மாற்று எரிபொருளுக்கான பசுமை ஹைட்ரஜன் கொள்கை

By செய்திப்பிரிவு

சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சவாலுடன் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலியல் பொறுப்பையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மாற்று எரிபொருளாகப் பசுமை ஹைட்ரஜனை உற்பத்திசெய்யும் மின்னுற்பத்தி ஆலைகளை வளர்த்தெடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

இந்த ஆலைகளைத் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் எளிதில் பெறும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலைகளுக்குத் தேவையான மின்வழித் தட இணைப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று மின்சக்தி அமைச்சகமும் தெரிவித்துள்ளது. ஜூலை 2025-க்குள் தொடங்கப்படவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்வழித்தடங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அசாமில் இயங்கவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் ஆலைகள், தங்களுக்குத் தேவைப்படும் மின்சக்தியை ராஜஸ்தானில் நிறுவியுள்ள தங்களது சூரிய மின்சக்தி ஆலையிலிருந்து கொண்டுசெல்வது எளிதாகும்.

2030-க்குள் ஆண்டொன்றுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்திசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு. நீரில் மின்விளைவுகளை உருவாக்கி, ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் தனித்தனியாகப் பிரித்தெடுப்பதுதான் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புக்கான தொழில்நுட்பம். புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களில் ஒன்றான பசுமை ஹைட்ரஜன், சேமிக்கவும் நீண்ட தொலைவுக்கு எடுத்துச்செல்லவும் எளிதானது. ஆலைகளின் மின்தேவைக்கு மட்டுமின்றி, வாகனங்களுக்கான எரிபொருளாகவும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதால், இந்தியாவில் ஹைட்ரஜன் உற்பத்தியை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் தேவையை எளிதில் நிறைவுசெய்ய முடியும் என்பதோடு, எதிர்வரும் காலத்தில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து பசுமை ஹைட்ரஜனை இறக்குமதி செய்யும் முக்கிய இறக்குமதி நாடுகளாக இருக்கும். அதையும் உத்தேசித்து, ஏற்றுமதிக்கு முன்பாகப் பசுமை ஹைட்ரஜனையும் பசுமை அம்மோனியாவையும் பாதுகாத்து வைப்பதற்கு ஏதுவாகத் துறைமுக நிர்வாகங்கள் குறைவான கட்டணத்தில் நிலங்களை ஒதுக்கித்தரும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜனையும் அம்மோனியாவையும் முக்கிய மூலப் பொருட்களாகப் பயன்படுத்திவரும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு, வேதியுரங்கள் தயாரிப்பு மற்றும் எஃகு உருக்காலைகள் தங்களது தேவைக்காகப் பசுமை ஹைட்ரஜனைத் தயாரித்துக்கொள்வதற்கு இக்கொள்கை உடனடியாக உதவும். எனினும், பழுப்பு ஹைட்ரஜனைக் காட்டிலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு அதிகச் செலவாவதால் அதைத் தயாரிக்கும் வேதியுரத் தொழிற்சாலைகள் அரசிடமிருந்து மானிய உதவிகளையும் எதிர்பார்க்கின்றன.

பிப்ரவரி மத்தியிலேயே பசுமை ஹைட்ரஜன் கொள்கை அறிவிக்கப்பட்டுவிட்டாலும் உக்ரைன் போருக்குப் பிறகு உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது இக்கொள்கையைக் குறித்து தீவிரமாக விவாதிக்கவைத்துள்ளது. இதற்கிடையில், அண்மையில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா நாடுகளுக்கிடையிலான குழுவின் அறிக்கையில், இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள பருவநிலை எச்சரிக்கைகள், இவ்விவாதங்களை இன்னும் கூர்மைப்படுத்தியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்