உக்ரைன்மீது ரஷ்யா போரைத் தொடங்கி 40 நாட்கள் கடந்துவிட்டன. ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் நீண்ட காலமாக நடந்துவரும் அதிகாரப் போட்டியில் இப்போது உக்ரைன் பலியாகியிருக்கிறது. ராணுவத் தளங்களை மையமிட்டுத் தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா, இப்போது குடியிருப்பு வளாகங்களின் மீதும் குண்டுகளை வீசிவருகிறது. இந்த யுத்தத்தை முன்னின்று நடத்துவது ரஷ்ய, உக்ரைன் நாடுகளின் தலைவர்களே என்றபோதும் பலியாவதும் பாதிக்கப்படுவதும் அப்பாவிப் பொதுமக்கள்தான்.
போர் தொடுக்கும் நாடுகள் எதிரி நாடுகளின் அரசுக் கட்டிடங்கள்மீதும் ராணுவத் தளங்கள்மீதும் தாக்குதல் நடத்துவதைப் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதுகின்றன. ஆனால், அத்தாக்குதல்கள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் நடத்தப்படுவது நியாயப்படுத்த முடியாதது. நவீன அரசு முறை உருவாவதற்கு முந்தைய முடியாட்சிக் காலத்திலேயே பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரையும் விலங்குகளையும் தவிர்த்தே போர்த் தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும் என்று மரபார்ந்த வழக்கத்தை உலகம் கடைப்பிடித்துவந்திருக்கிறது.
நாகரிக வளர்ச்சி பெற்றுவிட்டதாகப் பெருமை கொள்ளும் இக்காலத்தில் மரபார்ந்த அந்த மனிதநேய நெறியைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம். இனிவரும் காலத்திலாவது, போர்த் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதி என்று குடியிருப்புப் பகுதிகள் அனைத்தையும் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளடக்க வேண்டும். சர்வதேச உடன்படிக்கைகளின் வாயிலாக இந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
உக்ரைன்மீது நடத்தப்பட்டுவரும் குண்டுவீச்சுத் தாக்குதலில் தாங்கள் இறக்க நேர்ந்தாலும் தங்களது குழந்தைகள் தனித்துவிடப்படக் கூடாது என்பதற்காக குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரங்களையும் தொலைபேசி எண்களையும் பெற்றோர்கள் எழுதிவைத்துள்ள ஒளிப்படங்கள் இணையதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டுவருகின்றன. உலகத்தின் மனசாட்சியை இந்தப் படங்கள் உலுக்குகின்றன.
வியட்நாம் யுத்தத்தின்போது வீசப்பட்ட ரசாயனக் குண்டுகளின் கதிர்வீச்சுகளைத் தாங்க முடியாமல் குழந்தைகள் அழுதபடி சாலையில் ஓடி வரும் ஒளிப்படம் அந்த யுத்தத்தையே முடித்துவைக்கக் காரணமானது. தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக அன்று அமெரிக்காவும் யுத்தத்தில் பங்கேற்றது. எனினும், அந்த ஒளிப்படம் ஏற்படுத்திய தாக்கம் அமெரிக்க மக்களை ஆழ்ந்த குற்றவுணர்வுக்கு ஆளாக்கி, அமைதிக்காகக் குரல்கொடுக்க வைத்தது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டாலும்கூட இன்று உக்ரைனில் நடந்துகொண்டிருக்கும் தாக்குதலுக்குப் பின்னணியும் வல்லாதிக்கங்களுக்கு இடையிலான போட்டிதான்.
உலகம் இன்னும் தனது மனசாட்சியை இழந்துவிடவில்லை. போர்ச்சூழலில் குழந்தைகள் எதிர்கொண்டிருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டேனும் இந்தப் போர் முடிவுக்கு வந்தாக வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையால் அரசியல்ரீதியில் இந்தப் போரை முடித்துவைக்க இதுவரையிலும் இயலவில்லை. இந்நிலையில் ‘கன்சிலியேஷன் ரிசோர்சஸ்’, ‘இனிஷேடிவ்ஸ் ஆஃப் சேஞ்ச்’, ‘இன்டர்நேஷனல் க்ரைசிஸ் குரூப்’, ‘நான்வயலன்ட் பீஸ் ஃபோர்ஸ்', ‘யுஎன்ஓஒய் பீஸ் பில்டர்ஸ்’ போன்று சர்வதேச அளவில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் அமைப்புகளேனும் மனிதநேய அடிப்படையில் முன்வந்து பேசி, உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago