வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகளை வளர்த்தெடுக்க வேண்டும்!

By செய்திப்பிரிவு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர்த் தாக்குதல்களின் காரணமாக வேளாண் விளைபொருட்களுக்கான உலகளாவிய சந்தை தேக்கநிலையை எட்டியுள்ளது. ரஷ்யாவின் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் இதற்கு முக்கியக் காரணம். இந்நிலையில், இந்தியாவின் வேளாண் விளைபொருட்களுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை வளர்த்தெடுப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இவ்விஷயத்தில், மத்திய அரசும் மாநில அரசுகளும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, கோதுமை, கடுகு, சோளம், பார்லி போன்றவற்றைக் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவில் இந்தியாவால் ஏற்றுமதிசெய்ய முடியும்.

கோதுமையைப் பொறுத்தவரையில், இந்த நிதியாண்டில் ஏற்கெனவே இதற்கு முன்பு எப்போதும் இல்லாதவகையில் அதிக அளவு ஏற்றுமதியாகியுள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் ஏற்றுமதியான கோதுமையின் அளவு 20.86 லட்சம் டன்கள். ஆனால், 2021-22-ல் ஜனவரி மாதத்துக்குள்ளாகவே 60.20 லட்சம் டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது. பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஏற்றுமதி அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2019-20-ம் நிதியாண்டில் பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதி 50.36 லட்சம் டன்கள். ஆனால், 2020-21-ம் நிதியாண்டில் அது 130.88 லட்சம் டன்களாக உயர்ந்தது; நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்துக்குள்ளாக, 139.50 லட்சம் டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது. அரிசியின் ஏற்றுமதி அளவு அதிகரித்ததற்கான காரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட வறட்சியாகும்.

உலகளவிலான கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரைனும் வகிக்கும் பங்கு சுமார் 28%. இது போலவே மக்காச்சோள ஏற்றுமதியில் இந்நாடுகளின் பங்களிப்பு 19%, பார்லி ஏற்றுமதியில் 30%, சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் அதிகபட்சமாக 78% ஆகும். இவையெல்லாம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பான மதிப்பீடுகளாகும். போர் தொடங்கிய பிறகு, கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. காஸ்பியன் கடல் வழியாகச் செல்லும் ரஷ்ய சரக்குக் கப்பல்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதிசெய்வதில் முதன்மை நாடுகளாக விளங்கும் ரஷ்யா, உக்ரைன் இரண்டுமே தங்களது வழக்கமான ஏற்றுமதி அளவை எட்ட முடியாத நிலையில், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை இந்தியாவால் சிறிய அளவிலேனும் நிரப்ப இயலும்.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் கடுகு, பார்லி ஆகியவற்றின் சாகுபடி பெருமளவில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரித்துள்ளது. நாட்டின் மக்காச்சோள உற்பத்தியில் பிஹார் 25% வகிக்கிறது. எனவே, இம்மாநிலங்களுக்குப் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவது எளிதாக அமையும். தமிழ்நாட்டில் கரிசல் மட்டுமின்றி எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்யக்கூடிய பயிராகப் பரிந்துரைக்கப்படும் சூரியகாந்தியின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை உள்ளூர் உற்பத்தியால் ஈடுகட்ட முயலலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்