தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிரதமருக்குப் பதிலாக, பெரும்பான்மையைப் பெற்ற மற்றொருவர் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் என்பதே அங்குள்ள மக்களாட்சி நடைமுறையில் ஆரோக்கியமான போக்கு நிலவுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து, பதவியை இழந்துள்ள முதல் பிரதமர் இம்ரான் கான்தான். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் வழியாக அத்தீர்மானத்தை நிராகரிக்கவும், குடியரசுத் தலைவர் வாயிலாக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் இம்ரான் கான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களாட்சி நெறிகளுக்கு முரணானவை. எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்துத் தொடர்ந்த வழக்கில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தற்போதைய நாடாளுமன்றத்தின் கால அளவு ஆகஸ்ட் 2023 வரையில் தொடரவிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்க நேர்ந்தமைக்கு அந்நிய நாட்டின் சதியே காரணம் என்று இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். இத்தகைய தேசபக்திப் பிரச்சாரங்கள் அடுத்துவரும் தேர்தலில் அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அதுவரை பாகிஸ்தானில் மக்களாட்சிதான் நிலவப்போகிறது என்பது உலகம் முழுவதும் உள்ள, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலான செய்தி. சட்டத்தின் ஆட்சியும் சுதந்திரமான நீதித் துறையுமே ஜனநாயகத்தின் காவல் அரண் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்